முரசொலி தலையங்கம்

“தலைவர் முதல்வராகி விட்டார்” - முத்தமிழறிஞர் வழியில் மு.க.ஸ்டாலினுக்கு முரசொலியின் வாழ்த்து மழை!

தமிழ்நாட்டுக்காக மொத்தமாகச் சிந்திக்க அவர் ஒருவராகவே இருக்கப் போகிறார். இப்படி ஒரு உயரத்தை மு.க.ஸ்டாலின் அடைவார் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கே நன்கு தெரியும் என முரசொலி தலையங்கம் வாழ்த்து.

“தலைவர் முதல்வராகி விட்டார்” - முத்தமிழறிஞர் வழியில் மு.க.ஸ்டாலினுக்கு முரசொலியின் வாழ்த்து மழை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தலைவர், முதல்வர் ஆகிவிட்டார்!

அந்த முதல்வரை தலைவர் பாராட்டுகிறார்!

இந்த இடத்தில் தலைவர் என்றால் முத்தமிழறிஞர் கலைஞர்!

முதல்வர் என்றால் தளபதி மு.க.ஸ்டாலின்!

முத்தமிழறிஞர் கலைஞர், இந்த தமிழ்நாட்டுக்குச் செய்த நன்மைகளின் பட்டியலை ‘முரசொலி'யில் எட்டுப்பக்கமும் எழுதலாம். அதில் முக்கியமான நன்மை, தளபதி மு.க.ஸ்டாலினை நாட்டுக்குத் தந்தது! இயக்கமோ, கொள்கையோ, தத்துவமோ அடுத்து எடுத்துச் செல்ல தனியான சரியான ஆளுமைகள் இல்லாமல் போனதால்தான் தொய்வைச் சந்தித்தன.

அடுத்து வருபவர் இன்னும் வீரியமானவராக இருந்தால், அந்த இயக்கமும் தத்துவமும், கொள்கையும் இன்னும் வலிமை பெறும். அதற்கு கண்ணுக்கு முன்னால் பார்க்கும் கம்பீரமான உதாரணம் திராவிட முன்னேற்றக் கழகம்! மனித உதாரணமாக எழுந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின். மகத்தான மனிதராக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்! இதோ இன்று தமிழக முதல்வராக செம்மாந்து நிற்கிறார். கோட்டையில் கோலோச்சப் போகிறார். தமிழகத்தை வழிநடத்தப் போகிறார். தமிழினத்தின் ஒற்றைச் சிந்தனையாக இருக்கப் போகிறார் .

தமிழ்நாட்டுக்காக மொத்தமாகச் சிந்திக்க அவர் ஒருவராகவே இருக்கப் போகிறார். இப்படி ஒரு உயரத்தை மு.க.ஸ்டாலின் அடைவார் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கே நன்கு தெரியும். அதனால் தான் "ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு" என்று சொன்னார் கலைஞர் அவர்கள். உழைப்பின் சிகரமாக இருக்கக் கூடிய அவரே, இவரைப் பார்த்து ‘உழைப்பு, உழைப்பு’ என்று சொல்கிறார் என்றால், அதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்?" இந்த சமுதாய மேன்மைக்காக, எழுச்சிக்காக நான் என்ஆயுள் இருக்கும்வரை பாடுபடுவேன். அப்படியானால், அதற்குப் பிறகு..? என்ற கேள்விக்குப் பதில் தான்; தம்பி ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது'' என்றும், "திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தலைவராக முன்மொழியக்கூடிய ஒருவாய்ப்பு எனக்குத் தனிப்பட்ட முறையில் வருமேயானால் அந்த வாய்ப்பை நான்பயன்படுத்தி, இப்போது சொல்கிறேன்; ஸ்டாலினைதான் முன்மொழிவேன்" என்றும், தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

தலைவர்களுக்கு எல்லாம் தலைவரான அவரே, ‘இவரைத் தான் தலைவராக முன்மொழிவேன்’ என்று சொன்னதை விட வேறு என்ன பெருமை வேண்டும்?" உள்ளாட்சித் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாட்டைப் பார்க்கும் போது எனக்கே உள்ளாட்சித் துறை அமைச்சராக ஆகிவிடலாமா என்ற யோசனை வருகிறது" என்று சொன்னார் கலைஞர் அவர்கள். அமைச்சர்களுக்கு எல்லாம் அமைச்சர் அவர். அவரே இப்படிச் சொல்வதை விட வேறு என்ன பெருமை வேண்டும்?" ஸ்டாலினை மகனாகப் பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்" என்றார் கலைஞர் அவர்கள். அனைத்துப் பெருமைகளையும் தனது அறிவால், திறமையால் பெற்ற கலைஞரே சொன்ன பிறகு வேறு என்ன பாராட்டு வேண்டும்?

