முரசொலி தலையங்கம்

பேரறிவாளன் விடுதலை: சட்டமன்றத்தையே ஏமாற்றிய பழனிசாமி; அதிமுகவின் நாடகங்களை தோலுரித்த முரசொலி தலையங்கம்!

பேரறிவாளன் வழக்கு என்பது அவரது விடுதலையை மட்டுமில்லாமல், மாநில சுயாட்சிக் கொள்கைக்கும் அடிப்படையாக அமைந்திருப்பதை முதலமைச்சர் சுட்டிக் காட்டி இருந்தார்கள்.

பேரறிவாளன் விடுதலை: சட்டமன்றத்தையே ஏமாற்றிய பழனிசாமி; அதிமுகவின் நாடகங்களை தோலுரித்த முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெரிய தீர்ப்பைப் பெற்றுத் தந்த பேரறிவாளன் என்ற தலைப்பில் முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

"பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். திராவிட முன்னேற்றக் கழக அரசு வைத்த வாதங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

"தமிழ்நாடு அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எழுவர் விடுதலையில் கழக அரசு முனைப்புடன் செயல்படும் என்பது தி.மு.க. தேர்தல் அறிக்கையின் 494 ஆவது வாக்குறுதி ஆகும். அதனை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். மனிதாபிமான - மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே நிலையில் - மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிகக் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாநில அரசின் அரசியல், கொள்கை முடிவுகளில் தனது அதிகார எல்லைகளைத் தாண்டி ஆளுநர்கள் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் மேலும் உறுதி ஆகி இருக்கிறது. இது இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்." - என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்கள்.

பெரிய தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளார் பேரறிவாளன். அதாவது பேரறிவாளன் வழக்கு என்பது அவரது விடுதலையை மட்டுமில்லாமல், மாநில சுயாட்சிக் கொள்கைக்கும் அடிப்படையாக அமைந்திருப்பதை முதலமைச்சர் சுட்டிக் காட்டி இருந்தார்கள். சந்தில் சிந்து பாடுவதைப் போல பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்கள்.

2018 ஆம் ஆண்டு அ.தி.மு.க. அமைச்சரவையானது எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியதை யாரும் மறுக்கவில்லை. தீர்மானம் போட்டால் மட்டும் போதுமா? அதனைச் செயல்பட வைக்க வேண்டாமா? அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் தர மறுத்த ஆளுநரை வலியுறுத்த அன்றைய அ.தி.மு.க. ஆட்சி தயங்கியது. பயந்தது. அப்போதும் தி.மு.க.தான் ஆளுநரை வலியுறுத்தி வந்தது. அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள்தான், ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தினார். ‘நாங்கள் தீர்மானம் போடத்தான் முடியும், அவரை சட்டையைப் பிடித்துக் கேட்கவா முடியும்?' என்று அன்றைய அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் பேட்டி அளித்தார். இப்படி நடந்து கொண்ட பழனிசாமி - பன்னீர்செல்வம் அண்ட் கோ இப்போது கிடைத்திருக்கும் இறுதித் தீர்ப்புக்குச் சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாக இருக்கிறது.

2021 சனவரி 25 ஆம் தேதி, இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டார் ஆளுநர். ஆனால் 29 ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்து, வலியுறுத்தியதாக நாடகம் ஆடியது அ.தி.மு.க.

பிப்ரவரி 4 ஆம் தேதி சட்டமன்றத்தில் பேசிய பழனிசாமி, "இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என நான் எதிர்பார்க்கிறேன்" என்றார்.

அதாவது, சட்டமன்றத்தையே ஏமாற்றினார் பழனிசாமி. அன்று மாலையே, ஆளுநரின் கை விரிப்புக் கடிதம் வந்துவிட்டது. மாலையில் ஆளுநரின் கடிதம் வெளியே வரப்போவது தெரிந்து முன்கூட்டியே இப்படி ஒரு அறிக்கையை பழனிசாமி வெளியிட்டார்.

பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க முடியாது என்று நீதிமன்றம் சென்று மனு தாக்கல் செய்த அரசுதான் பழனிசாமி அரசு. உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசின் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், பேரறிவாளனுக்கு விடுப்பு நீடிப்பு கூடாது என்று வாதிட்டார்.

இதே நாடகத்தைதான் ஜெயலலிதாவும் செய்தார். அவரது ஆட்சி காலத்தில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், பரோல் கேட்டு நளினி மனு தாக்கல் செய்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையைப் பார்க்க வேண்டும் என்று நளினி கோரிக்கை வைத்தார். அதனை மறுத்தவர்தான் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.

கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் நாள் தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசின் அமைச்சரவை கூடித் தான் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதை அப்போது எதிர்த்தவர் தான் ஜெயலலிதா.

26.4.2000 அன்று சட்டமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் தி.மு.க. அரசை விமர்சித்தார். "இதைப் பார்க்கும் போது இந்த தி.மு.க. அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ரகசிய உறவு இருக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது" என்றார்.

"விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை முதலமைச்சர் கருணாநிதிதான் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க முயற்சி செய்கிறார்" என்று குற்றம் சாட்டியவர்தான் (23.10.2008) ஜெயலலிதா.

நளினியின் தண்டனையைக் குறைத்தது சோனியா செய்த தவறு என்றும், நளினியை பிரியங்கா சந்தித்தது தவறு என்றும், நளினி ஏதோ உரிமைக்குப் போராடுவது போல வழக்கு போடுகிறார் என்றும், உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் இது நடக்காது என்றும் அறிக்கை விட்டவர்தான் ஜெயலலிதா.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அமர்வு தீர்ப்பளிப்பதற்கு முன்பு வரை இவர்களுக்கு எதிராக இருந்தவர்தான் ஜெயலலிதா. அவர்களை விடுதலை செய்யமாட்டேன் என்று சொல்லி வந்தவர் ஜெயலலிதா. இனிமேல் நீதிமன்றம் கேள்வி எழுப்பாது என்று தெரிந்த பிறகு தான் விடுதலைக்கு ஆதரவாளர் போல நாடகம் ஆடினார் ஜெயலலிதா.

இவர்களது விடுதலை குறித்து உரிய அரசு பரிசீலனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு பச்சைக் கொடி காட்டிய போது, விடுதலை செய்வதாகச் சொல்லிவிட்டு - அவசியமற்ற முறையில் ஒன்றிய அரசுக்கு ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்பியவர் தான் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அவர் அன்று ஒப்புதல் கேட்டதால் தான் இந்த வழக்கே ஒன்றிய அரசு - ஆளுநர் - குடியரசுத் தலைவர் என்று சுற்றிக் கொண்டே இருந்தது. அதாவது உச்ச நீதிமன்றம் வழங்கிய உரிமையை மீண்டும் கொண்டு போய் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தவர் ஜெயலலிதாவே.

அதாவது 2014இல் பெற்ற தீர்ப்பைக் குழப்பி - 2022 வரைக்கும் இழுத்தடிக்கக் காரணமானது அ.தி.மு.க.வின் செயல்பாடுகளே என்பது யாராலும் மறைக்க முடியாதவை! இவை அனைத்தும் பழனிசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!" இவ்வாறு முரசொலி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories