
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வரும் இளம்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 25 வயது ஆண் நண்பருடன் இரவு நேரத்தில் தனியாக பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கியுள்ளனர். மேலும் அந்த இளைஞரை தாக்கி விட்டு, இளம்பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையடுத்து மயக்கம் தெளிந்த பிறகு, அதிகாலை நேரத்தில் அந்த தாக்குதலுக்கு உள்ளான ஆண் நண்பர், தனது மொபைல் போனில் இருந்து 100 காவல் உதவி எண்ணை அழைத்த பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த இளைஞரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அந்த இளம்பெண்ணை தேடி வந்த போலீசார், சுமார் ஒரு கி.மீ. தொலைவில் முள்புதர் பகுதியில் அவரை மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர், அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து, தொடர்புடைய நபர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சூழலில் இந்த சம்பவத்தில் சிவகங்கையை சேர்ந்த குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன் என்ற குற்றப்பின்னணியுடைய 3 பேர் ஈடுபட்டதை கண்டறிந்த போலீசார், துடியலூர் அருகே பதுங்கியிருந்த அவர்களை காலில் சுட்டுப்பிடித்தனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :-
கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.
இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்!