பெரம்பூர் பாலம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் கலைஞர் அவர்கள், "மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் மட்டுமல்ல; எனக்குத் துணையாக இருக்கிற அமைச்சர்" என்று பாராட்டினார்கள். எல்லாவற்றையும் தானே செய்யும் அசாத்தியமான திறமை படைத்த கலைஞர் அவர்களே, தளபதியை துணையாக இருப்பவர் என்று சொன்ன பிறகு என்ன பாராட்டு வேண்டும்?" நான் என்ன கருதுகிறேன், என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்துகொண்டு அந்த நினைப்பை நிகழ்த்திக் காட்டும் திறமை படைத்தவர் ஸ்டாலின்" என்றும்; கலைஞர் அவர்கள் பாராட்டினார்கள். தான் என்ன நினைக்கிறோம் என்பதை அடுத்தவர் யோசிக்க முடியாதவாறு செயல்பட்ட கலைஞர் அவர்களே இப்படிப் பாராட்டினார்கள் என்றால் வேறு என்ன பாராட்டு வேண்டும்?"

நான் எனது 26வது வயதிலே ஒரு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் வாய்ப்பு பெற்றேன். ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பு 50வது வயதில்தான் கிடைத்திருக்கிறது. இவ்வளவு தாமதமாக கிடைப்பதற்கு காரணம், எதுவும் அவசரமாக, விரைவாகக் கிடைப்பதை விட தாமதமாகக் கிடைத்தால் தான் அதற்கு வலு அதிகம். அந்த வலு உனக்குச் சேர்ந்திருக்கிறது'' என்று குறிப்பிட்ட கலைஞர்'' எல்லோரும் உன்னை அங்கீகரித்ததாக உன்னைக் கருதிக்கொண்டு நீ நடைபோட்டு விடக்கூடாது. எங்கிருந்து உனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையோ அதைத் தெரிந்துகொண்டு எங்கும் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் அணுகு முறையை நீ கற்றுக் கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்கள் பேசினார்கள்.

இதோ தலைவர் கலைஞர் அவர்களே! தமிழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற முதலமைச்சராக உங்களால் வார்ப்பிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நம்மை விட்டு மறைந்த போது, பேரறிஞர் பெருந்தகைக்கு அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தடங்கல் ஏற்பட்டது. தமிழ்ச் சமூகத்தின் பத்தரை மாற்றுத் தங்கமாம் கலைஞருக்கு கடற்கரை நீங்கலான மாற்று இடம் பற்றிய ஒரு சிறுதுளி யோசனை கூட இல்லாமல் உறுதியாக இருந்து சட்டத்தின் வலிமையால் அந்த இடத்தைப் பெற்றுத் தந்தது மு.க.ஸ்டாலினின் முதல் வெற்றி! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழகத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியைத் தவிர அனைத்தையும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வென்று காட்டி உள்ளது. அது இரண்டாவது வெற்றி!

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக கம்பீரமாக திராவிட முன்னேற்றக் கழகம் அமர்ந்துள்ளது. இது மூன்றாவது வெற்றி! தமிழகச் சட்டமன்றத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியிடம் இருந்து 12 தொகுதிகளைப் பறித்துத் தந்து, தமிழக சட்டமன்ற வரலாற்றில் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் எதிர்க்கட்சியாக நம்மை உட்கார வைத்தார். இது நான்காவது வெற்றி! இதோ இப்போது கழகத்தை ஆறாவது முறையாக அரியணையில் ஏற்றுவதுதான் வெற்றியின் உச்சம். அவரை வாழ்த்திச்சொல்ல வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே முத்தமிழறிஞரே சொல்லி விட்டார்கள்! முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னதை வழிமொழிந்து நாமும் வாழ்த்துவோம்!

banner

Related Stories

Related Stories