முரசொலி தலையங்கம்

“மீனவர்களின் வாழ்க்கையைப் பறிக்கும் மீன்வள மசோதா”: கடலை கார்ப்பரேட்டுக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசு!

மீனவர்களிடம் இருந்து கடலைக் கைப்பற்றுவதும், அதனை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதும் ஒன்றிய அரசின் நோக்கமாக இருப்பதையே இது உணர்த்துகிறது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

“மீனவர்களின் வாழ்க்கையைப் பறிக்கும் மீன்வள மசோதா”:  கடலை கார்ப்பரேட்டுக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 24,2021) தலையங்கம் வருமாறு: -

“கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது. கடல் கடந்து போன தமிழர்களின் கண்ணீரால்” என்றார் பேரறிஞர் அண்ணா. இன்று இருந்திருந்தால் ‘தமிழ்நாட்டில் வாழும் மீனவர்களின் கண்ணீரால்’ என்று சொல்லி இருப்பார். அத்தகைய ஒரு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. அதற்கு எதிராக தமிழ்நாடு மீனவர்கள் கோபமும் கண்ணீருமாகக் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா 2021 என்ற சட்டம் இந்தியா முழுமைக்குமான மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இராமநாதபுரத்துக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, “தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையால் பிரச்சினை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படையால் பிரச்சினை. இரண்டையும் தட்டிக் கேட்கும் தைரியம் காங்கிரஸ் பிரதமருக்கு இல்லை. பா.ஜ.க ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டு மீனவர்களையும் குஜராத் மீனவர்களையும் கொண்ட கூட்டு அமைப்பை உருவாக்குவேன்” என்று பேசினார்.

அப்படி எந்த அமைப்பும் உருவாக்கப்படவில்லை. மீனவர்களின் வாக்குகளை வாங்குவதற்காக ‘கடல் தாமரை’ என்ற திட்டமும் போட்டார்கள். அதன் மூலமாகவும் எந்தத் தீர்வும் இல்லை. இப்போது பிரச்சினை இலங்கைக் கடற்படையால் அல்ல; பாகிஸ்தான் கடற்படையால் அல்ல; இந்திய அரசாலேயே இந்திய மீனவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. எந்த மோசமான விஷயத்தையும் சட்டபூர்வமாகச் செய்து விடுவதில் சமர்த்தர்கள் பா.ஜ.க.வினர். விவசாயிகளுக்கு வேட்டு வைப்பதா? மூன்று வேளாண் சட்டங்கள். கல்வியில் தடை போட வேண்டுமா? புதிய கல்விக் கொள்கை. சிறுபான்மையினரைக் குறி வைக்க வேண்டுமா? குடியுரிமை திருத்தச் சட்டம். இப்போது மீனவர்களின் வாழ்க்கையைப் பறிக்க இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா. எந்த மோசமான விஷயத்தையும் சட்டமாகப் போட்டுவிட்டால் மக்கள் எதிர்க்க மாட்டார்கள் என்ற மமதையோடு செயல்படுகிறார்கள்.

“ஒன்றிய அரசு நிறைவேற்ற உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021, இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளதால், அதனை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாம்” என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது என்றும், இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் மாநிலப் பட்டியலின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகளைக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மசோதாவில் உள்ள சில பிரிவுகளில், மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல் (Criminalisation), சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு எதிராக வலிய நடவடிக்கைகளை எடுத்தல் (Use of force), கட்டணங்களை விதிப்பது, பெரும் அபராதங்களை விதிப்பது போன்ற மீனவர்களுக்கு எதிரான உட்பிரிவுகள் இருப்பதைச் சுட்டிக் காட்டி உள்ளார்.

கடல் மீன்வளங்களை அபிவிருத்தி செய்தல், நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், கடலோரப் பகுதிகளில் மீன் பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் வேலைவாய்ப்பை உருவாக்கம் செய்வதற்காகவும் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்போவதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இந்தச் சட்டம் அப்படிப்பட்டதாக இல்லை என்பதுதான் உண்மை. காடுகள், எப்படி பழங்குடியினரின் வாழ்வுரிமையாக இருக்கிறதோ, அதைப்போல கடல் என்பது மீனவர்களின் வாழ்வுரிமையாக உள்ளது. தங்களது வாழ்வுரிமையோடு சேர்த்து அவர்கள் கடலை வளப்படுத்தியே வருகிறார்கள். கடல் வளத்தைக் காத்து வருகிறார்கள். இத்தகைய வாழ்வுரிமையை மீனவர்களிடம் இருந்து பறிக்கிறது இந்தச் சட்டம்.

இனி கடலுக்குள் கால் பதிக்கக் கட்டணம் செலுத்த வேண்டும். அரசு நிர்ணயம் செய்யும் பகுதிகளிலேயே மீன்பிடிக்க வேண்டும். மீறிச் சென்றாலோ அபராதம் விதிக்கப்படுவதுடன், சிறைத் தண்டனையையும் அனுபவிக்க நேரிடும். புதிய மீனவர்களிடமிருந்து லைசென்ஸ் கட்டணம் வசூலிப்பதற்கும், அபராதம் விதிப்பதற்கும்தான் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரையிலான பகுதியை ஒன்றிய அரசாங்கத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலமாக வரையறுக்கிறது. இதன் மூலம், மீனவர்களின் உடைமையாக இருந்து வந்த கடல், இனி ஒன்றிய அரசின் உடைமையாக மாறிவிடும். மீனவர்களின் மேம்பாட்டிற்காக தனி நிதியை ஒதுக்கீடு செய்யாமல், புதிய சட்டத்தின் மூலம் பெறப்படும் அபராதத் தொகையில் இருந்து நிதியை ஏற்படுத்துவது ஒன்றிய அரசின் பொறுப்பற்றத் தனம்.

இந்தச் சட்டத்தின் மிக மோசமான விளைவுகளை மீனவர் சங்கங்கள் உணர்ந்தே எதிர்ப்பு தெரிவிக்கின்றன. “பாரம்பரிய முறையிலான மீன்பிடித் தொழிலை அழித்து, பணக்கார நாடுகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வர்த்தகம் சார்ந்த கார்ப்பரேட்மயமான மீன்பிடித் தொழிலை இந்தியாவில் உருவாக்குவதுதான் இவர்களது நோக்கம். இந்திய மீனவர்களின் எதிர்காலம் பற்றிப் பேசுவதற்கு மாறாகக் கப்பல்கள் மூலம் ஆழ்கடலில் உள்ள மீனைப் பிடிப்பது, கடலில் பண்ணை அமைத்து மீன் வளர்ப்பது, அதற்காக கடற்பரப்பில் ‘பிளாட்’ போட்டு தனியாருக்குக் கொடுப்பது போன்ற விஷயங்களை தேசியக் கொள்கை அதிகம் பேசுகிறது.” என்று சொல்கிறார்கள்.

மீனவர்களிடம் கருத்தே கேட்கவில்லை என்கிறார்கள். கடல்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகளும் பறிக்கப்படுகிறது. மீனவர்களிடம் இருந்து கடலைக் கைப்பற்றுவதும், அதனை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதும் ஒன்றிய அரசின் நோக்கமாக இருப்பதையே இது உணர்த்துகிறது.

banner

Related Stories

Related Stories