முரசொலி தலையங்கம்

தமிழ்க்கடல் இளங்குமரனாருக்கு அரசு மரியாதை; பண்பாட்டை மீட்ட தமிழ்நாடு அரசு - முரசொலி தலையங்கம் புகழாரம்!

மறைந்த எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகம் கொண்ட இரா.இளங்குமரனாருக்கு அரசு மரியாதை செய்த தமிழ்நாடு அரசுக்கு முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டி பாராட்டியுள்ளது.

தமிழ்க்கடல் இளங்குமரனாருக்கு அரசு மரியாதை; பண்பாட்டை மீட்ட தமிழ்நாடு அரசு - முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாழும் வள்ளுவராய், நடமாடும் தமிழாகப் போற்றப்பட்டவர் மதுரை இரா.இளங்குமரனார். அன்னார் தனது 91 ஆவது வயதில் தமிழ்ப்பணியை நிறைவு செய்து இயற்கை எய்தியது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் மாபெரும் பேரிழப்பு ஆகும். அத்தகைய அறிஞருக்கு அரசு மரியாதை கொடுத்ததன் மூலம், தமிழின் அரசாக உயர்ந்து நிற்கிறது தமிழ்நாடு அரசு.

‘வழவையம் ஊறில் பொன்றா வாய்மையே உயிராய் நின்ற உழவராம்படிக்கராமரின் உயிர் இளங்குமரன்' என்று தன்னை ஒற்றை வரியில் அறிமுகம் செய்து கொண்ட அவர், தமிழுக்குக் கொடுத்திருக்கும் சொத்துக்கள் என்பது பல நூறாக இருக்கிறது. 600க்கும் மேற்பட்ட பைந்தமிழ் பனுவல்களை தமிழுக்கு வழங்கி உள்ளார். இறுதி வரை எழுதி வழங்குவதை அவர் நிறுத்தவில்லை. முதுமை காரணமாக தனக்குப் பார்வை குறைந்து போனால், அதன் பிறகும் எழுத வேண்டும் என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டும், இரவில் விளக்குகளை அணைத்த பின்னும் எழுதும் பழக்கம் கொண்டவராக இளங்குமரனார் அவர்கள் இருந்துள்ளார்கள்.

இதனை நினைக்கும் போது எத்தகைய தமிழ் உடலாக அவர் வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறியலாம். வாழ்க்கைக்கு காந்தியம், சமூக சீர்திருத்தத்துக்குப் பெரியாரியம், பொருளாதாரக் கொள்கையில் மார்க்சீயம் என அறிவித்துக் கொண்ட புலவர் அவர். கட்சி அரசியலில் தன்னை எப்போதும் ஈடுபடுத்திக் கொள்ளாமல், முழு நேரத் தமிழ் வாழ்க்கையாக வாழ்ந்தவர் அவர். குறள் வழி முறைத் திருமணத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்த செந்தமிழ் அந்தணர், இளங்குமரனார். 1956 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் 4800 திருமணங்களை அவர் நடத்தி வைத்து புதிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டவர்.

திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணரைக் கொண்டு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் திட்டத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் 1974 ஆம் ஆண்டு தொடங்கினார்கள். அப்போது அத்திட்டத்தில் இளங்குமரனாரையும் இணைத்துப் பணியாற்ற முதல்வர் கலைஞர் அவர்கள் அனுமதி வழங்கினார்கள். 2000 ஆம் ஆண்டில் அய்யன் திருவள்ளுவர் சிலை 133 அடியில் குமரி முனையில் எழுந்த எழுச்சி மிகு விழாவிலும் இளங்குமரனாரை பங்கெடுத்துப் பேச வைத்தார் முதல்வர் கலைஞர். ஈராயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் சேகரித்து மதுரையில் பாவாணர் பெயரால் நூலகமும், திருச்சி அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும் நடத்தி வந்தார்கள்.

தன்னிடம் இருந்த 16 ஆயிரம் புத்தகங்களை எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் பாதுகாப்பில் ஒப்படைத்து வருங்காலத் தமிழ்த் தலைமுறை அறிவு பெற அடித்தளம் அமைத்துள்ளார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ் அரிமா இலக்குவனார், திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப்பாவாணர் ஆகியோரின் வழித்தடத்தில் வந்தவர் இளங்குமரனார். இந்த நால்வரையும் முன்னோடியாகக் கொண்டவர் அவர். எங்கும் தமிழ் இருக்க வேண்டும், அது தனித்தமிழாக இருக்க வேண்டும், வடசொற்களின் ஆதிக்கம் தமிழில் இருக்கக் கூடாது, சமற்கிருத மயமாக்கல் தமிழனின் வாழ்வில் இருக்கக் கூடாது, நம்முடைய விழாக்கள் தமிழ் நெறி விழாக்களாக இருக்க வேண்டும், ஆரிய மயமாக்கல் இருக்கக் கூடாது - என்பதுதான் இந்த ஐந்து தமிழ்ப் புலவர்களின் நோக்கமாக இருந்தது.

தமிழ்ப் பற்று என்பது மேடைகளில் பத்துக் குறள் சொல்வதோ, சில பாடல்களை ஒப்பித்து விளக்கவுரை சொல்வதோ அல்ல, அதைத் தாண்டியது என்பதை தமிழ்ச் சமூகத்துக்கு வழி நடத்திய புலவர்கள் இவர்கள். மறைமலையடிகளின் தொடர்ச்சியாக இருக்கும் இளங்குமரனாருக்கு மரியாதை செய்ததன் மூலம் தமிழ்நாடு அரசும் அந்தச் சிந்தனைகளோடு தன்னை அடையாளம் காட்டி உள்ளது. புலவர்களைப் போற்றுதல் என்பது நம்முடைய பழந்தமிழ் மரபில் ஒன்றாக எப்போதும் இருந்துள்ளது. ஔவையும், கபிலரும், மோசிகீரனாரும் மன்னர்க்கு இணையாக, மன்னர்களை விட மேலாக மதிக்கப்பட்டார்கள் என்பதை இலக்கியங்களில் படித்திருக்கிறோம்.

மன்னனுக்கு அறிவுரை சொல்பவர்களாக மட்டுமல்ல; மன்னருக்கு எதிர் கருத்துச் சொல்பவர்களாகவே சில புலவர்கள் இருந்துள்ளார்கள்; இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். புலவர்களின் வழிகாட்டுதல்கள் எப்போதும் அறத்தின் பாற்பட்டதாக மட்டுமே இருப்பதால் அதனை அரசர்கள் ஏற்றுக்கொண்டும் இருந்தார்கள். அத்தகைய புலமை மரபுக்கான அங்கீகாரம், பிற்காலத்தில் தடைபட்டது. அப்படித் தடைப்பட்ட பண்பாட்டை மீட்டெடுத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ் மக்களின் கிராமிய வாழ்வியலைத் தன் படைப்பின் மூலமாகப் பதிவு செய்த கி.ராஜநாராயணனுக்கு அரசு மரியாதை செய்தது தமிழ்நாடு அரசு.

குண்டலகேசி, காக்கைப்பாடினியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் சங்கத் தமிழ் இலக்கிய, இலக்கணப் புலமை மரபின் தொடர்ச்சியாக வாழ்ந்த இளங்குமரனாருக்கு அரசு மரியாதை செய்தது தமிழ்நாடு அரசு. ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' - என்கிறார் ஔவை. நிலம் பெருமை பெறுவதற்கு அதில் வாழும் மாந்தரே காரணம் என்கிறார். நிலம் பெருமை பெறுவதற்கு அதை ஆளும் முதல்வரும் தானே காரணம்?

- முரசொலி தலையங்கம்

banner

Related Stories

Related Stories