முரசொலி தலையங்கம்

இந்தியாவின் முகம் மாறப்போவதற்கான முன்னோட்ட நாளாக அமைந்தது ‘மே 2’ - முரசொலி தலையங்கம்!

அனைத்து எதிர்க்கட்சிகளையும் வீழ்த்திவிட்டோம் என்று ஒரு பொய்யைக் கட்டமைத்தது. இனி பா.ஜ.க. மட்டும்தான் மத்தியில் மட்டுமல்ல, மாநிலங்களையும் ஆளப் போகிறது என்ற தோற்றத்தையும் கட்டமைத்தது.

இந்தியாவின் முகம் மாறப்போவதற்கான முன்னோட்ட நாளாக அமைந்தது ‘மே 2’ - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு கிடைத்துள்ள வெற்றி என்பது இந்தியாவுக்கு ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. இந்திய அரசியலை மாற்றும் சக்தி இந்த மூன்று தேர்தல் முடிவுகளுக்கும் உள்ளது. அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருக்கு அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் வாழ்த்துகளைச் சொல்லி இருக்கிறார்கள்.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, லாலு கட்சி, முலாயம் கட்சி, சிவசேனா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், ஜெகன் மோகன் இப்படி அகில இந்திய கட்சிகளின் தலைவர்களும், மாநிலக் கட்சிகளின் தலைவர்களும், மாநில முதலமைச்சர்களும் தி.மு.க. தலைவருக்கு வாழ்த்துகளைச் சொல்லி வருவதற்கான அடிப்படையான காரணம், இம்மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் பா.ஜ.க. நீங்கலான அரசியல் கட்சிகளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி மலர்ந்ததற்கு பின்னால் சமத்துவம் - சமூக நீதி -மதச்சார்பின்மை ஆகிய தத்துவங்கள் முழுக்க முழுக்க சிதைக்கப்பட்டது மட்டுமல்ல, ஒருவிதமான ஒற்றையாட்சித் தன்மையை நோக்கியதாக மத்திய அரசை மாற்றி விட்டார்கள். இனி இந்தியா என்பது பா.ஜ.க. தான் என்ற மாயாவாதம் தோற்றுவிக்கப்பட்டது. இது மாயாவாதம் தான். முழு உண்மை அல்ல! நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெரும்பான்மையான இடங்களைவென்று விட்டோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வை மக்கள் அவர்களது சொந்த மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து புறக்கணித்துக்கொண்டே வருகின்றனர்.

இந்தியாவின் முகம் மாறப்போவதற்கான முன்னோட்ட நாளாக அமைந்தது ‘மே 2’ - முரசொலி தலையங்கம்!

கடைசியாக இந்தியாவில் நடந்த 11 மாநில தேர்தல்களில் 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிலும் ஒன்று பெரும்பான்மையில்லாமல் ஜனநாயக் ஜனதா கட்சியின் பலத்தால் அரியானாவில் ஆட்சியைப் பிடித்தது. டிசம்பர் 2018: ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, சட்டீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி! மே 2019: சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் தோல்வி. அருணாச்சல் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்தது பா.ஜ.க.

அக்டோபர் 2019: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தோல்வி. ஹரியானாவில் பெரும் பான்மையில்லாமல் ஜனநாயக் ஜனதா கட்சியின் பலத்தால் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. டிசம்பர் 2019: ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி. 2020 : டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வி 1993ம் ஆண்டுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க.வால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. இந்தியாவுக்கு காவி வண்ணம் பூச நினைக்கும் பா.ஜ.க.வின் கனவு வெறும் கனவாகவே உள்ளது. இதைச் சொல்வதற்குக் காரணம், மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிட்டதால் மாநிலங்கள் அனைத்திலும் பா.ஜ.க.வின் ஆட்சிதான் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை பா.ஜ.க. உருவாக்க நினைத்தது.

