முரசொலி தலையங்கம்

“’The Rising sun’ இதழ் மூலம் காலத்தின் கட்டளையை நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின்” : ‘முரசொலி’ புகழாரம் !

எழுத்தாய் எந்நாளும் வாழும் தமிழினத் தலைவர் கலைஞரின் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி' - ‘The Rising sun’ இதழை வாழ்த்துகிறது!

“’The Rising sun’ இதழ் மூலம் காலத்தின் கட்டளையை
 நிறைவேற்றிய உதயநிதி ஸ்டாலின்” : ‘முரசொலி’ புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பேசியே வளர்ந்த கட்சி. தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்திலும்! எழுதியே வளர்ந்த கட்சி. தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலத்திலும்! தமிழில் ஒரே காலகட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இதழ்களை நடத்திய இயக்கம் ஒன்று இருக்குமானால் அது திராவிட முன்னேற்றக் கழகமாகத்தான் இருக்க முடியும். பெரியவர்கள் எல்லாரும் பேசினார்கள். பெரும்பாலானவர்கள் எழுதினார்கள். தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் பெரிய படையெடுப்பை இதழியல் துறையில் நடத்திய இயக்கம் இது!

நீதிக்கட்சியின் தொடக்க காலம் என்பது Justice இதழ் மூலமாகத்தான் அறிமுகம் ஆனது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பது அந்த இயக்கத்தின் பெயர். ஆனால் Justice கட்சி என்றே அழைக்கப்படக்காரணம், Justice என்ற இதழை நடத்தியதால்தான்.

கட்சியின் உரிமையான பெயரையே மறக்கடிக்கும் அளவுக்கு இதழின் பெயரே இயக்கத்தின் பெயராக ஆனது. சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் அவர்கள் தனது கருத்துகளை ஆங்கிலத்தில் சொல்வதற்காக Revolt இதழைத் தொடங்கினார். தமிழில் மட்டுமே இதழ் நடத்தினால் போதாது, ஆங்கிலத்திலும் நடத்தினால் தான் முழுப் பயனைத் தரும் என்று அவருக்குச் சொன்னவர் பேராசிரியர் லட்சுமிநரசு. தமிழகத்தில் நவீன பௌத்தத்துக்கு அடித்தளம் இட்ட இருவரில் ஒருவர்தான் இந்த லட்சுமிநரசு. (முதலாமவர் அயோத்திதாசப் பண்டிதர்).

அடுத்துச் சொல்ல வேண்டிய முக்கியமான இதழ் Sunday Observer. பி.பாலசுப்பிரமணியம் அவர்களால் தொடங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவுக்கே வழிகாட்டி இவர். முகத்துக்குக் கீழே நெஞ்சுக்கு அருகில் இரு கைகளையும் கூப்பி, வணக்கம் வைத்து ‘வாக்களிப்பீர்!' என்ற புகைப்படத்தை முதலில் வடிவமைத்து வெளியிட்டவர் இவர்தான் என்று சொல்வார்கள். டாக்டர் அம்பேத்கரையும், ஜின்னாவையும் சந்திக்க பெரியார் சென்றபோது உடன் சென்றவர் இவர். இவரது Sunday Observer அந்தக் கால கட்டத்தில் பரபரப்பாக வாசிக்கப்பட்டது.

இராஜாஜியே இவர் மீது அவதூறு வழக்குப் போட்டார். தமிழில் ‘திராவிட நாடு' இதழைத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள், ஆங்கிலத்தில் Home Land தொடங்கினார். 1942 -63 என ‘திராவிட நாடு’ இதழ் தொடந்து வெளியானாலும் Home Land நீண்ட காலம் நடத்தப்படவில்லை. 1957 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறிது காலமே வெளியானது. அதன்பிறகு 1966 ஆம் ஆண்டு Home Rule இதழைத் தொடங்கினார் அண்ணா. அதுவும் சிறிது காலம்தான் வெளியானது. தியாகச்செம்மல் சிட்டிபாபு சில காலம் இதன் ஆசிரியராக இருந்தார்.

சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் அவர்களால் Sunday Times சிறிது காலம் நடத்தப்பட்டது. எழுத்தாளர் பி.சி.கணேசன், Kalaignar International இதழை நடத்தினார். New Justice இதழை ஏ.எஸ்.வேணு நடத்தினார்.New Reformer என்ற இதழும் வெளியானது. இந்த வரிசையில் முரசொலி மாறன் அவர்கள் Rising Sun தொடங்கினார். அந்த வழித்தடத்தை இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் புதுப்பித்துள்ளார்.

மேலே குறிப்பிட்ட இதழ்கள் அனைத்தும் தமிழகத்துக்கு வெளியே நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பவை, எத்தகைய அமைப்புகள், அவற்றின் கொள்கைகள் என்ன என்பதை உணர்த்திய பத்திரிக்கைகள் ஆகும். இந்த வரிசையில் மீண்டும் The Rising Sun வெளியாகி இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களைப் பதிப்பாளராகவும், வெளியீட்டாளராகவும் கொண்டு வெளிவரத் தொடங்கி இருக்கிறது. கடந்த 26 ஆம் தேதியன்று அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் இதழை வெளியிட்டு இருப்பது இயக்க வரலாற்றில் முக்கியமானது ஆகும்.

முந்தைய காலகட்டத்துக்கும், இந்தக் கால கட்டத்துக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. நாம் யார் என்று உலகத்துக்குச் சொல்ல வேண்டிய காலகட்டமாக முன்பு இருந்தது. ஆனால் இப்போது நம்மை யார் என்று உலகம் தேடும் காலகட்டமாக மாறி இருக்கிறது. நமது வழி என்ன என்பதை இன்று இந்தியா தேடிக் கொண்டு இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னால் கொல்கத்தாவில் நீட் தேர்வுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், ‘இந்தி பேசாத மாநிலங்களின் தளபதியாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்' என்று பேசி இருக்கிறார்கள் என்றால், இந்தியா தமிழகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ‘நீட்’ எதிர்ப்பு மசோதாவை மராட்டிய சட்டமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும் என்று மகாராஷ்டிர ஆளும் கூட்டணிக்கட்சியான காங்கிரசு சொல்கிறது என்றால், தமிழகத்தை இந்தியா உற்றுப் பார்க்கிறது என்று பொருள்.

கேரளாவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சரை உதாரணம் காட்டிப் பேசுகிறார். கர்நாடகாவில் ஒரு பத்திரிக்கையாளர், அந்த மாநில அரசுக்கு தமிழக அரசைப் பின்பற்றுங்கள் என்று கட்டளை போடுகிறார். ஆந்திர ஊடகங்களில் அரைமணி நேரம் தமிழ்நாட்டு முதலமைச்சரின் செயல்பாடுகளைக் காட்சிப்படுத்துகிறார்கள். கொரோனாவைக் கட்டுப்படுத்தியது இந்தியா முழுக்கவும் கவனிக்கப்படுகிறது. பல்வேறு சமூகநலத் திட்டங்கள், மற்ற மாநில பின்பற்றப்படுகின்றன. இத்தகைய சூழலில் ‘The Rising sun’ வருகை மிக மிக முக்கியமானது. காலத்தின் கட்டளையை மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்.

இந்தியாவுக்கு வழிகாட்டும் கடமையை ‘Rising sun’ செய்ய வேண்டி இருக்கிறது. தமிழ் நாட்டில் இருந்தபடியே இந்தியாவுக்கு ஒளியூட்ட வேண்டிய பொறுப்பு இந்த இதழுக்கு இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தும் வடிவமைத்தும் நடத்தி வரும் ‘திராவிட வடி வமைப்பு ஆட்சி'யின் முகவரியாக இந்த இதழ் இருக்கப் போகிறது.

சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக மாநிலத்தை வளர்த்ததே தமிழ்நாட்டின் சாதனை என்று உலகப் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சொன்னார். ‘நாடாளுமன்றத்தில் திராவிடக் கலாச்சாரத்தை உருவாக்கியவர் அண்ணா' என்றார் அடல்பிகாரி வாஜ்பாய். ‘எங்கள் மாநிலத்தில் கலைஞர் கருணாநிதியைப் போல ஒருவர் இல்லாமல் போய்விட்டாரே' என்று வருந்தினார் மேற்கு வங்கத்தின் கர்க்சட்டர்ஜி. ‘திராவிடக் கப்பல் சென்றடைய வேண்டியது கூட்டாட்சித் துறைமுகமே' என்றார் காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி. இவைதான் ‘திராவிட வடிவமைப்பு ஆட்சிக்கு' கிடைத்த பாராட்டுப் பத்திரங்கள்.

‘எங்கள் மாநிலத்துக்கு இப்படி ஒரு முதல் அமைச்சர் இல்லையே' என்ற ஏக்கம் இப்போது ஏற்பட்டுள்ளது பல மாநிலங்களில். அத்தகைய ஆட்சிக்கு, அரசியலுக்கு வழிகாட்டப் போகிறது‘The Rising sun’!

எழுத்தாய் எந்நாளும் வாழும் தமிழினத் தலைவர் கலைஞரின் மூத்தபிள்ளையாம் ‘முரசொலி' - ‘The Rising sun’ இதழை வாழ்த்துகிறது! வரவேற்கிறது! பதிப்பாளர் உதயநிதி அவர்களையும், ஆசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவையும் பாராட்டுகிறது!

banner

Related Stories

Related Stories