முரசொலி தலையங்கம்

“நடிகை கங்கனா ரனாவத் இருக்கும் சூடு, சொரணை EPS - OPS இருந்திருந்தால் இப்படி பேசுவார்களா?”: முரசொலி சாடல்!

நடிகை கங்கனா ரணாவத் சொல்லியிருக்கிறார். அவருக்கு இருக்கும் சூடு, சொரணையில் கொஞ்சம்கூட பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இருந்திருந்தால் இப்படி எல்லாம் அறிக்கை விடுவார்களா?

“நடிகை கங்கனா ரனாவத் இருக்கும் சூடு, சொரணை EPS - OPS இருந்திருந்தால் இப்படி பேசுவார்களா?”: முரசொலி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மூன்று வேளாண் சட்டங்களையும் தலைகீழாக நின்று ஆதரித்தார்கள் அந்த இரண்டு மானஸ்தர்கள்!

இப்போது அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதையும் மண்ணில் உருண்டு ஆதரிக்கிறார்கள்! என்னே இவர்களது அடிமைத்தனம்!

சட்டங்களை திரும்பப் பெறக் கூடாது என்று நடிகை கங்கனா ரணாவத் சொல்லியிருக்கிறார். அவருக்கு இருக்கும் சூடு, சொரணையில் கொஞ்சம்கூட பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இருந்திருந்தால் இப்படி எல்லாம் அறிக்கை விடுவார்களா?

வேளாண் சட்டங்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கொண்டு வரப்பட்டபோது ஆதரித்த கட்சிதான் அ.தி.மு.க.!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தபோது - அதனை ஆதரிக்க முதுகெலும்பு இல்லாமல் வெளிநடப்புச் செய்த கட்சிதான் அ.தி.மு.க.!

இத்தகைய ஓட்டைகளை வைத்துக் கொண்ட ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார், மோடியின் முடிவை வரவேற்பதாக!

“இதன் மூலம் பிரதமரின் பெருந்தன்மையையும், விவசாயிகளின்பால் அவருக்கு உள்ள அக்கறையையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நண்பன் என்பதும் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது” என்று சொல்லி இருக்கிறார் பன்னீர்செல்வம்.

விவசாயிகளின் நண்பனாகத்தான் அந்தச் சட்டங்களையே பிரதமர் கொண்டு வந்தார் என்று சொன்னவரும், இதே பன்னீர்தான். விவசாயிகளின் நண்பனாக இதனைத் திரும்பப் பெற்றுள்ளார் என்று சொல்வதும் இதே பன்னீர்தான். பன்னீராவது லேசாகத்தான் தெளித்தார். பழனிசாமியோ மேட்டூர் அணையைப் போல டி.எம்.சி. தண்ணீராக அந்தச் சட்டத்தை ஆதரித்தார்.

பா.ஜ.க.வினரை விட இவர்தான் அதிகமாக குதித்தார். ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசியாக மாறினார். மூன்று சட்டத்தில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டார். பத்திரிக்கையாளர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு, ‘சொல்லுங்க, சொல்லுங்க' என்று விதண்டாவாதம் செய்தார். ‘நான் விவசாயி, அதனால் இதிலுள்ள நன்மைகள் எனக்குத்தான் தெரியும்' என்று கனைத்தார். ‘ஸ்டாலின் என்ன விவசாயியா?' என்று கேட்டார்!

“பழனிசாமி பேசுவதைப் பார்த்தால் அவர் அந்த மூன்று சட்டங்களையும் கரைத்துக் குடித்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, அவரை டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் அழைத்துச் சென்று பேச வைக்கலாம்” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லும் அளவுக்கு ‘முழு சந்திரமுகியாகவே' மாறினார் பழனிசாமி!

அவரே இப்போது, “வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற பிரதமருக்கு என் நன்றி” என்கிறார். எதற்காக நன்றி சொல்ல வேண்டும்? டெல்லிக்குச் சென்று நாடாளுமன்றத்துக்கு முன்னால் பழனிசாமி போராடி இருக்க வேண்டாமா? ‘எதற்காக அந்த நல்ல சட்டத்தை எடுத்தீர்கள்? விவசாயிகளுக்கு எதற்காக துரோகம் செய்தீர்கள்?' என்று கேள்வி எழுப்பி இருக்க வேண்டும் பழனிசாமி - மானஸ்தராக இருந்திருந்தால்!

