முரசொலி தலையங்கம்

’மக்களைத் தேடி மருத்துவம்’ : ‘மரத்தான்’ வேகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை.. ‘முரசொலி’ நாளேடு புகழாரம்!

மக்கள் தேடிய அரசு அமைந்ததால்தான் மக்களைத் தேடி மருத்துவம் வருகிறது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

’மக்களைத் தேடி மருத்துவம்’ : ‘மரத்தான்’ வேகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை.. ‘முரசொலி’ நாளேடு புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் வருமாறு:-

’மக்களைத் தேடி மருத்துவம்’ - என்ற மகத்தான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்திருந்தார். கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியைச் செய்து முடித்த முதலமைச்சரின் மீண்டுமொரு சிறந்த திட்டமாக ‘மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டமாக இது ஆகிவிட்டது.

இந்த திட்டத்தைத் தொடக்கி வைத்து பேசிய முதலமைச்சர் அவர்கள், “மருத்துவமனைகளைத் தேடி மக்கள் வரும் சூழலை மாற்றும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் காலத்தை உருவாக்கி இருக்கிறோம். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று சில அவசியமான மருத்துவச் சேவைகளை வழங்கப் போகிறோம். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்பட இருக்கிறது.

பொதுச் சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இதில் பங்கெடுத்து சேவையாற்ற இருக்கிறார்கள். அனைவருக்கும் நலவாழ்வு என்ற திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 1264 பெண் சுகாதாரத் தன்னார்வலர்களும், 50 இயன்முறை மருத்துவர்களும், 50 செவிலியர்களும், இல்லம் தேடி வரும் இந்த சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

’மக்களைத் தேடி மருத்துவம்’ : ‘மரத்தான்’ வேகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை.. ‘முரசொலி’ நாளேடு புகழாரம்!

இவை படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். அவர்களுக்கான கூடுதல் சிகிச்சைகளை மருத்துவமனைகளில் வழங்குவோம். இதற்காக முதல் கட்டமாக 242 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 30 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு கோடி மக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று சொன்னார்.

இந்தத் திட்டம் எப்படி செயல்படப் போகிறது, மக்களுக்கு எத்தகைய பயனைத் தேடித் தரப்போகிறது என்பதை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் முதலமைச்சர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தீரர்களின் கோட்டமாம் திருச்சியில் நடந்த மாபெரும் கூட்டத்தில் ஏழு உறுதிமொழிகளை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்தார்கள். அதில் ஒன்றுதான் ‘அனைவருக்கும் நலவாழ்வு' என்பதாகும். அத்தகைய தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திட்டமானது தொடங்கியதுமே அதற்கான உரிய பலனைத் தந்துவிட்டது.

அத்தகைய உடனடி பலனை முதலமைச்சர் அவர்களும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இந்தப் பலன் குறித்து மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியம் நேற்றைய தினம் சொல்லி இருப்பதைப் பார்க்கும் போது நல்வாழ்வுத் துறையே ‘மரத்தான்' வேகம் பிடித்திருப்பதை உணர முடிகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட இரண்டே நாட்களில் 13 ஆயிரத்து 247 பேர் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்து 22 பேரும், கோவை மாவட்டத்தில் 969 பேரும், சேலம் மாவட்டத்தில் 800 பேரும், சென்னையில் 753 பேரும் பயனடைந்துள்ளார்கள். இந்த திட்டத்தின் மூலமாக 3 ஆயிரத்து 722 நீரிழிவு நோயாளிகளுக்கு 2 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 816 பேருக்கு ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீரழிவு, ரத்த அழுத்தம் ஆகிய 2 இந்த நோய்களாலும் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 768 பேருக்கு 2 நோய்களுக்கான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.

’மக்களைத் தேடி மருத்துவம்’ : ‘மரத்தான்’ வேகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை.. ‘முரசொலி’ நாளேடு புகழாரம்!

நீண்ட நாள் சிகிச்சையில் இருப்பவர்கள் 426 பேருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் 454 பேருக்கு ‘பிசியோதெரபி செய்யப்பட்டுள்ளது. 11 பேருக்கு தானாக ‘டயாலிசிஸ்' செய்யும் உபகரணம் உள்பட இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 13 ஆயிரத்து 247 பேர் கடந்த 2 நாட்களில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தில் பயனடைந்துள்ளார்கள். இது வெறும் புள்ளிவிபரம் அல்ல. இத்தனை ஆயிரம் மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி வீசியிருக்கிறது கடந்த இரண்டே நாளில். அதுதான் முக்கியமானது.

வீடு தேடி மருத்துவம் என்ற சேவையின் மூலமாக மக்களை நேரடியாக அரசே கவனிக்கிறது. அவர்களுக்கு நிலையான சேவையை அரசே தருகிறது. ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைக்கிறது. இன்னும் சொன்னால், ஒரு குடும்பம் எத்தகைய நலத்துடன் இருக்கிறது என்பதை அரசு அறிந்து கொள்கிறது. ஒரு குடும்பத்தின் நலன் குறித்த பதிவேடானது அரசாங்கத்திடம் இருக்கப் போகிறது. மக்கள் நலன் காக்கும் அரசு இப்படித்தான் செயல்படும்.

உடல் நலம் பாதிக்கப்படும் அனைவரும் மருத்துவமனைகளுக்கு வருவது இல்லை. பொருளாதாரச் சூழல் மட்டுமல்ல, மனரீதியாகவே, ‘நமக்கு எங்கே குணமாகப் போகிறது?' என்ற எண்ணத்தோடு வீட்டிலேயே முடங்கிக் கொள்கிறார்கள். மருத்துவத்துக்கு முன்னதாக இருக்கும் ‘பயணம்' என்பது கூட மக்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அதனாலேயே மருத்துவ மனைகளுக்குச் செல்வதை கிராமப்புற மக்கள் தவிர்த்து விடுகிறார்கள்.

இதனாலேயே நோய்கள் முற்றிவிடுகிறது. குணப்படுத்த சிரமம் ஏற்படுத்துகிறது. இதனை நாம் கொரோனாவிலேயே பார்த்தோம். லேசான காய்ச்சல் வந்ததும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றால், குணப்படுத்துவது எளிது. ஒருவாரம் கடந்துவிட்டால், அதுதான் மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. நுரையீரலைப் பாதிக்கிறது. உயிரைப் பறித்தும் விடுகிறது. இதுபோன்ற அவலங்கள் இனி நிகழக்கூடாது என்றால் அதற்கான திட்டமிடுதல் தேவை என்று தமிழ்நாடு முதலமைச்சர் நினைத்தார். அதற்கு ஏற்பத் தீட்டப்பட்டதுதான் ‘மக்களைத் தேடி மருத்துவம்' ஆகும். மக்கள் தேடிய அரசு அமைந்ததால்தான் மக்களைத் தேடி மருத்துவம் வருகிறது

banner

Related Stories

Related Stories