முரசொலி தலையங்கம்

செங்கல்பட்டு To டெல்லி.. தடுப்பூசி பெறுவதற்கு சீரிய முயற்சி எடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் : முரசொலி!

தடுப்பூசியை பல்வேறு வழிமுறைகளில் பெறுவதற்கான முயற்சிகளில் தமிழக அரசு முனைந்துள்ளது எனமுரசொலி தலையங்கம் புகழாரம் சூட்டியுள்ளது.

செங்கல்பட்டு To டெல்லி.. தடுப்பூசி பெறுவதற்கு சீரிய முயற்சி எடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

செங்கற்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை தங்களுக்கு குத்தகைக்குத் தர வேண்டும் என்று டெல்லிக்குப் படையெடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எத்தகைய நெருக்கடி மிகுந்த நேரம் இது என்பதை இந்த முயற்சி காட்டுகிறது. எத்தகைய துணிச்சல் மிக்க ஆட்சி இது என்பதும் இதன் மூலம் தெரிகிறது.

கொரோனாவை வெல்வதற்கான மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாக தடுப்பூசி உள்ளது. தடுப்பூசியை நாட்டு மக்கள் அனைவருக்கும் செலுத்தும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு. ஆனால் போதுமான அளவு தடுப்பூசியை ஒன்றிய அரசு தந்திருக்கிறதா என்றால் - இல்லை. இதனை ஒன்றிய அரசால் மறுக்க முடியாது.

தடுப்பூசி தயாரிக்க இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி தந்ததும் - தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை இந்திய மக்களுக்கு வழங்காமல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததும் தான் இன்றைய தட்டுப்பாட்டுக்குக் காரணம். இதற்கு முற்றிலுமாகப் பொறுப்பேற்க வேண்டியது பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான்.

செங்கல்பட்டு To டெல்லி.. தடுப்பூசி பெறுவதற்கு சீரிய முயற்சி எடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் : முரசொலி!

இந்த நிலையை வெறுமனே விமர்சனம் மட்டுமே செய்து கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால்தான் தடுப்பூசியை பல்வேறு வழிமுறைகளில் பெறுவதற்கான முயற்சிகளில் தமிழக அரசு முனைந்துள்ளது.

* மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள்.

* தடுப்பூசியைக் கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தம்.

* தமிழகத்தில் தடுப்பூசியை உற்பத்தி செய்ய டிட்கோ - மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.

* முடங்கிக் கிடக்கும் தடுப்பூசி ஆலைகளைத் தூசி தட்டி மீட்டெடுப்பது. - ஆகிய நான்கு முனைகளில் தடுப்பூசித் தேவையில் தன்னிறைவு பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முனைப்புக் காட்டி வருகிறார்.

இந்த நிலைமையில் செங்கற்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை மீட்டெடுக்க முதல்வர் முயற்சி செய்து வருகிறார். இதுவரை 700 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்து இந்த மையத்தை உருவாக்கி உள்ளது. ஆனால் ஆறு ஆண்டுகளாக சும்மா கிடக்கிறது. இதனை இரண்டு நாட்களுக்கு முன்னால் நேரில் சென்று முதலமைச்சர் பார்வையிட்டார். இதனை மத்திய அரசு ஏற்று நடத்தினால் தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் தடுப்பூசியை நம்மால் வழங்க முடியும். ஆனால் ஒன்றிய அரசின் அலட்சியத்தால், அக்கறையின் மையால் மூடிக்கிடக்கிறது. முடங்கிக் கிடக்கிறது.

செங்கற்பட்டில் இருப்பது நவீன மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட நிறுவனம் ஆகும். இது மத்திய சுகாதாரத் துறைக்குக் கீழ் வரும் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் மூலம் நிறுவப்பட்டது ஆகும். ஆனால் இதனைப் பயன்படுத்தாமலேயே வைத்திருக்கிறார்கள். 700 கோடியில் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில்தான் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான கூடுதல் நிதியைத் தராமல் போட்டு வைத்துள்ளார்கள். இதில் தனியாரைப் பங்குதாரராக்க ஒன்றிய அரசு முயற்சித்ததாகவும்; யாரும் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழகத்துக்கு அந்நிறுவனத்தைக் குத்தகைக்குக் கொடுங்கள் என்று குரல் கொடுத்துள்ளார் முதல்வர்.

செங்கல்பட்டு To டெல்லி.. தடுப்பூசி பெறுவதற்கு சீரிய முயற்சி எடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் : முரசொலி!

“ஐ.வி.சி நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தையும் மாநில அரசுக்குக் குத்தகையாக வழங்க வேண்டும். அதை இயக்க முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். தகுதியான தனியார் பங்குதாரரை மாநில அரசு அடையாளம் கண்டு தடுப்பூசி மருந்தைத் தயாரிக்க உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கும். தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கியதும் மத்திய அரசின் முதலீட்டை மீட்பதற்கான நிதி அடிப்படையிலான ஏற்பாட்டைச் செய்து கொள்ளலாம்” என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தக் கடிதத்தை தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கழகப் பொருளாளருமான டி.ஆர்.பாலு, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகிய இருவரும் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலை நேற்றைய தினம் சந்தித்துக் கொடுத்துள்ளார்கள். பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தை அமைச்சர் பெற்றுக் கொண்டுள்ளார்.

இது குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக பியூஸ் கோயல் கூறியதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். “செங்கற்பட்டில் தடுப்பூசி தயாரிப்பு தொடங்கப்பட்டால் முதல் 6 மாதத்தில் 2 கோடி தடுப்பூசியும், அடுத்த ஓராண்டில் 8 கோடி தடுப்பூசியும் தயாரிக்க முடியும்” என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதில் இருந்து இந்த நிறுவனம் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் டெல்லிக்குப் படையெடுப்பு நடத்தியுள்ளது தமிழக அரசு.

இது மாநில சுயாட்சிக் குரல் மட்டுமல்ல, மக்களின் உயிர்காக்கும் குரல்! இந்த நெருக்கடியான நிலையில் பா.ஜ.க. அரசின் சிந்தனையில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். “கொரோனா தொற்றுச் சூழலில் நமக்கே அதிகத்தேவை இருந்தும் 123 நட்பு நாடுகளுக்கு மருந்துகளை விநியோகித்துள்ளோம்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் சொல்லி இருப்பது இந்தியாவுக்குப் பெருமையல்ல; போலிப் பெருமை ஆகும்.

செங்கல்பட்டு To டெல்லி.. தடுப்பூசி பெறுவதற்கு சீரிய முயற்சி எடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் : முரசொலி!

‘தனக்குப் போகத்தான் தானம்’ என்பார்கள். தாயைப் பட்டினி போட்டுவிட்டு ஊருக்கு அன்ன தானம் செய்வதால் எந்தப் புண்ணியமும் ஏற்படப் போவதில்லை. அதனை பா.ஜ.க. அரசு உணர்ந்தாக வேண்டும். அதேபோல் மற்ற தடுப்பூசி நிறுவனங்களும் இந்தியாவுக்குள் வரத் தடை இருக்கக் கூடாது. அந்தத் தடைகளை விலக்க வேண்டும். மற்ற தடுப்பூசிகள் வந்தால் இன்று லாபம் பார்த்துக் கொண்டு இருக்கும் நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று மத்திய அரசு நினைக்குமானால் அது மக்களை மறந்த அரசாகத்தான் இருக்க முடியும்.

ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா ஆகிய தடுப்பூசி நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழையும் அனுமதிக்காக பல மாதங்களாகக் காத்திருக்கின்றன. அவர்களுக்கான அனுமதிக்கு முன்னுரிமை தர வேண்டும். ‘இந்தியத் தடுப்பூசித் திட்டம் குறித்த உண்மைகள் மற்றும் புரளிகள்' என்ற தலைப்பில் இரண்டு நாட்களுக்கு முன் ஒன்றிய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘சர்வதேச கொரோனா தடுப்பூசி வாங்குவது என்பது அலமாரியில் வைப்பதற்கான அலங்காரப் பொருள்களை வாங்குவதைப் போன்றதல்ல' - என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையேதான் நாமும் சொல்கிறோம். தடுப்பூசி என்பது அலங்காரப் பொருள் அல்ல. அவசிய, உயிர்காக்கும் பொருள். அதில் அலட்சியம் வேண்டாம்.!

banner

Related Stories

Related Stories