முரசொலி தலையங்கம்

ஸ்டெர்லைட் விவகாரம்: வார்த்தையாக பார்க்காதீர்கள்; வாக்கியமாகப் பாருங்கள் - முரசொலி தலையங்கம்!

பொத்தாம் பொதுவாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தி.மு.க. சம்மதம் தெரிவித்தது என்று சொல்வது குருட்டு வாதம் என முரசொலி குறிப்பிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரம்: வார்த்தையாக பார்க்காதீர்கள்; வாக்கியமாகப் பாருங்கள் - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு எதுவும் மாறிவிடவில்லை! "மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம், மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான். தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதை விட தெளிவான அறிவிப்பு என்ன இருக்க முடியும்? ஆக்ஸிஜன் தேவைக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்கலாம் என்பதில் சிலர் கொள்கை மாறுபாட்டைக் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்லி சமூக வலைத்தளங்களில் அவதூறு கிளப்பி வருகிறார்கள். அவர்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இந்த தேசம் மூச்சுத் திணறி வரும் தகவலாவது தெரியுமா? இந்த விவகாரமே எதற்காக எழுந்தது என்பதாவது அறிவார்களா? இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சுத்திணறி வடமாநிலத்தில் ஏராளமான மக்கள் இறக்கிறார்கள்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 21 ஆம் தேதி வேதாந்தா நிறுவனம் ஒரு மனுவை தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டது. இம்மனுவின் மீது நடந்த விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தமிழக அரசு வாதம் வைத்தது. தமிழக அரசே ஏற்று நடத்தினால் எங்களுக்கு மறுப்பு இல்லை என்று மத்திய அரசு சொன்னது.

ஸ்டெர்லைட் விவகாரம்: வார்த்தையாக பார்க்காதீர்கள்; வாக்கியமாகப் பாருங்கள் - முரசொலி தலையங்கம்!

அப்போது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு அமைப்புகளின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று சொன்னார். அரசே எடுத்து நடத்துவதில் எங்களுக்கு மறுப்பு ஏதும் இல்லை என்றார்கள் நீதிபதிகள். அரசின் கட்டுப்பாட்டில் அந்த ஆலை இருக்கிறது என்றால் மாநில அரசே ஏன் ஏற்று ஆக்ஸிஜன் தயாரிக்கக் கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இத்தகைய சூழலில் தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கனிமொழி தி.மு.க. தரப்பு வாதத்தை மிகத் தெளிவாகச் சொன்னார். ‘ஆலையை திறக்கலாம் என்று தி.மு.க. சொல்லிவிட்டது' என்று பொத்தாம் பொதுவாக இதனை பார்க்கக் கூடாது. கனிமொழி என்ன பேசினார் என்பதை அறியாமல் அரைவேக்காட்டுத்தனமாக சிலர் விமர்சிக்கிறார்கள். "நாம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை மறந்து விட முடியாது. அதில் 13 அப்பாவிகள் உயிரிழந்து, அந்தக் குடும்பங்கள் எல்லாம் இன்றும் நிலை குலைந்து நிற்கின்றன. தூத்துக்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பையும் நாம் புறக்கணித்து விட முடியாது"" என்பதைச் சொல்லிவிட்டுத் தான் ஆக்ஸிஜன் தேவைக்காக மட்டும் தற்காலிகமாக திறக்கலாம் என்று குறிப்பிட்டார்.

* வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காத்திட மனிதநேய அடிப்படையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம்.

* குறிப்பிட்ட காலவரம்பிற்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும்.

* ஆக்ஸிஜன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்பதை கண்காணித்திட, ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை

அதிகாரி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும். அக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் போராட்டக் குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிட வேண்டும்.

* ஸ்டெர்லைட் ஆலைக்கான இந்த அனுமதி தற்காலிகமானது.

* வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்கக் கூடாது.

* இப்போது ஆக்ஸிஜன் தயாரிக்க வழங்கப்படும் அனுமதியை எக்காரணம் கொண்டும் ஒரு முன்னுதாரணமாக வைத்து ஆலையை நிரந்தரமாகத் திறக்க அனுமதி கோரக்கூடாது என்று அரசு உத்தரவிலேயே தெளிவுபடுத்திட வேண்டும்.

* தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் தமிழக மக்களுக்குத் தேவையான அளவுக்கு இலவசமாக அளிக்க வேண்டும்.

* சொந்த மின்சாரத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது. அரசுதான் தரவேண்டும்.

இப்படி பல்வேறு நிபந்தனைகளை கனிமொழி தனது பேச்சில் குறிப்பிட்டார். இதில் முக்கியமான கருத்துக்கள்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக அதுவும் நான்கு மாதங்களுக்கு மட்டும் தமிழக அரசு மின்சாரம் வழங்கும் என்றும், தாமிர உற்பத்தி செய்யக் கூடாது, அது அனுமதிக்கப்படாது, நான்கு மாதம் கழித்து மின் இணைப்பு துண்டிக்கப்படும், ஆக்ஸிஜன் உற்பத்தி நீங்கலான மற்ற அலகுகள் இயங்க அனுமதிக்கப்படாது, இதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும், அதிகாரிகளுடன் பொதுமக்கள், சுற்றுச்சூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள், ஆலை எதிர்ப்பு குழுவினரும் இடம்பெறுவார்கள், இந்த ஆலையை இயக்குவது குறித்து இக்குழு முடிவெடுக்கும் என்று அனைத்துக் கட்சி கூட்டம் முடிவெடுத்துள்ளது.

இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளாமல், பொத்தாம் பொதுவாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தி.மு.க. சம்மதம் தெரிவித்தது என்று சொல்வது குருட்டு வாதம். தி.மு.கவை குறை சொல்வதற்கு ஏதாவது கிடைக்காதா என்ற சிலர் இதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் உற்பத்தியை தொடங்குவதற்கான கூட்டம் அல்ல அது. அதற்கான விவாதமும் இப்போது நடக்கவில்லை. தஞ்சாவூர் போனாலே பெரிய கோவிலுக்கு போயிருப்பார் என்று மொண்ணையாக நினைப்பதைப் போல ஸ்டெர்லைட் என்றாலே தாமிர உற்பத்தி என்று நினைப்பவர்களின் பார்வைக் கோளாறு இது. எதையும் வார்த்தையாக பார்க்காதீர்கள், வாக்கியமாகப் பாருங்கள்.

banner

Related Stories

Related Stories