மு.க.ஸ்டாலின்

”பொதுக்குழு இதயம் - உடன்பிறப்புகளின் குரல் இதயத்துடிப்பு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

பா.ஜ.க. மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

”பொதுக்குழு இதயம் - உடன்பிறப்புகளின் குரல் இதயத்துடிப்பு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உடன்பிறப்புகளான உங்களை நம்பித்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன். உங்கள் உழைப்பால் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும் என கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

நம் இதயமெல்லாம் நிறைந்து, நம்மை எந்நாளும் வழிநடத்தும் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்தநாளைச் செம்மொழிநாளாக ஒவ்வொரு உடன்பிறப்பும் தங்கள் இல்லத்து விழாவைவிடவும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் கொண்டாடி மகிழவுள்ள தருணத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை மாநகரில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்து, கழக வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறது. மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் மதுரை மண்ணுக்கேயுரிய கோலாகலத்துடன் ‘பொதுக்குழுவா கழக மாநாடா!’ என்று பிரமிக்கத்தக்க வகையில் எழுச்சிமிக்க கொள்கை நிகழ்வாகச் சிறப்பாக நடத்திக் காட்டிவிட்டார்.

மே 31 மாலையில் மதுரை விமான நிலையத்திலிருந்து 22 கி.மீ. தூரத்திற்கான ரோடுஷோவில் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று அன்பை வெளிப்படுத்தினர். சிறுவர் -சிறுமியர், பள்ளி - கல்லூரி மாணவர்கள், பெண்கள், வயதில் மூத்தவர்கள் என எல்லா வயதினரும் கையசைத்தும், கை கொடுத்தும், செல்ஃபி எடுத்தும், இருவண்ணக் கொடியை அசைத்தும் வரவேற்பளித்தனர். ஏறத்தாழ 5 மணிநேரத்திற்கு மேல் மக்கள் வெள்ளத்தில் நீந்தி, மதுரையில் கழகத்திற்கு அடித்தளமிட்ட மாவீரரும் - மதுரை மாநகராட்சியின் முதல் மேயருமான மதுரை முத்து அவர்களின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து சேர்ந்து, தலைவர் கலைஞருடன் இணைந்து கழகம் வளர்த்தவருடைய சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.

ரோடுஷோ வழியில் பந்தல்குடி எனுமிடத்தில் பகுதியை முதலமைச்சரான என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அந்த இடத்திற்கு மாலை சென்றபோது, என் வாகனத்தை விட்டு இறங்கி, அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, கால்வாயைத் தூய்மைப்படுத்தும் பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்ற விவரத்தையும் கேட்டு, அதனை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டேன்.

துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பா.ஜ.க. மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல். மறைப்பை அகற்றி, மறைக்கப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக முழுமையான தீர்வுக்கான வழி செய்யும் மாடல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி, கழகத்தை விமர்சிப்பதையே முழுநேர - பகுதிநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கும் புரிந்திருக்கும்.

இரவு, மதுரையில் அண்ணன் அழகிரி அவர்களையும் சந்தித்து நலன் விசாரித்தேன். தங்கும் விடுதிக்கு வந்து சேர இரவு 11 மணி ஆனபோதும், பந்தல் அமைந்த இடத்துக்கு நேரே சென்றேன். மறுநாள் நடைபெறும் பொதுக்குழு குறித்த ஆலோசனைகளை அமைச்சர் மூர்த்தியிடம் நடத்திவிட்டு, அதன்பிறகே உறங்கச் சென்றேன்.

ஜூன் மாதம் என்பது, நமக்குத் தலைவர் கலைஞர் மாதம். அதன் முதன் நாளில், கலைஞர் அவர்களால் எனக்குப் பொறுப்பு வழங்கப்பட்ட இளைஞரணி தொடங்கி வைக்கப்பட்ட மதுரையில் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுவுக்குக் காலையில் புறப்பட்டுச் சென்றபோது, வழியெங்கும் பொதுமக்களும் தொண்டர்களும் திரண்டிருந்து வரவேற்பளித்து, வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

கழகத்தின் இரத்தநாளங்களாக இருக்கும் இந்த உண்மைத் தொண்டர்களின் பிரதிநிதிகளாகத்தான் கழகத்தின் இதயமான பொதுக்குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள் இருக்கிறார்கள். இதயமும் இரத்தநாளங்களும் எப்போதும் இணைந்து சீராகச் செயல்பட்டால்தான் கழகம் எனும் நம் உயிர் வலிவோடு நீடித்திருக்கும் என்பதை எண்ணியபடியே பொதுக்குழு நடைபெற்ற உத்தங்குடி கலைஞர் திடலுக்கு வந்து சேர்ந்தேன்.