“அத்தியாவசியப் பொருட்களுக்கான திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரை இந்தச் சட்டத்தின் மூலம் விளைபொருட்களுக்குத் தேவையில்லாத இருப்புக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை” எனவும் “இதனால், வியாபாரிகள், வர்த்தகர்கள், விவசாயிகள் ஆகிய மூன்று தரப்புக்குமே பலன் கிடைக்கும்” என்றும் பழனிசாமி கூறியிருந்தார். அந்தப் பலன் போகிறது என்றால், பழனிசாமி பதறி இருக்க வேண்டாமா? சட்டத்தைத் திரும்பப் பெறக் கூடாது என்று போராட வேண்டாமா? அப்படிச் செய்திருந்தால்தானே அவர் போட்ட விவசாயி வேடத்துக்கு கொஞ்சமாவது பொருத்தமாக இருந்திருக்கும்!

“விவசாயம் என்பது மாநிலப் பட்டியலில் இருந்தாலும் உணவுப் பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் என்பது மத்தியப் பட்டியலில்தான் இருக்கிறது” என்றும், “ஆகவே இந்தச் சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு” என்றும் பழனிசாமி, அரசியல் சட்ட மேதையாகவே மாறிப் பேசினார்.

ஒன்றிய அரசு எதற்காக அத்தகைய அதிகாரத்தை விட்டுத் தர வேண்டும்? விட்டுத் தரக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் போய் பழனிசாமி வழக்குப் போடலாமே? அப்படிச் செய்திருந்தால் அவர் போட்ட விவசாயி வேடத்துக்கு கொஞ்சமாவது பொருத்தமாக இருந்திருக்கும்!

இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை கிடைக்குமென்பதால்தான் விவசாயியாகிய நான் இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வில்லையென்றும், இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலை வேறு; பஞ்சாபின் நிலை வேறு என்றும் பழனிசாமி விளக்கமளித்து இருந்தார் அப்போது! அது என்ன தமிழ்நாட்டின் நிலைமை வேறு, பஞ்சாப் நிலைமை வேறு! பஞ்சாப் விவசாயிகள் நிலத்தில் பயிரிடுகிறார்கள்!

தமிழ்நாட்டு விவசாயிகள் வானத்தில் பயிரிடுகிறார்களா? ‘நானும் விவசாயிதான்' என்று சொல்லிக் கொண்டதைப் போல மோசடி எதுவும் இருக்க முடியாது. 2019 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் சார்பில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவி தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த ஒவ்வொரு விவசாயிக்கும் 2 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ‘பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம்’ என்று பெயர். 3 முதல் 5 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்து வரும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச பொருளாதார உதவியாக இதனைத் தரப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்தது.

இதில் மோசடி செய்த ஆட்சிதான் கடந்த கால அ.தி.மு.க. ஆட்சி! பழனிசாமியின் மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் 11 ஆயிரம் பேர் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பத்தில் முறைகேடு செய்துள்ளார்கள். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர், தாங்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலியான ஆவணங்கள் கொடுத்து நிதி உதவி பெற்றுள்ளார்கள். ஒரே ஆள், வெவ்வேறு மாவட்டங்களில் விவசாயியாகக் காட்டியும் நிதி உதவி பெற்றுள்ளார். சேலம் மாவட்டத்தில் மட்டும் நடந்துள்ள மொத்த மோசடியின் மதிப்பு 4 கோடி ரூபாய். இதே போல் கடலூர் மாவட்டத்தில் ரூ.4 கோடி, விழுப்புரத்தில் ரூ.4 கோடி மோசடி நடந்துள்ளது. திருவண்ணாமலையிலும், பெரம்பலூரிலும் மோசடி தொடர்ந்துள்ளது. இதுதான் விவசாயி பழனிசாமியின் ஆட்சி நடத்திய இலட்சணம் ஆகும்!

இவர் டெல்லியில் போராடிய விவசாயிகளை, ‘புரோக்கர்கள்' என்றதைவிடக் கேவலம் வேறு இருக்க முடியாது. சட்டம் கொண்டு வந்தபோது ஆதரித்ததும், அதையே திரும்பப் பெறும் போது ஆதரிப்பதும் தான் புரோக்கர்களின் வேலை!

banner

Related Stories

Related Stories