முரசொலி தலையங்கம்

வெறுங்கையால் முழம்போடும் ஒன்றிய பா.ஜ.க அரசு.. முதல்வரின் கோரிக்கைகளுக்கு பதில் சொல்லாமல் நழுவிய பிரதமர்!

வெறுங்கையால் முழம் போடும் ஒன்றிய பா.ஜ.க அரசால், மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகரித்து வருவதையும் முதலமைச்சர் தனது உரையின் வாயிலாக சுட்டிக்காட்டினார்.

வெறுங்கையால் முழம்போடும் ஒன்றிய பா.ஜ.க அரசு.. முதல்வரின் கோரிக்கைகளுக்கு  பதில் சொல்லாமல் நழுவிய பிரதமர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிரதமர் மோடியின் சென்னைப் பயணத்தின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த நிலையில் பிரதமர் எதற்கும் பதில் சொல்லாமல் நழுவிவிட்டதாக ‘தீக்கதிர்’ நாளேடு 28.05.2022 தேதியிட்ட இதழில் “பிரதமர் பயணமும் பஞ்சு மிட்டாயும்!” என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அது வருமாறு:-

பிரதமர் மோடியின் சென்னைப் பயணம், தமிழக மக்களுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு வகிக்கும் என்றெல்லாம் ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்டது. ஆனால், தமிழக முதல்வரின் ஐந்து நிமிடப் பேச்சு, ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கு, கடந்த காலத்தில் நிகழ்ந்த, தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் கசப்பான அனுபவங்களையும் புட்டு புட்டு வைத்தது.

“நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் பங்கு மட்டுமே 9.22 விழுக்காடு. அதேபோல், ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. ஆனாலும், ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு 1.2 விழுக்காடு மட்டுமே கிள்ளிக் கொடுக்கிறது. இது போதுமானது அல்ல என்ற அவரது வார்த்தைகள் மோடி அரசின் லட்சணத்திற்கு சாட்சியம்.

ஒன்றிய அரசோடு இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் மாநில அரசின் பங்கு மிக முக்கியமானது. நெடுஞ்சாலைத்துறை நமது நாட்டிலேயே அதிக மூலதன செலவு செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தற்போது கூட 44,762 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் இதுவரைக்கும் மாநில அரசு செலவு செய்த தொகை ரூ.18,220 கோடியாகும்.

மதுரை - தேனி அகல ரயில் பாதை, தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில் என பிரதமர் துவக்கி வைத்த திட்டத்தில் ஒன்றிய அரசைக் காட்டிலும் தமிழகத்தின் பங்கு பல மடங்கு அதிகம் என்பதும், தற்போது 29 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அடிக்கல் நாட்டப்பட்ட 5 திட்டங்களில் தமிழ்நாட்டின் பங்க ளிப்பே முதன்மையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களைத் தொடங்கும் போது, ஒன்றிய தனது பங்கை அதிகமாகக் கொடுத்தாலும் காலப்போக்கில் பங்குத் தொகையை அடியோடு குறைத்து விடுகிறது. இதனால் மாநில அரசே முழுத் தொகையும் செலவு செய்து பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது.

இது மட்டுமல்ல, பயனாளிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தும் திட்டங்களில் அப்பாவி பயனாளிகள் செலுத்த முடியாத சூழல் ஏற்படும் பொழுது ஒன்றிய அரசு கையை விரித்து விடுகிறது. அந்த மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிற மாநில அரசுதான் அத்தகைய பயனாளிகளின் பங்களிப்பையும் சேர்த்து கொடுத்து வருகிறது. இப்படி வெறுங்கையால் முழம் போடும் ஒன்றிய பா.ஜ.க அரசால், மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகரித்து வருவதையும் முதலமைச்சர் தனது உரையின் வாயிலாக சுட்டிக்காட்டினார்.

அதேபோல், கடந்த மே 15ஆம் தேதி வரை தமிழகத்துக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ.14,006 கோடியை விரைந்து வழங்க வேண்டும்; ஜி.எஸ்.டி இழப்பீட்டு காலத்தை ஜூன் 2022-க்கு பின்னரும் குறைந்தபட்சம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தரவேண்டும் என்றும் முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள் உட்பட எதற்கும் பதில் சொல்லாமல் நழுவி விட்டார் பிரதமர்" எனத் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories