
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள், 35 இயக்குநர்கள், துணைச்செயலாளர்கள் என 45 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதில் தனியார் துறையை சேர்ந்தவர்களும் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பிய நிலையில் Lateral Entry என்ற அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஒன்றிய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி.
இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்குப் பணிந்து நேரடி நியமனங்கள் தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்பப்பெற்றுள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்” என தெரிவித்துள்ளார்.








