முரசொலி தலையங்கம்

“நகைகளே இல்லாமலும்.. போலி நகைகளை வைத்தும் முறைகேடு”: அதிமுக ஆட்சியின் மோசடியை அம்பலப்படுத்தும் ‘முரசொலி’!

அதிமுக ஆட்சியின் போது, போலி நகைகளை வைத்து சிலர் கடன் பெற்றுள்ளார்கள். நகைகளே இல்லாமல் நகைகளை வைத்தது மாதிரி பொய் கணக்கு எழுதி உள்ளார்கள்.

“நகைகளே இல்லாமலும்.. போலி நகைகளை வைத்தும் முறைகேடு”: அதிமுக ஆட்சியின் மோசடியை அம்பலப்படுத்தும் ‘முரசொலி’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஐந்து பவுன் வரை நகைக்கடன் வைத்துள்ள பதிமூன்றரை லட்சம் பேருக்கு நகைக்கடனை ரத்து செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் கொடுத்த மிக முக்கியமான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை பரிசோதித்துப் பார்த்து - விசாரணை நடத்தி ரத்து செய்வோம் என்று சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்றதும் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான நகைக்கடன்கள் தரப்பட்டுள்ளன. அதில் உண்மையான பயன்பாட்டுக்காக பயன்படுத்தியவர்களை விட, அதில் உள்ள விதிமுறைகளை மீறி பயன்படுத்தியவர்கள்தான் அதிகம். இதில் ஏராளமான முறைகேடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரே ஆதார் எண் மூலமும், ஒரே குடும்பத்தினர் பல்வேறு கிளைகளிலும் நகைக்கடன் பெற்று மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.போலி நகைகளை வைத்து சிலர் கடன் பெற்றுள்ளார்கள். நகைகளே இல்லாமல் நகைகளை வைத்தது மாதிரி பொய் கணக்கு எழுதி உள்ளார்கள்.

தூத்துக்குடி குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் 500 நகை பொட்டலங்களில் 261- இல் நகைகள் இல்லை. அதன் மதிப்பு, ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய்.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழு இயக்குநர் கிருஷ்ணசாமி, 11 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்துள்ளார்.

குமரி மாவட்டம் குமாரக்குடியில் ஒரே ஆதார் எண்ணில், பலர், வெவ்வேறு தொலைபேசி எண்களை கொடுத்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

கீழ்குளத்தில், ஒரே நபர் 5 சவரன் அடிப்படையில் 625 நகைக் கடன்கள் மூலம், ஒன்றேகால் கோடி ரூபாயும், மற்றொருவர் 647 நகைக்கடன்கள் மூலம், ரூ.1.47 கோடியும் நகைக் கடன் பெற்றுள்ளார்.

திருப்பத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ஒரு சிலர் அவர்களுக்குரிய ஆதார் எண்ணை பயன்படுத்தி 538 நகை கடன்கள் மூலம் 5 பவுனுக்கு உட்பட்டு 3 ஆயிரத்து 508 கிராமுக்கு 74 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்கள்.

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் 2 ஆயிரத்து 808 கிராமுக்கு நகைகளை அடகு வைத்து 65 லட்சம் ரூபாய் நகை கடன் பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் பாப்பையாபுரம் மற்றும் சுந்தரலிங்கபுரம் ஆகிய 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ஒரே நபர் 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் மூலம் 70 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நகை அடமானம் வியாபாரம் செய்யும் ஒருவர் செங்கல்பட்டு நகர கூட்டுறவு வங்கியில் 25-க்கு மேற்பட்ட நகை கடன்கள் மூலம் 8 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். - இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ள நகைக் கடன் மோசடிகள்.

இவை சில உதாரணங்கள்தான். அதனால்தான் தகுதியின் அடிப்படையிலான உரிய பயனாளிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். நகைக்கடன் தொகையை முழுமையாகச் செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற நபர்கள், அவர்களது குடும்பத்தினர், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், அனைத்து அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், ரேசன் அட்டை எண்ணைத் தராதவர்கள், ஆதார் எண்ணைத் தராதவர்கள், எந்தப் பொருளும் வேண்டாத ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள், ஒன்று அல்லது அதிகமுறை நகைக் கடன்களை 40 கிராமுக்கு மேல் வைத்து பெற்றவர்கள் - என்று பிரிக்கப்பட்டார்கள்.

இவர்கள் நீங்கலாக அனைத்து ஏழை எளிய மக்களுக்குமான நகைக்கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தான் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் விரிவாக விளக்கமாக விளக்கி இருக்கிறார்.

ஒரே ஒரு ஆள் ரூ.7 கோடி அளவுக்கு 760 நகைக்கடன்கள் பெற்றுள்ளார் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் அதிர்ச்சியான தகவல் ஒன்றைச் சொல்லி இருக்கிறார்கள். நிறைய தனிநபர்கள், 100க்கும் மேற்பட்ட நகைக்கடன்களை பெற்றுளதாகவும் சொல்லி இருக்கிறார்.

எந்தச் சலுகையாக இருந்தாலும் அதனைப் பெற உரிய தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட வேண்டும். எந்த உரிமையாக இருந்தாலும் அந்த உரிமையைப் பெற தகுதி படைத்தவர்கள் மட்டுமே அதனைப் பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் நகைக் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி தகுதி படைத்தவர்களுக்கு மட்டுமே இத்தகைய கடன்கள் தரப்படவேண்டும் என்பதிலும் அரசு கவனமாக இருக்க வேண்டும்!

banner

Related Stories

Related Stories