முரசொலி தலையங்கம்

“காலங்கடந்து எடுக்கப்பட்ட மோடி அரசின் ‘உருமாறிய’ தடுப்பூசிக் கொள்கை” : முரசொலி தலையங்கம் குற்றச்சாட்டு!

‘உருமாறிய' கொரோனாவைப் போல ‘உருமாறிய' தடுப்பூசிக் கொள்கையை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

“காலங்கடந்து எடுக்கப்பட்ட மோடி அரசின் ‘உருமாறிய’ தடுப்பூசிக் கொள்கை” : முரசொலி தலையங்கம் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘உருமாறிய' கொரோனாவைப் போல ‘உருமாறிய' தடுப்பூசிக் கொள்கையை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காலங்கடந்து எடுக்கப்பட்டுள்ளதாக இருந்தாலும் இந்த முடிவு வரவேற்கத் தகுந்தது. கொரோனா என்ற பெருந்தொற்று நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிய அரசு நிதியாலும் - மருத்துவத்தாலும் கைகழுவி விட்ட நிலையில் ஏற்பட்ட மகத்தான மனமாற்றம் என்றுதான் இதனைச் சொல்ல முடியும்!

பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு கோடி கோடி - லட்சம் கோடி - ஆயிரம் கோடி என்று வார்த்தைகளில் பூஜ்யங்களை அள்ளிவிட்டார்களே தவிர - நிதியை தந்தபாடில்லை. தடுப்பூசிதான் அனைவருக்குமான மிக முக்கியமான காவல்காரன் என்ற நிலையில் அதனையும் முழுமையாக தயாரிப்பில் இறங்கவில்லை.

தயாரித்ததையும் பெரும்பாலும் வெளிநாட்டுக்கு அனுப்பினார்கள். ஒன்றிய அரசு வாங்கும் தடுப்பூசிக்கு ஒரு விலை போட்டார்கள். மாநிலங்களுக்கு கூடுதல் விலை போட்டார்கள். தடுப்பூசி போதிய அளவு கிடைக்கவில்லை என்றதும் நீங்களே வெளியில் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள். தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வெளிநாடுகளில் நேரடியாக கொள்முதல் செய்வதற்கும் விடவில்லை. இவர்களும் கொள்முதல் செய்து தரவுமில்லை. இந்தநிலையில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய நெருக்கடியை மோடி அரசு சந்தித்தது.

“காலங்கடந்து எடுக்கப்பட்ட மோடி அரசின் ‘உருமாறிய’ தடுப்பூசிக் கொள்கை” : முரசொலி தலையங்கம் குற்றச்சாட்டு!

அடுத்த ஆண்டு ஐந்து மாநிலத் தேர்தல் வரப்போவதை ஒட்டி கடந்த ஒரு வாரமாக மிக நீண்ட ஆலோசனையில் இருந்தார் மோடி. தடுப்பூசி தட்டுப்பாடு என்பது அந்த மாநிலத் தேர்தல்களில் எதிராக மாறிவிடக்கூடும் என்று அப்போது சொல்லப்பட்டது. தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களில் மிக முக்கியமானது உத்தரப்பிரதேசம். அந்த மாநிலத்தை இழந்து விடக்கூடாது என்று அங்கு பேசப்பட்டுள்ளது.

மேலும், உத்தரப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் மோடி தலைமைக்கு எதிராக பா.ஜ.க.வுக்குள் உள்கட்சி மோதலும் அதிகமாக வெடித்து வருகிறது. இவை அனைத்தையும் எதிர்கொள்ள தடுப்பூசி மூலமாக தனது தலையைக் காப்பாற்றிக் கொள்ள மோடி திட்டமிட்டு அறிவித்ததுதான் இந்த புதிய தடுப்பூசி கொள்கை ஆகும்.

எப்போதோ அறிவித்து இருக்க வேண்டிய தடுப்பூசிக் கொள்கையை இப்போதாவது அறிவித்தாரே என்று நம்மை நாமே ஆறுதல்படுத்திக் கொள்ளவேண்டியதுதான். அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசிகளை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கடந்த ஜனவரி மாதமே வலியுறுத்தி இருந்தன. ஆனால் ஏப்ரல் 11 முதல் 14 வரையிலான நான்கு நாட்களும் தகுதிவாய்ந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார் மோடி. ஆனால், தேவையான தடுப்பூசிகள் இருந்ததா என்றால் இல்லை!

தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளலாம் என்பதில் தொடங்கி பல்வேறு குழப்பமான அறிவிப்புகளை மத்திய அரசு செய்தது. தடுப்பூசி முழுமையாக இல்லையா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியபோது, “இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு எதுவும் இல்லை'' என்றும், “எதிர்க்கட்சிகள் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்கின்றன” என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கூறினார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் நிலையில் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா எதற்காக ஏற்றுமதி செய்யவேண்டும்? இரண்டே இரண்டு தடுப்பூசிகள் தவிர மற்ற தடுப்பூசிகளுக்கு அனுமதி தரக் காலதாமதம் செய்தது மோடி அரசு. இவை அரசியல் கேள்விகளாக மட்டுமில்லை, உச்சநீதிமன்ற நீதிபதிகளே கேள்வி எழுப்பினார்கள்.

உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் வருமாறு:

1. தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு என்ன கொள்கை வகுத்துள்ளது?

2. மத்திய அரசு குறைந்த விலைக்கு தடுப்பூசிகளை வாங்கும் நிலையில், மாநிலங்களுக்கு மட்டும் அதிக விலை நிர்ணயித் திருப்பது ஏன்?

3. மாநிலங்கள் அவர்களாகவே சமாளித்துக் கொள்ளட்டும் என்று மத்திய அரசு விட்டுவிடப்போகிறதா?

4. உடனே தடுப்பூசிக் கொள்கை ஒன்றை வகுத்து அதனை மாநிலங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

5. தடுப்பூசிக்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யாவிட்டால் தட்டுப்பாடு வரும்போது, ரூ.2,000 வரை கூட வசூலிக்கப்படலாம். ரெம்டெசிவீர் மருந்து பற்றாக்குறை நிலவியபோது அதன் விலை உச்சத்துக்குச் சென்றுள்ளது ஏன்?’’ என்று நீதிபதிகள் கடந்த மே மாதம் இறுதியில் கேள்வி எழுப்பினார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் இப்படி சரமாரியான பல கேள்விகளை மத்திய அரசின் வழக்குரைஞரை நோக்கிக் கேட்டுள்ளனர். அமர்வின் தலைவராக உள்ள ஜஸ்டீஸ் டி.ஒய்.சந்திரசூட், ‘‘மத்திய அரசுக்கு உதவத்தான் நாங்கள் இத்தனை கேள்விகளைக் கேட்கிறோம்; தவறை ஒப்புக்கொள்வதுதான் ஓர் அரசுக்குத் துணிவு, பெருமையும்கூட! தனிப்பட்ட எனது உடல்நலத்தை விட நாட்டு மக்களின் பாதுகாப்பே முக்கியம்‘’ என்று கூறினார். அதன் பிறகும் ஒன்றிய அரசு மனம் மாறவில்லை.

செங்கற்பட்டில் 6 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் தொழிற்சாலையை இயக்கி, தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்குவதற்கு, தி.மு.க அரசு எடுத்த முயற்சிகள் அனைவரும் அறிந்ததுதான். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் பாரபட்சமாக இருப்பதை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி, பா.ஜ.க அல்லாத 11 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில்தான் தடுப்பூசிக்கான புதிய கொள்கையை மோடி அரசு வகுத்துள்ளது. நாட்டிலுள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் ஒன்றிய அரசே இலவசமாக தடுப்பூசியை செலுத்த உள்ளது என்றும், தடுப்பூசிகளை ஒன்றிய அரசே 75 சதவிகிதம் கொள்முதல் செய்கிறது என்றும், தடுப்பூசிகளை ஒன்றிய அரசே மாநிலங்களுக்கு இலவசமாக தரும் என்றும் வரும் 21 முதல் தடுப்பூசி தரப்படும் என்றும், மேலும் 3 தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் பிரதமர் சொல்லி இருக்கிறார். இவை அவரது கடந்த காலச் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம் ஆகும்!

banner

Related Stories

Related Stories