அனைத்து எதிர்க்கட்சிகளையும் வீழ்த்திவிட்டோம் என்று ஒரு பொய்யைக் கட்டமைத்தது. இனி பா.ஜ.க. மட்டும்தான் மத்தியில் மட்டுமல்ல, மாநிலங்களையும் ஆளப் போகிறது என்ற தோற்றத்தையும் கட்டமைத்தது. இதன் உண்மைத் தன்மையை உணராமல் இந்தியாவும் நம்பியது. அந்த பொய்த் தகவலை தமிழகம், கேரளா, மேற்கு வங்காள மாநில தேர்தல் முடிவுகள் தகர்த்துவிட்டது. "ஸ்டாலின்கிராடாக மாறிய சென்னையிலும் வாட்டர்லூவாக மாறிய கொல்கத்தாவிலும் நேற்று விடப்பட்ட பெருமூச்சு, மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் பல எதிர்க்கட்சிகளுக்கு ஆக்சிஜனாக உருமாறியிருக்கிறது" என்று மூத்த பத்திரிக்கையாளர் முரளிதரன் காசிவிசுவநாதன் எழுதி இருப்பது முழு உண்மை.

"மே 2. இது மிக முக்கியமான நாள். தமிழ் நாட்டுக்கும், மேற்கு வங்கத்துக்கும் கேரளாவுக்கும், இது மற்றுமொரு 1967. அறிஞர் அண்ணாவும், அஜய் முகர்ஜியும், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் 1967இல் பெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகளால் உருவாக்கிய அரசியல் அடித்தளங்கள்தான் இன்று இந்த மாநிலங்களைக் காப்பாற்றியிருக்கின்றன. இந்தியாவையும் காப்பாற்றி வருகின்றன. மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலுங்கானா, ஆந்திரா, காஷ்மீர், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், பீஹார் ஆகிய மாநிலங்களில்தான் பா.ஜ.க. எதிர்ப்பரசியல் காலூன்றி நிற்கப்போகிறது.

இதற்கு இவர்களை ஒருங்கிணைக்கும் வாய்ப்பை மே 2 தந்திருக்கிறது. ஆனால் இந்தக் காரியம் நடைபெற வேறு ஒரு பாமரனின் உதவியும் தேவை. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பரிதாபத்துக்குரிய இந்துக் குடிமகன் ஒருவன்தான் வெறுப்பரசியலுக்கு இறுதியில் கொள்ளி வைக்கப்போகிறான். அவன் இப்போது எங்கோ ஒரு மூலையில் நேற்று எரித்த தன் தாயின் சிதைத் தீயை மனத்தில் சினத் தீயாக ஏற்றிக்கொண்டவாறு உறுமிக் கொண்டிருக்கிறான். நம்பி கழுத்தறுத்தவர்களின் மீது அதீத கோபத்தில் இருக்கிறான். யோகிகளின் சினத்தைவிட ஏழைகளின் சினம் பெரிது. இவனை அணியில் சேர்த்துக்கொண்ட பிறகுதான், 2024ல் களத்துக்கே போகவேண்டும்." என்றும் எழுதி இருக்கிறார் முரளிதரன்.

இதைத் தேர்தலுக்கு முன்னதாகவே சேலம் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியை மேடையில் வைத்துக் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். "ராகுல் காந்தி அவர்களே! தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றாகத் திரட்டி ஓரணியாக ஆக்கி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிட்டோம். அதனால் தான் மகத்தான வெற்றியைப் பெற முடிந்தது. முழுமையான வெற்றியை பெற முடிந்தது. அதுபோல நீங்களும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று சேருங்கள். அதுதான் என்னுடைய கோரிக்கை" என்று தி.மு.க. தலைவர் சொன்னார்கள். அந்தக் கோரிக்கையின் நியாயத்தையும், நம்பிக்கையையும் தமிழக, கேரள, மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் சொல்கிறது. நடந்து முடிந்தவை மூன்று மாநிலங்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் வழிகாட்டப் போகிறது! இந்தியாவின் முகம் மாறப் போவதற்கான முன்னோட்டம் இது!

banner

Related Stories

Related Stories