வந்திருப்பது மதுரையா, சென்னையா என்று யோசிக்கின்ற அளவுக்குக் கழகத் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை அப்படியே கொண்டு வந்து மதுரையில் வைத்தது போன்ற அமைப்புடன் பொதுக்குழு அரங்கத்தைச் சிறப்பாக அமைத்திருந்தார் மாவட்டக் கழகச் செயலாளர் மூர்த்தி. அவருடன் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சேடபட்டி மணிமாறன் மற்றும் மதுரை கழக நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து, பொதுக்குழு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். உணவு ஏற்பாடுகளும் மதுரைக்கேயுரிய மணத்துடன் சுவையாக அமைந்திருந்தது.

ஏறத்தாழ 7000 பேர் திரண்டிருந்த பொதுக்குழுவில், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியின் வழியே நடந்து சென்று, அவர்களின் வாழ்த்துகளைப் பெற்று, வணக்கத்தைத் தெரிவித்து மேடைக்குச் சென்றேன். கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, ஆ. இராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் தலைமைக் கழக நிர்வாகிகளும் பங்கேற்கப் பொதுக்குழு எழுச்சியுடன் தொடங்கியது. துணைப் பொதுச்செயலாளர் தங்கை கனிமொழி எம்.பி., இந்தியாவின் பாதுகாப்பு குறித்து ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கும் குழுவிற்குத் தலைமையேற்றுச் சென்றிருப்பதால் அவரால் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்க முடியவில்லை.

வரவேற்புரையை அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி வழங்க, இரங்கல் தீர்மானங்களைக் கழகச் செய்தித் தொடர்புத்துறைத் தலைவர் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் வாசிக்க, அதனைத் தொடர்ந்து தீர்மானக்குழுத் தலைவர் வழக்கறிஞர் திரு. தமிழ்தாசன் அவர்களும் மற்றவர்களும் ஒவ்வொரு தீர்மானமாகப் படிக்க, அவற்றைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கரவொலியால் நிறைவேற்றித் தந்தனர். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு கழகம் முன்னெடுக்கும் செயல்பாடுகள் தொடர்பான 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழகத்தில் தற்போது 23 சார்பு அணிகள் உள்ள நிலையில், புதிதாகக் கல்வியாளர் அணி, மாற்றுத்திறனாளிகள் அணி என இரண்டு அணிகள் தொடங்கப்படவிருப்பதையும், அதற்குரிய சட்டத்திருத்தங்களையும் திரு. கிரிராஜன் எம்.பி. வாசித்தார். கழகத் தணிக்கைக் குழு அறிக்கையைச் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் திரு. கு.பிச்சாண்டி அளித்தார்.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பிறந்தநாளைச் செம்மொழி நாளாக நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதில் தொடங்கி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வையும் அதனுடன் கூட்டணி வைத்துத் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.க.வையும் மக்களின் ஆதரவுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி, திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது வரையிலான 27 தீர்மானங்களும் உடன்பிறப்புகளாம் உங்கள் மீது உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சிறப்புத் தீர்மானமாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை கழகத் தலைவர் என்ற முறையில் நானே பொதுக்குழுவில் அறிவித்து, அதனை முழுமையாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடைமுறையைக் கழகச் சட்டத்துறைச் செயலாளர் திரு. என்.ஆர்.இளங்கோ எம்.பி. காணொலித் திரை வாயிலாக விளக்கினார். இன்றைய அரசியல்களத்தில் சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருப்பதால், அதனை நாம் எப்படி கையாளவேண்டும் – அதற்கான கட்டமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா விளக்கினார்.

