முரசொலி தலையங்கம்

“மோடி அரசின் ஆதிக்க மனோபாவம்.. அம்பலப்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கேள்வி” : முரசொலி தலையங்கம்!

நல்வாழ்வுத் துறை அமைச்சரின் வினாவில் உள்ள நியாயம் பளிச்செனதெரிவதன் மூலம் மத்திய அரசின் ஆதிக்க மனோபாவம் அம்பலப்பட்டுவிட்டது.

“மோடி அரசின் ஆதிக்க மனோபாவம்.. அம்பலப்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கேள்வி” : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த மே 24 ஆம் தேதி சென்னை கிண்டியில் அமைந்துள்ள அரசு கொரோனா மருத்துவமனையில் கூடுதலாக 104 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதுபோது அவர் செய்தியாளர்களிடம் சில கருத்துகளை கொரோனா பணிகள் சம்பந்தமாகப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் குஜராத்தைக் காட்டிலும் தமிழகத்திற்கு 10 சதவிகிதம் குறைவாகத் தடுப்பூசி வழங்கப்பட்டது குறித்து எடுத்துக் கூறியிருக்கிறார்.

தடுப்பூசிகளின் முக்கியத்துவம் பற்றி ஒரு பக்கம் மத்திய அரசு எடுத்துக் கூறிக் கொண்டே ஒரு மாநிலத்திற்கு அதிகமாகவும், மற்றொரு மாநிலத்திற்கு குறைவாகவும் அனுப்புவது சரியல்ல. அமைச்சர் இது பற்றி செய்தியாளர்களிடம் கூறுகிறபோது மிகுந்த கவனமாகப் பேசியிருக்கிறார். “நாம் மத்திய அரசைக் குறைச் சொல்ல வேண்டும் என்பதற்காக இதைக்கூறவில்லை. அப்படிக்கூறுவதற்குரிய நேரமும் இதுவல்ல. ஆனால் நாம் சொல்வதில் ஓர் உண்மை பொதிந்து இருக்கிறது.

குஜராத்தின் மக்கள் தொகை 6.37 கோடி; அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி 16.4 சதவிகிதம். ஆனால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.38 கோடி; அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தடுப்பூசி 6.4 சதவிகிதம் என்று கூறியிருக்கிறார். இது 10 சதவிகிதம் கூடுதலான தடுப்பூசிகளை குஜராத் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருப்பதைக் காட்டுகிறது. இது மத்திய அரசின் ஆதிக்க மனோபாவத்தைக் காட்டுகிறது. ஆகவே தான் அமைச்சர் மத்திய அரசின் இந்தப் போக்கைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

“மோடி அரசின் ஆதிக்க மனோபாவம்.. அம்பலப்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கேள்வி” : முரசொலி தலையங்கம்!

மத்திய அரசு இந்தியா முழுமையும் உள்ள கொரோனாவின் தாக்குதலை நன்கு உணர்ந்து இருக்கிறது. நாடு தழுவிய புள்ளி விவரங்களை வெளியிடுகிறது. அப்படி இருக்கும் போது மக்கள் தொகையின் அடிப்படையில் அல்லவா தடுப்பூசி மருந்துகளை பிரித்து அளிக்க வேண்டும். அப்படி அல்லாமல் 10 சதவிகிதம் கூடுதலாக வழங்கி இருப்பது குஜராத்திற்கு எதற்காக? அது பிரதமர் மாநிலம் என்பதற்காகத்தான்!

இப்படிப் பெருந்தொற்று இருக்கிற காலத்தில் மத்திய அரசு நடந்து கொள்வது தனது ஆதிக்க மனோபாவத்தையே இது காட்டுகிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அதனால் தான் இதனை மிகுந்த கவலையோடு மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடையே சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மேலும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை அதிகரித்து வரும் செய்திகளும் வெளியாகி வருகின்றன. மறுபக்கம் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பரப்புரை செய்யப்படும் நேரத்தில் மத்திய அரசு 10 சதவிகிதம் குறைவாக தடுப்பூசிகளை அனுப்பி இருப்பது வருந்தத்தக்கது ஆகும். நாம் இங்கே தடுப்பூசிகளின் வரவுகளைக் கொண்டே மக்களுக்குச் செலுத்தி வருகின்றோம். அமைச்சரின் கூற்றுப்படி இதுவரை 77 இலட்சம் ‘டோஸ்கள்’ தடுப்பூசிகளை நாம் பெற்று இருக்கின்றோம். 70 இலட்சம் பேருக்கு செலுத்தி இருக்கின்றோம்.

“மோடி அரசின் ஆதிக்க மனோபாவம்.. அம்பலப்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கேள்வி” : முரசொலி தலையங்கம்!

இன்னும் தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் கோடி கணக்கில் இருக்கின்றனர். தலைவர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல தடுப்பூசி போடும் பணி ஓர் இயக்கமாக செயல்பட வேண்டி இருக்கிறது. விரிவுப்படுத்தப்பட வேண்டி இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து தடையின்றி முறையாக மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கை. மத்திய அரசு இதைப் போன்ற நேரத்தில் நடுநிலையுடன் செயல்படுவது மிக முக்கியமான ஒன்றாகும்.

இந்தியா முழுமையும் பாதிக்கப்பட்டிருப்பதைக் கணக்கில் எடுத்து மத்திய அரசினர் செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றனர். இதில் ஆதிக்க மனோபாவத்தையோ பெரியண்ணன் மனோபாவத்தையோ மத்திய அரசு காட்டக்கூடாது என்றே கேட்டுக் கொள்கின்றோம். நாமோ அமைச்சரோ மட்டுமில்லை. சென்னை உயர்நீதிமன்றமும் மற்றொரு கோணத்தில் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கில் அவ்வப்போது மாநில, மத்திய அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வருகிறது. அவ்வாறு ஒரு கருத்தை மே 24 ஆம் தேதியே உயர்நீதிமன்றமும் கூறியிருக்கிறது.

“மத்திய அரசு தமிழகத்துக்கு குறைவான அளவில் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்துள்ளது அதிருப்தியை அளிக்கிறது. தடுப்பூசி உற்பத்தி வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் ”உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவுரையையும் மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். ஆக, நல்வாழ்வுத் துறை அமைச்சரின் வினாவில் உள்ள நியாயம் பளிச்செனதெரிவதன் மூலம் மத்திய அரசின் ஆதிக்க மனோபாவம் அம்பலப்பட்டுவிட்டது. இனி, எதிர் காலத்தில் மத்திய அரசு தடுப்பூசிப் போன்ற பகிர்வுப் பணிகளில் நியாயத்தின் பாற் நிற்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

banner

Related Stories

Related Stories