மு.க.ஸ்டாலின்

“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

ஜெர்மனியிலிருந்து 7,020 கோடி ரூபாய் முதலீட்டில் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 26 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் தொழில் அதிபர்களுடனான சந்திப்பில் மொத்தம் 7,020 கோடி ரூபாய் முதலீட்டில் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 26 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஜெர்மனியில் 1.9.2025 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.

என்னுடைய முதல் ஜெர்மனி பயணத்தில் அதுவும் இந்தியா என்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இருக்கின்ற தமிழ்நாடு மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக, இந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்பதை பெருமையாக நான் நினைக்கிறேன்; பெருமகிழ்ச்சியோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்!

உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாகவும், நவீன உற்பத்தி, துல்லிய பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பம் ஆகியவற்றில் வலிமையோடு, ஐரோப்பாவின் முதுகெலும்பாக இருக்கின்ற ஜெர்மனிக்கு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக வந்திருக்கக்கூடிய இந்த நேரத்தை நான் பெருமையாக நினைக்கிறேன்!

தமிழ்நாட்டை பற்றி உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம்!

இந்தியாவிலேயே அதிகமான டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியையும், உற்பத்தித்துறை வளர்ச்சியையும் அடைந்திருக்கின்ற ஒரே மாநிலம்!

இந்தியாவிலேயே அதிகப்படியாக, 48 விழுக்காடு நகர்மயமான மாநிலம்!

அதிகளவிலான தொழிற்சாலைகளும், பணியாளர்களும் இருக்கக்கூடிய மாநிலம்!

சீகன்பால்கு என்கின்ற ஜெர்மானியர் 18-ஆம் நூற்றாண்டிலேயே, தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழை கற்று, இந்தியாவிலேயே முதன்முதலாக பைபிளை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டிருக்கிறார். தமிழின் பெருமையை அவர் சொல்லியிருக்கிறார்.

ஜெர்மனி போலவே தமிழ்நாட்டுக்கு என்று பெரிய வரலாறும், பாரம்பரியமும் இருக்கிறது. தமிழும், ஜெர்மனும் உலகின் பழமையான மொழிகளில் முக்கியமானவை. தமிழுக்கு என்று மிகப்பெரிய இலக்கியத் தொன்மையும், மரபும் இருக்கிறது.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ் நிலத்தில் இருந்ததற்கான ஆய்வறிக்கைகள் இருக்கிறது! இப்படிப்பட்ட மாநிலத்தில் தொழில் தொடங்க உங்களை எல்லாம் நான் அழைக்கிறேன்.

ஜெர்மனி மீது எனக்கு என்ன ஈர்ப்பு என்றால், உங்களுடைய பண்பாடு, தொழில் நுணுக்கம், புத்தாக்க வலிமை போன்றவை வியப்பை ஏற்படுத்துகிறது. உங்களுடைய கலையுணர்வை, ஒவ்வொரு கட்டடத்திலும், தெருக்களிலும் பார்த்து நான் ரசிக்கிறேன். பியூட்டிபுல் லேண்ட்ஸ்கேப், வைப்ரண்ட் கல்ச்சர் இதுதான் ஜெர்மனி!

எங்கள் தமிழ்நாட்டிலும் பல ஜெர்மனி நிறுவனங்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். BMW, Daimler Mercedes-Benz, Telekom போன்ற பல்வேறு ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெர்மனிதான், இந்தியாவின் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில் முதன்மையான நாடு! “Made in Germany”-யை எப்படி தரத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் பார்க்கிறார்களோ, அப்படி, “Made in Tamil Nadu” என்பதும் தரமும், திறனும் கொண்ட ஒரு பெயராக உருவாகிக் கொண்டிருக்கிறது.

Bicycle முதல் Battle Tanks வரை நாங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். ஜெர்மனி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையில் பொருளாதாரத்தில் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கிய தொழில்துறை நாடோ, அதேபோல, இந்திய ஒன்றியத்தில் தொழில்துறையின் இதயத்துடிப்பாக தமிழ்நாடு மாநிலம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னும் சொன்னால், தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!

முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள், முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள், கிட்டத்தட்ட 54 இலட்சம் M.S.M.E. நிறுவனங்கள், கிட்டத்தட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் என்று இருக்கின்ற தமிழ்நாட்டுக்கும், ஜெர்மனிக்கும் இடையே உள்ள பொருளாதார உறவு மூலமாக, இந்த நிலையை நாம் இன்னும் பலப்படுத்திக் கொள்ள முடியும்.

“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

மோட்டார் வாகன துறையில் – டெயிம்லர் மற்றும் BMW, எலக்ட்ரிக்கல் உற்பத்தித் துறையில் – ஸ்நெய்டர், காற்றாலைத் துறையில் – ZF மற்றும் சீமன்ஸ், தகவல் தொழில்நுட்பத் துறையில் பாஷ் போன்ற அறுபதுக்கும் மேற்பட்ட ஜெர்மன் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்களை நிறுவ தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இந்தப் பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, நீங்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன்.

இதற்கு முன்னால், யுனைட்டட் அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்திருக்கிறேன். பல்வேறு முதலீட்டு மாநாடுகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தி முதலீடுகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட்டில், ஜெர்மனி பார்ட்னராக இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட கடுமையான முயற்சிகளால், மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்திருக்கிறார்கள்.

ஜெர்மனி நிறுவனங்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட ‘ஃபார்ச்சூன் 500’ நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியிருக்கிறதே, தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் நிலவுவதற்கு சான்றாக இருக்கிறது.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மோட்டார் வாகனங்கள், குறிப்பாக மின் வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

எனவே, உலகளவில் நீங்கள் சிறந்து விளங்கும் ரோபோடிக்ஸ், மூலதனப் பொருட்கள் மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் இருந்தும், உங்களுடைய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெர்மனி முதலீட்டாளர்களை அன்புடன் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைக்கு பல்வேறு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கான திறன் பயிற்சி முறையில், உலகளவில் சிறந்த எடுத்துக்காட்டாக ஜெர்மனி திகழ்கிறது. திறன் மேம்பாட்டில் நாங்களும் சிறப்பு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

உலகத்தரச் சான்று பெற்ற திறன் மேம்பாட்டு மையங்களை, தொழிலகங்களுடன் இணைந்து அமைத்து, இளைஞர்களை உலக அளவுக்கு தகுதியானவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

உங்களுடைய பயிற்சி நுணுக்கங்களும், நுட்பங்களும் எங்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கிறது. நான் இங்கே முக்கியமாக சொல்ல விரும்புவது, நான் இங்கே வெறும் முதலீட்டுக்காக மட்டும் வரவில்லை. ஜெர்மனி - தமிழ்நாடு ஆகிய இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே ஒரு பாலம் அமைக்க வந்திருக்கிறேன்.

தொழில் மற்றும் தொழில்நுட்பத்தில், ஜெர்மனியின் துல்லியத்தையும், தமிழ்நாட்டின் ஆற்றலையும் இணைத்தால், உலகளவில் ஒரு புதிய வளர்ச்சிப் பாதையையும், ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே ஒரு வலுவான வர்த்தகப் பாலத்தையும் நம்மால் உருவாக்க முடியும்.

வணிகம் செய்வதை எளிதாக்கும் தரவரிசையில், அகில இந்திய அளவில், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது.

முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு அனைத்து வசதிகளையும், எங்களுடைய திராவிட மாடல் அரசு உறுதியாக வழங்கிக் கொண்டு வருவதால், முதலீடுகளுக்கு மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில், தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு, அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வரும்போது, நீங்கள், உங்கள் பிசினசுக்கான மார்க்கெட்டாக மட்டும் பார்க்க மாட்டீர்கள்; உங்களுடன் இருந்து, உங்களுடைய வெற்றியைக் கொண்டாடுகின்ற பார்ட்னர்ஸை நீங்கள் பார்ப்பீர்கள்.

பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும், திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதுடன், பல்வேறு தொழில் கொள்கைகளின்கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க இருக்கிறோம்.

எனவே, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் அன்போடு வேண்டிக் கேட்டுக்கொண்டு, விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories