முரசொலி தலையங்கம்

“மக்கள் நலன் விரும்பும் மருத்துவர்களால் எந்தத் தொற்றையும் வெல்ல முடியும்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

மக்கள் நலன் காக்கும் அரசும் - மக்கள் நலன் விரும்பும் மருத்துவர்களும் இணைந்தால் தொற்றையும் வெல்லலாம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

“மக்கள் நலன் விரும்பும் மருத்துவர்களால் எந்தத் தொற்றையும் வெல்ல முடியும்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜூலை 1 - இந்திய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா சூழல் என்பது தினந்தோறும் மருத்துவத்தைத்தான் நினைக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு என்பது நன்றாகவே குறைந்துவிட்டது. கட்டுக்குள் வந்துவிட்டது. 23 மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100க்கும் கீழே குறைந்துவிட்டது. 36 ஆயிரத்தைதொட்ட ஒரு நாள் பாதிப்பானது படிப்படியாகக் குறைந்து நேற்றைய தினம் 4 ஆயிரத்துக்கு வந்துவிட்டது. அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் குறைந்துவிடும். கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அதன் எண்ணிக்கை காட்டுகிறது.

இந்தியா முழுமைக்கும் பார்த்தாலும் உச்சத்துக்குச் சென்ற இரண்டாவது அலை வீழ்ந்து கொண்டு இருக்கிறது. நான்கு லட்சம் பேரை பாதித்த தொற்று, இப்போது 46 ஆயிரத்துக்கு குறைந்துவிட்டது. ஆனால் கொரோனா முற்றிலுமாக ஒழிந்தது என்ற சூழல் ஏற்படவில்லை.

அதனை நோக்கி நாம் சென்று கொண்டுள்ளோம். இந்தச் சூழல், மருத்துவம் குறித்து அதிகமான கவனத்தை நாம் அனைவரும் குவிக்க வேண்டும் என்பதை கொரோனா எடுத்துக் காட்டுகிறது. காலமாற்றம், பருவச் சுழற்சி, பழக்க வழக்க மாற்றங்கள், உணவு முறைகள், சூழலியல் பாதிப்புகள், நாகரீக வளர்ச்சி, மனத்திறன், அளவீடுகள் - ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான் மனித வாழ்க்கை. படிப்பு, வேலை, குடும்பம், அரசு, அரசியல் ஆகியவற்றைத் தாண்டிய நெருக் கடிகளாக இவை மாறிக் கொண்டு இருக்கின்றன. இதன் மீதான அக்கறையை கொரோனா அதிகப்படுத்திவிட்டது.

“மக்கள் நலன் விரும்பும் மருத்துவர்களால் எந்தத் தொற்றையும் வெல்ல முடியும்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

இது என்ன வகை நோய், யாருக்கு வரும், யாருக்கு வராது, என்ன சிகிச்சை தருவது, என்ன மருந்து சாப்பிடுவது, தடுப்பூசி போட்டால் கட்டுப்படுமா - இப்படி எந்த வகையான புரிதலும் இல்லாத சூழலில் கொரோனா வந்தது. எத்தனையோ மனித உயிர்களைக் காவு வாங்கிச் சென்றது. கோடிக்கணக்கானவர்களின் அச்சத்தைப் போக்கி, லட்சக்கணக்கானவர்களைக் காப்பாற்றியது பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள். அவர்களது தியாகத்துக்கு நாம் தலைவணங்கியாக வேண்டும்.

யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று சொல்லப்பட்டபோது மருத்துவர்கள் மட்டுமே வெளியே வந்து மக்களைக் காக்கும் பணியில் இறங்கினார்கள். உறவினர்கள்கூட தொட, பார்க்க பயந்த மனிதர்களை மருத்துவர்களே தொட்டுக் கவனித்து பாதுகாத்தார்கள். மரணித்த மனித உடல்களைக்கூடப் பார்க்க அவர்களது சொந்தங்கள் வரப் பயந்த நேரத்தில் மருத்துவர்களே அந்த நேரத்தில் உடன் இருந்தார்கள். இத்தகைய மருத்துவர்களுக்கு இந்த மனித சமுதாயம் எத்தகைய நன்றியைச் செலுத்தினாலும் தகும்.

