முரசொலி தலையங்கம்

திருவள்ளுவரை வேதியராக்கி வர்ணாசிரம மேலடுக்கை காட்ட அனுமதிப்பதா? இதற்கு யார் பொறுப்பு? - முரசொலி தலையங்கம்

திருக்குறளில் வர்ணாசிரமம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. ஆக்கியோன் பற்றியும் எதுவும் இல்லை. ஆனால், பாடப்புத்தக படத்தில் திருவள்ளுவர் உருவம் மாறியது எப்படி? 

திருவள்ளுவரை வேதியராக்கி வர்ணாசிரம மேலடுக்கை காட்ட அனுமதிப்பதா? இதற்கு யார் பொறுப்பு? - முரசொலி தலையங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் 8-ஆம் வகுப்புக்குத் திருவள்ளுவர் - வாசுகி பற்றிய ஒரு பாடத்தை இந்தியில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்காகப் புத்தகத்தில் வண்ணத்தில் படம் போட்டு இருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு எதிரே ஒரு மனை போட்டு, அதன் மீது உணவு பரிமாறப்பட்டு அவர் உண்ணுவது போலவும், அருகே அவர் மனைவி வாசுகி அமர்ந்து பரிமாறுவது போலவும் அப்படம் வரையப்பட்டு இருக்கிறது.

திருவள்ளுவர் காவியுடைத்தரித்து இருக்கிறார். வேதியர் போல குடுமியும், ருத்திராட்சமும் அணிந்திருப்பது படத்தினில் தெரிகிறது. இப்பாடத்திற்கு ‘வாசுகியின் வினா’ எனத் தலைப்பு. இந்தியில் ‘வாசுகி காபிரஷ்ன்னா’ என்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. திருவள்ளுவரைப் பற்றி ஆதாரமற்ற ‘கதை’யின் ஒரு பகுதி அந்தப் பாடமாக அமைந்து இருக்கும் என்று எண்ணுகிறோம். ஆனால், அந்தத் திருவள்ளுவர் படம், நாம் இதுவரை ஓவியத்திலும், சிலையிலும் பார்த்தவராகத் தெரியவில்லை.

பாடப் புத்தகத்தில் ஒரு வேதியரை மாணவர்களுக்குத் திருவள்ளுவராகக் காட்டி இருக்கிறார்கள். கதை மட்டும் தமிழிலிருந்து மொழியாக்கம் செய்து இருப்பார்கள். பாடப் புத்தகப் படத்தில் நமக்கு அறிமுகமான திருவள்ளுவரைக் காணோம். இப்படம் பாடத்தில் இடம் பெற்று இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்து கழகத் தலைவர் ஸ்டாலின், ஆசிரியர் கி.வீரமணி, ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க.வின் நிறுவனத் தலைவர் இராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்? திருவள்ளுவருக்கு ‘ஆரிய வேடம்’ போட்டு விட்டார்கள், அதனால் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். நம் திருவள்ளுவரை அங்கே காணோம்.

(1) திருவள்ளுவர் எழுதியதாக, நமக்குத் திருக்குறள் எனும் நூல் மட்டுமே கிடைத்து இருக்கிறது. திருவள்ளுவரைப் பற்றிய வரலாறு எதுவும் நமக்குச் சான்றாதாரத்தோடு கிடைக்கவில்லை. 1831ம் ஆண்டும், 1834 ஆம் ஆண்டும் வெளியான திருக்குறளில் திருவள்ளுவர் பற்றிய வரலாறோ, கதையோ இல்லை. ஆனால்,1835ம் ஆண்டு வெளியான திருக்குறளில் விசாகப் பெருமாளையர், ‘ஆதி’ எனும் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கும் ‘பகவன்’ என்னும் பார்ப்பனருக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். அதில் ஒருவர் திருவள்ளுவர் என்று ‘அகவற்பா’வில் ஒரு கதையை எழுதி அதனைத் திருக்குறள் புத்தகத்தின் கடைசியில் சேர்த்துவிட்டார். ‘ஆதிபகவன்’ முதற் குறளில் இடம் பெற்று இருக்கும் சொற்கள். அதனைக் கொண்டு விசாகப் பெருமாளையர் ஒரு கதையையே பின்னிவிட்டார்.

மேலும், அவர் திருவள்ளுவர் ஒரு வைசியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். மயிலையில் வாழ்ந்தார் என்றும் எழுதினார். இவற்றையெல்லாம் நாமாக எழுதவில்லை. அயோத்திதாசப் பண்டிதர் கண்டறிந்து இவற்றை எழுதியிருக்கிறார். அது முதல் திருவள்ளுவருக்கு பூணூல் அணியச் செய்து அவரை ஒரு பார்ப்பனராக்கிவிட்டனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், இந்தக் கதை பெரும்பாலான நூல்களில் அச்சாகி உள்ளதை இன்றும் காணலாம். இது மட்டும் இல்லை. இதே பாணியில் திரைப்படங்கள் வெளிவந்தன. நாட்டிய நாடகம் நடிக்கப்பட்டது. திருக்குறளில் வர்ணாசிரமம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. ஆக்கியோன் பற்றியும் எதுவும் இல்லை.

ஆனால், பாடப்புத்தக படத்தில் திருவள்ளுவர் உருவம் மாறியது எப்படி? ஒரு கதைப் போக்கில் ஆதாரமற்ற செய்தி வரலாறாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, திருவள்ளுவரைக் குறிப்பிட்ட ஒரு வர்ணத்திற்குரியவர் என்று பாடநூலில் படத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை நாம் ஏற்க முடியாது. விசாகப் பெருமாளையர் அகற்பாவாக எழுதி வைத்த சாரத்தை 1835ம் ஆண்டு வெளியிட்ட கதையை திருக்குறளின் பின்னே சேர்த்ததை டி.எம்.நாயர்ஸ் பார்டாங் சாலை பேருரையில் (1919) வெளிப்படுத்தி இருக்கிறார். ஆதாரம் இல்லாமல் சொன்ன செய்தியை மீண்டும் திருவள்ளுவர் மேல் வர்ணத்தார் என்று இப்போதும் அதனை சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் மறைமுகமாக வெளியிட்டு இருப்பதை நாம் எப்படி ஏற்க முடியும்? ஆகவேதான் டி.எம்.நாயரின் குரலில், ‘கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள், ‘ஆரிய வித்தைகளை மானமுள்ள தி.மு.க. பொறுக்காது’ என்று எச்சரிக்கை செய்து முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

(2) புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஆலோசனைப்படி ஓவியர் வேணுகோபால்சர்மா 1959-60களில் ஒரு திருவள்ளுவர் ஓவியத்தை உருவாக்கினார். மயிலாப்பூரில் ஓர் வீட்டில் அந்த ஓவியத்தை அந்நாள்களில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வந்து பார்த்து அதனை ஏற்றுக் கொண்டனர். அறிஞர் அண்ணா அந்த ஓவியத்தை விழா ஒன்றில் படங்களாக அச்சிட்டுத்தர பிப்.1960ல் அவற்றை வெளியிட்டார். மத்திய அரசு திருவள்ளுவர் அஞ்சல் உறையை வெளியிட்டு இருக்கிறது. அஞ்சல் தலை வெளியிடவும், இதே ஓவியம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகச் சட்டமன்றத்தில் அந்த ஓவியம் இடம் பெற்று இருக்கிறது. இதை ஜாகீர் உசேன் திறந்து வைத்தார். இந்த ஓவியத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் மயிலையில் உட்கார்ந்த நிலையில் ஒரு வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

திருவள்ளுவரை வேதியராக்கி வர்ணாசிரம மேலடுக்கை காட்ட அனுமதிப்பதா? இதற்கு யார் பொறுப்பு? - முரசொலி தலையங்கம்

இதனை டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார். மெரினாவிலும், குமரி முனையிலும் நின்ற மேனியாக இரு திருவள்ளுவர் சிலைகள் சிறிய நிலையிலும், பேருருவிலும் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய விழாக்கள் எடுக்கப்பட்டு அவை திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களுக்கும், சிலைகளுக்கும் பூணூல் இல்லை. ‘வேதியர்’ போன்ற சாயலில் குடுமியும் இல்லை. வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தை அஞ்சல் உறை, அஞ்சல் தலை ஆகியவற்றை வெளியிட்ட தன் மூலம் மத்திய அரசு அந்த ஓவியத்தை ஏற்றுக் கொண்டு இருக்கிறது. தமிழகச் சட்டமன்றத்திலும், பேருந்துகளிலும் திருவள்ளுவர் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதே நிலையில் நாடெங்கும் சிலைகள் உள்ளன. இவற்றை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆக, வேணுகோபால் சர்மா வரைந்த பூணூலும், ‘வேதியர்’ குடுமியுமில்லாத ஓவியத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்குப் பிறகு, மத்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் இருக்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்புக்கு எப்படித் திருவள்ளுவர் உருவமே ஒட்டுமொத்தத்தில் மாற்றப்பட்டு, வேதியர் உருவில் வரையப்பட்டு இருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு? மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்ட ஒர் ஓவியத்திற்கு மாறாக வர்ணாசிரம மேலடுக்கை காட்டும் பிறிதொரு ‘வேதிய’ திருவள்ளுவரை அனுமதித்தது எப்படி என்றே நாம் கேட்கின்றோம். அப்படத்திற்குரிய கதை என்னவென்று ஆராய்ந்தும், திருவள்ளுவரைப் பற்றிய உண்மை செய்தியினையும், அதற்குரிய சரியான படத்தினையும் பாடத் திட்டத்தில் சேர்க்கும் படியும் மாநில அரசை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

banner

Related Stories

Related Stories