”பொதுக்குழு இதயம் - உடன்பிறப்புகளின் குரல் இதயத்துடிப்பு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை பொதுக்குழுவில் கழகத் தொண்டர்களாம் உங்களின் குரலாக மண்டலத்திற்கு ஒருவர் என்ற முறையில் இளைய நிர்வாகிகளும் - மூத்த நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளைப் பொதுக்குழு மேடையில் பதிவு செய்தனர். பொதுக்குழு இதயம் என்றால், அதில் உடன்பிறப்புகளின் குரல்தான் இதயத்துடிப்பு. அந்தத் துடிப்பின் ஓசை எப்படி இருக்கிறது என்பதைக் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் கவனமாகக் கேட்டுக் கொண்டேன்.

துணைப் பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி, ஆ.இராசா எம்.பி., கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் ஆகியோர் உரையாற்றியபிறகு, நான் தலைமையுரையாற்ற எழுந்தபோது, எதிரில் இருப்பவர்கள் ஏழாயிரம் பேராகத் தெரியவில்லை. இரண்டு கோடி உறுப்பினர்களான உடன்பிறப்புகள் அத்தனை பேரையும் மனக்கண்ணால் பார்த்தபடிதான் பேச்சைத் தொடங்கினேன். மக்கள் பாராட்டுகின்ற - இது தொடர வேண்டும் என விரும்புகிற திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்திட, ஏழாவது முறையாக தி.மு.க. அரியணை ஏறிட உடன்பிறப்புகளான உங்களின் உழைப்புதான் முதன்மையானது.

எந்தப் பதவியையும் பெறாத, எந்தப் பொறுப்புக்கும் வராத, அறிவாலய வாசலைக் கூடி மிதிக்காத, கழகமே உயிர்மூச்சு, கருப்பு - சிவப்புக் கொடியே தன் சொத்து என நினைக்கிற உண்மைத் தொண்டர்களால் 75 ஆண்டுகாலமாக வலிமையுடன் நிலைத்திருக்கும் கழகம், தொடர்ந்து வெற்றிநடை போடுவதற்கு, தொண்டர்களை நிர்வாகிகள் மதித்து, அரவணைத்து, அவர்களின் கோரிக்கைகளை அறிந்து செயல்படவேண்டும் என்பதே என் தலைமையுரையின் முக்கியப் பகுதியாகும்.

என் கட்சி, என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம் தொண்டர்கள். நானும் என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கை நம் தொண்டர்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுகிற வகையில் ஓர் முக்கியமான அறிவிப்பையும் உங்களில் ஒருவனான நான் வெளியிட்டேன்.

கழக உறுப்பினர்கள் யாரேனும் எதிர்பாராத விதமாகச் சாலை விபத்தில் இறக்க நேரிட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்குக் குறைவானவர்களாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்குத் தலைமைக் கழகத்தின் சார்பில் 10 இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும் என்பதுதான் உங்களில் ஒருவனான நான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

தொண்டனாகத்தான் என் கழகப் பணி தொடங்கியது. தொண்டர்களுடன்தான் என் கழகப் பணி தொடர்ந்தது. தொண்டர்களால்தான் கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்திருக்கிறேன். இப்போதும் கழகத்தின் முதன்மைத் தொண்டன் என்பதில்தான் நான் பெருமை கொள்கிறேன். என் மீது அன்பைப் பொழியும் கோடிக்கணக்கான தொண்டர்கள் மீதுதான் நான் நம்பிக்கை வைத்துப் பொதுக்குழுத் தீர்மானங்களைச் செயல்படுத்த நினைக்கிறேன்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்றிட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் பயன் பெற்றிருக்கும். அவர்கள் கழக அரசு தொடர வேண்டும் என விரும்புவார்கள். அப்படி விரும்புகிறவர்களை உறுப்பினர்களாக்கி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மொத்தமுள்ள வாக்காளர்களில் குறைந்தபட்சம் 30 விழுக்காடு வாக்காளர்களாவது கழக உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்கிற இலக்குடன் உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். உடன்பிறப்புகளான உங்களை நம்பித்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன். உங்கள் உழைப்பால் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைத் தொடரும்.

உங்களில் ஒருவனான என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான். உங்களின் நலன், உங்கள் செயல்பாடு, கழகத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்துகொள்ளத் தொகுவாரியாக நிர்வாகிகள் சந்திப்பைத் தொடங்கவிருக்கிறேன். தொடர்ச்சியான பயணங்களில் உங்கள் ஊருக்கு வரும்போது உடன்பிறப்புகளின் முகம் கண்டு மகிழ்வேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories