முரசொலி தலையங்கம்

“கல்வித் துறையின் பொற்காலம்” : ‘திராவிட இயக்கம்’ என்ன கிழித்தது என்று கேட்கும் தீவட்டிகளுக்கு பதிலடி!

தமிழ்நாடு உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி, தொழிற்கல்வி என்ற இலக்கில் முன்னேறிக் கொண்டு இருக்கிறது. திராவிட இயக்கம் என்ன கிழித்தது என்று கேட்டுக்கும் தீவட்டிகளுக்கு இதை விடச் சரியான பதில் இருக்க முடியாது!

“கல்வித் துறையின் பொற்காலம்” : 
‘திராவிட இயக்கம்’ என்ன கிழித்தது என்று கேட்கும் தீவட்டிகளுக்கு பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (18-09-2021) வருமாறு:

பெருந்தலைவர் காமராசர் காலம் என்பது பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலமாகச் சொல்லப்படுகிறது. நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களது ஆட்சி காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது. இந்த ஆட்சி காலம் உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துள்ள பிரகடனம் இந்த நாட்டின் கல்வி முறையை உச்சத்துக்கு கொண்டு போய் உட்கார வைக்கப் போகிறது! எவ்வளவு உயரிய கனவு இது தெரியுமா?

அனைவர்க்கும் அடிப்படைக் கல்வி வேண்டும் என்று சில மாநிலங்கள் போராடி வரும் சூழலில், அனைவருக்கும் பள்ளிக் கல்வி வேண்டும் என்று வாதாடி வரும் சூழலில் - தமிழ்நாடு உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி, தொழிற்கல்வி என்ற இலக்கை வைத்து முன்னேறிக் கொண்டு இருக்கிறது. திராவிட இயக்கம் என்ன கிழித்தது என்று கேட்டுக் கொண்டு இருக்கும் தீவட்டிகளுக்கு இதை விடச் சரியான பதில் இருக்க முடியாது!

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழில் கல்வியில் சேர்வதற்காக 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கி உள்ளது. அந்த அடிப்படையில் தொழிற்கல்வி படிப்புகளில் சேர்வதற்கான ஆணைகளை நேற்றைய தினம் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். அதேமேடையில், இப்படிச் சேரும் மாணவர்களுக்கான கட்டணங்களை அரசே செலுத்தும் என்பதையும் அறிவித்தார்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் கிராமப்புற மாணவர்கள்தான். கிராமப்புற மாணவர்கள் என்றால் பெரும்பாலும் ஏழை மாணவர்கள்தான். ஏழை மாணவர்கள் என்றால் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்கள்தான். ஒரே ஒரு அறிவிப்பின் மூலமாக சாதி - வர்க்கம் - ஏழ்மை - ஆகிய மூன்றுக்கும் நிவாரணம் தேடும் அறிவிப்பை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்கள். இடம் கிடைத்து அரசாணை வாங்கிய மாணவர்கள், தாங்கள் பணம் செலுத்தத் தேவையில்லை என்பதையும் உணர்ந்த போது கண்ணீரோடு பேட்டி அளித்த காட்சி அனைவருக்கும் கண்ணீர் ஏற்படுத்தியது.

ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு முதலில் தேவை கல்வி. அதனை முதலில் கொடுத்தது திராவிட இயக்கத்தின் தாய்க்கட்சியான நீதிக்கட்சி. கல்விப்புரட்சியை ஏற்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. புகுமுக வகுப்பு வரை இலவசக் கல்வி என்று முதல்வர் கலைஞர் அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளிகளை நோக்கி வந்தார்கள். இதை அறிந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களே, ‘எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கலைஞர் கருணாநிதியிடம் சொல்லுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்கள் என்றால் அன்றே கல்லூரிக் கல்விக்கான புரட்சி தொடங்கிவிட்டது.

தி.மு.க.வின் முதல் ஆட்சி காலத்திலேயே தமிழகத்தில் ஏராளமான அரசு கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. 1947 முதல் 67 வரையிலான 20 ஆண்டு காலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகள் 68 தான்! ஆனால் கலைஞர் முதல்வராக இருந்த 1969 முதல் 1975 காலக்கட்டத்தில் 97 அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டன.

* தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளை அதிகப்படுத்தினார் முதல்வர் கலைஞர்!

* அனைத்துப் பள்ளிகளிலும் நூலகம் அமைத்தார்!

* உடற்கல்வியை கட்டாயம் ஆக்கினார்!

* அறிவியல் பாடங்களை அதிகப்படுத்தி, அறிவியல் கூடங்களை அமைத்தார்!

* பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கினார்!

* தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அமைத்தார்!

* கிராமப்புற மாணவர்களுக்கும், குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கும் சலுகைகள் கொடுத்தார்!

* அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கினார்!

* தமிழ் வழிப்படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்!

* கணினி பாடத்தை அறிமுகம் செய்தார்!

* கோவையில் வேளாண் பல்கலைக்கழகம்!

* சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம்!

* சென்னையில் கால்நடைப் பல்கலைக்கழகம்!

* டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்!

* உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம்!

* நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்!

* சேலம் பெரியார் பல்கலைக் கழகம்!

* கோவை, திருச்சி, மதுரை, நெல்லையில் அண்ணா தொழில்நுட்பபல்கலைக் கழகங்கள்!

* ஏராளமான மருத்துவக் கல்லூரிகள்!

* நுழைவுத் தேர்வு ரத்து! - இவை அனைத்தும் முதல்வர் கலைஞர் காலத்தில் செய்யப்பட்டவை. இதிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது இலக்கை அறிவித்து இருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை உற்றுக் கவனித்தால் முதலமைச்சர் அறிவிப்புக்கான முழு உண்மைகள் தெரியும். மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு நூறு சதவிகிதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உருவாக்கப்படும் என்றும், கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவோம் என்றும், தமிழகத்துக்கு என தனியே மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மருத்துவ உயர் கல்வியைத் தடுக்கும் தந்திரம்தான் ‘நீட்’ தேர்வு. அத்தகைய ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய சட்டம் இயற்றப்பட்டு அதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவரிடம் பெறுவோம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சட்டம் இயற்றப்பட்டு விட்டது.

மருத்துவக் கல்வியின் மொத்த இடங்களும் மாநிலத் தொகுப்புக்கே கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. உயர்கல்வி நிறுவன நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற உயர் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், போட்டித் தேர்வுகளில் பங்கு பெற பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளோம். அதற்கான அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

இவற்றைத் திட்டமிட்டுச் செய்தாலே முதலமைச்சர் சுட்டிக் காட்டிய இலக்கை எளிதில் அடையலாம். அதேமேடையில் இருந்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவருக்குமான இலக்காக இதனை முதலமைச்சர் அறிவித்துள்ளார். எல்லார்க்கும் எல்லாம் என்பதை இதை விட எளிமையாக யாராலும் சொல்லவும் முடியாது. செயல்படுத்தவும் முடியாது!

banner

Related Stories

Related Stories