உயிர் காக்கும், மக்களை காக்கும் பணியில் இன்றைய தமிழ்நாடு அரசு மகத்தான பணிகளைச் செய்து வருகிறது. கொரோனா தடுப்புப் பணியில் தங்கள் இன்னுயிரை ஈந்த மருத்துவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக 25 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக 30 ஆயிரம் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட வலுவான மருத்துவக் கட்டமைப்பு மேலும் வலிமைபெற தனது அரசு உழைக்கும் என்பதையும் அறிவித்துள்ளார் முதலமைச்சர்.

கொரோனா குறித்த ஊரடங்கு கட்டுப்பாடு போட்ட முதலமைச்சர், அது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் மேற்கொள்ளும்போது, “நம்முடைய மருத்துவர்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனாவை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். இதற்கு மேலும் அவர்களுக்கு சுமையை ஏற்படுத்த முடியாது, கூடாது” என்று அக்கறையுடன் சொன்னார்கள்.

அதே அக்கறையுடன் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினார்கள். தமிழ்நாட்டில் 39,392 ஆக்சிஜன் வசதி படுக்கைகளும், 26,717 சாதாரண படுக்கைகள், 6,003 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் காலியாக உள்ளன. அந்தளவுக்கு மருத்துவக் கட்டமைப்பு தமிழகத்தில் தயாராக உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மையங்களில் 59,719 படுக்கைகள் காலியாக உள்ளன.

“மக்கள் நலன் விரும்பும் மருத்துவர்களால் எந்தத் தொற்றையும் வெல்ல முடியும்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

தமிழ்நாட்டு மக்களுக்கு மிகக் குறைவான தடுப்பூசிகளைத்தான் ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. அப்படி தரப்பட்ட அனைத்தும் செலுத்தப்பட்டுவிட்டது. தினமும் 8 லட்சம் தடுப்பூசிகள் போடும் அளவுக்கு மருத்துவக் கட்டமைப்புகள் நம் மாநிலத்தில் உள்ளது என்று மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லி இருக்கிறார்.

அதாவது நிர்வாகக் கட்டமைப்பு அந்தளவுக்கு இன்று நம் மாநிலத்தில் உள்ளது. அதனால் தடுப்பூசிகளை எவ்வளவு கூடுதலாக ஒன்றிய அரசு கொடுத்தாலும் அதைச் செயல்படுத்தும் வல்லமை கொண்டதாக அரசு உள்ளது. இவை அனைத்துக்கும் மகுடம் வைக்கும் வகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நலம் பெற்றவர்களுக்கு பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படுமானால் அது பற்றிய ஆலோசனை வழங்குவதற்காக, சிகிச்சை அளிப் பதற்கான மையம் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. அத்தகைய மையம் நேற்றைய தினம் சென்னையில் முதன் முதலாகத் திறக்கப்பட்டும்விட்டது. கொரோனாவுக்குப் பிந்தைய நல்வாழ்வு மையம் என்று இதற்குப் பெயர்.

இது கொரோனா காலமாக அடையாளப்படுத்தப்பட்டுவிடக் கூடாது. கொரோனாவை வென்ற காலமாக அடையாளப்படுத்த வேண்டும். மக்கள் நலன் காக்கும் அரசும் - மக்கள் நலன் விரும்பும் மருத்துவர்களும் இணைந்தால் எந்தத் தொற்றையும் வெல்லலாம் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள இந்திய மருத்துவர் தினம் உதவியாக இருக்கிறது. அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துகள்!

banner

Related Stories

Related Stories