முரசொலி தலையங்கம்

“ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு - இந்த சாதனை சாதாரண விஷயம் அல்ல” : முரசொலி நாளேடு பாராட்டு!

பசிப்பிணி போக்கும் மருத்துவர்களான விவசாயிகளின் பிணியைத் தீர்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு - இந்த சாதனை சாதாரண விஷயம் அல்ல” : முரசொலி நாளேடு பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் - விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று சொன்னார் கலைஞர்! செய்தார் கலைஞர்! தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 7000 கோடி விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னார் கலைஞர்! செய்தார் கலைஞர்!

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் - காவிரி உரிமை காக்கப்படும் என்றார் கலைஞர்! காவிரி நடுவர் மன்றமும் காவிரி மேலாண்மை ஆணையமும் அமையக் காரணம் ஆனவர் கலைஞர்! தி.மு.க. ஆட்சி அமைந்ததும்- ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் என்றார் கலைஞர்! ஒரு ரூபாய்க்கு கொடுத்தார் கலைஞர்!

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் - நிலமற்ற ஏழை விவசாயத்தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குவேன் என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் நிலம் வழங்கப்பட்டது.

1 லட்சத்து 89 ஆயிரத்து, 719 ஏக்கர் நிலத்தை - 1 லட்சத்து 50 ஆயிரத்து 159 பேருக்கு வழங்கிய ஆட்சிதான் கழக ஆட்சி. இத்தகைய சாதனைவரலாற்றின் தொடர்ச்சி தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். சொன்னதைச் செய்து கொண்டு இருக்கிறார் முதலமைச்சர்.

செய்வதைத்தான் சொல்லிக் கொண்டும் இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். கடந்த செப்டம்பர் மாதத்தில் முதலமைச்சர் அவர்களால் ஒரு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்தான் அது. ஒரு லட்சம் மின் இணைப்புகளை வழங்கும் நிலைமையில் மின்வாரியம் இல்லை. அதன் மீது இருக்கும் கடனைச் சொன்னால் தலைசுற்றிக் கீழே விழ வேண்டியதுதான் உண்மையான நிலைமை. அத்தகைய சூழலிலும்தான் தொடங்கிய திட்டத்தை ஏழு மாதங்களுக்குள் இலக்கை எட்டி சாதனை படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

நேற்றைய தினம் ஒரு லட்சம் இணைப்புகள் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சமாவது இணைப்பைப் பெற்றுள்ள கண்ணுப்பிள்ளை என்ற விவசாயி பேசினார். “நான் மிகமிகச் சிறுவிவசாயி. ஒரு போகம் தான் விளைவித்து வந்தேன். முதலமைச்சர் அவர்கள் இந்த இலவச இணைப்பைக் கொடுத்ததன் மூலமாக இன்னும் இரண்டு போகத்தைக் கூடுதலாக விளைவிப்பேன். தமிழ்நாட்டுக்கே இது வரப்பிரசாதமான சாதனை” என்று சொன்னார். அதுதான் உண்மை. தஞ்சையில் இருந்து பேசிய விவசாயி ஒருவர், “எனக்கு 85 வயது. என் காலத்தில் என் நிலத்துக்கு மின் இணைப்பு வாங்க முடியுமா? விவசாயம் செய்ய முடியுமா? என்று ஏக்கத்தில் இருந்தேன். வாழும் காலத்தில் கிடைக்காது என்றுதான் நினைத்தேன். ஆனால் கிடைத்துவிட்டது. என்னால் இதனை நம்ப முடியவில்லை” என்றார்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் அவர்கள், “ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கலாம் - அதுவும் சில மாதங்களில் கொடுத்து நம் முடைய இலக்கை அடைந்துவிடலாம் என்று மின் துறை அமைச்சர் அவர்கள் சொன்ன போது - இந்த ஓராண்டு காலத்துக்குள் - ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு கொடுத்துவிட முடியுமா என்ற சந்தேகம் எனக்கே இருந்தது.

ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரையில் ஒரு டார்கெட் வைத்து பணியாற்றக் கூடியவர். அந்த டார்கெட்டை எப்படியும் முடித்துக் காட்டக் கூடியவர் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலமாக நிரூபித்து இருக்கிறார். 1,00,000 புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் என்னால் 23.09.2021 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. ஓராண்டு காலம் முடிவதற்கு முன்னால் ஒரு லட்சம் பேருக்கு மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் இணைப்பு என்பதால் 1 லட்சம் குடும்பம் அடையும் பயன் மட்டுமல்ல -அவர்களது வேளாண் உற்பத்தியால் இந்த மாநிலம் அடைய இருக்கும் பயனை அளவிட முடியாது. எனவே இந்த சாதனையையும் நாம் அளவிட முடியாத சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.'' என்று பேசி இருக்கிறார்கள். அத்தகைய மகத்தான சாதனைதான் இது!

அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் இருந்த இருண்ட நிலைமையை அதிகம் நினைவூட்டத் தேவையில்லை. டெல்டா மாவட்டங்களே கொந்தளித்துக் கிடந்தது. காவிரிக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. கஜா புயல் தாக்கி மூன்று ஆண்டுகள் ஆனபிறகும் நிவாரணம் தரவில்லை.

தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை. நெல்லுக்கு உரிய விலை கிடைக்க வில்லை. நெல் கொள்முதலை முழுமையாகச் செய்யவில்லை. கரும்புக்கு விலை இல்லை. கரும்பு நிலுவைத் தொகை பல ஆண்டுகளாக பாக்கி. கூட்டுறவுத் துறையில் தனிநபர் கடன் தருவது இல்லை. மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் ஆட்சியாகவும் அது இருந்தது.

போராடும் விவசாயிகளை புரோக்கர்கள் என்று கொச்சைப்படுத்தும் ஆட்சியாகவும் இருந்தது. இவ்வளவையும் பச்சைத் துண்டைப் போட்டுக் கொண்டு 'நானும் விவசாயி'தான் என்று சொல்லிக் கொண்டே செய்யும் ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. எல்லாவற்றிலும் மந்தமாக இருந்ததைப் போலவே மின் இணைப்பு கொடுப்பதிலும் மந்தமாக இருந்தார்கள்.

2010-2011 கால கட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 77,158 விவசாய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. கழக அரசின் சாதனைகளை கழக அரசுதான் முறியடிக்க வேண்டும் என்ற அளவில் இந்த ஆண்டு ஓராண்டில் ஒரு லட்சம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சி காலமான 2011 முதல் 2021 வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாய மின் இணைப்புகள் 2,21,579 மட்டுமே. அதாவது வருடத்திற்கு சராசரியாக 22,100 மின் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் இணைப்புகள் வழங்கவில்லை. மொத்தம் 4,52,777 விவசாய விண்ணப்பங்கள் பதிவு செய்து நிலுவையில் இருந்தன. இதில் நான்கில் ஒரு பங்கு மக்களின் குறைகளை ஒரே ஆண்டில் தீர்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“பசிப்பிணி போக்கும் மருத்துவர்கள்” என்று விவசாயிகளைக் குறிப்பிட்டார் முத்தமிழறிஞர் கலைஞர். பசிப்பிணி போக்கும் மருத்துவர்களின் பிணியைத் தீர்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். விவசாயிகள் உள்ளம் மகிழ்கிறது. மண் மணக்கத் தொடங்கி இருக்கிறது!

banner

Related Stories

Related Stories