மு.க.ஸ்டாலின்

”பா.ஜ.கவில் 261 ரவுடிகள்” : பட்டியல் வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

உங்கள் மோடி மஸ்தான் வித்தையெல்லாம் பலிக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”பா.ஜ.கவில் 261 ரவுடிகள்” : பட்டியல் வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று (30.3.2024) சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சேலம் வேட்பாளர் திரு.செல்வகணபதி அவர்களையும், கள்ளக்குறிச்சி வேட்பாளர் திரு.மலையரசன் அவர்களையும் அறிமுகப்படுத்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டு எழுச்சியுரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

சேர்வராயன் மலை – கஞ்சமலை – சருகுமலை – கல்வராயன் மலை – பச்சமலை – நகரமலை என, இயற்கை எழில் கொஞ்சும் சேலத்திற்கு வந்திருக்கிறேன்! கழகத்தைக் கட்டிக்காத்த ‘சேலத்துச் சிங்கம்’ - நம் நெஞ்சங்களில் கம்பீரமாய் வாழும் அண்ணன் வீரபாண்டியார் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன்.

நமது வெற்றிக்குக் கட்டியம் கூறுவதற்கான, மண்டல மாநாட்டைப்போல் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் என் மாலை வணக்கம்!

இங்கு கூடியிருக்கும் உங்கள் முகங்களை எல்லாம் பார்க்கும்போது என்னுடைய நினைவுகள், சமீபத்தில் நடந்த இளைஞர் அணி மாநில மாநாட்டிற்குத்தான் செல்கிறது! சேலத்தில் எழுச்சியுடன் திரண்டிருந்த, திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் படையைப் பார்த்தபோது, “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்றுதான் நினைத்தேன். இப்போது அந்தப் படை வெற்றி பெறுவதற்கான களத்துக்கு வந்துவிட்டது. வெற்றிக்குத் தயாராகிவிட்டீர்களா? சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நீங்கள் தந்தாக வேண்டும்.

சேலம், கள்ளக்குறிச்சி தொகுதிகளின் களத்தின் வெற்றியை முன்பே அறிவித்ததைப்போல், இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள, அமைச்சர் பெருமக்கள் ’மாநாட்டு நாயகன்’ கே.என்.நேரு அவர்களுக்கும், ’எதிலும் வல்லவர்’ எ.வ.வேலு அவர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், எனது வாழ்த்துகள்! பாராட்டுகள்!

சேலம் வேட்பாளர் செயல்வீரர் செல்வகணபதிக்கு அறிமுகம் தேவையில்லை! டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பட்டறையில் இருந்து உருவான போர்வாள்தான், இங்கு உங்கள் முன்னாள் இருகரம் கூப்பி வாக்கு கேட்கும் நம்முடைய செல்வகணபதி அவர்கள்! சேலத்தில் எப்படி அவர் குரல் உறுதியாக ஒலிக்கிறதோ, அதேபோல் நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். அதற்குச் செல்வகணபதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை நீங்கள் வழங்கி வெற்றிபெற வைக்க வேண்டும்.

அதேபோல் கள்ளக்குறிச்சி கழக வேட்பாளரான மலையரசன், கழகத்தின் அடிமட்ட தொண்டர்களில் ஒருவர்! ஒன்றியச் செயலாளரான இவர், தன்னுடைய சொந்த கிராமமான சிறுநாகலூர் ஊராட்சி மன்றத் தலைவராக இரண்டு முறை இருந்தவர். மாவட்டப் பிரதிநிதியாகவும் செயல்பட்டவர். இந்த மக்கள் தொண்டரையும், மக்களவைக்கு அனுப்பி வையுங்கள். வெற்றி வேட்பாளர் மலையரசன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

உங்களின் முகங்களைப் பார்க்கும்போது இவர்களின் மாபெரும் வெற்றிதான் என் கண்ணுக்குத் தெரிகிறது! அந்த நம்பிக்கை பிறக்க இன்னொரு முக்கியக் காரணம் மூன்று ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தி வரும் நல்லாட்சி! தமிழ்நாட்டில் நடக்கும் உண்மையான மக்களாட்சி! ஏன், உண்மையான மக்களாட்சி என்று சொல்கிறேன் என்றால், நம்முடைய திராவிட மாடல் அரசுதான் மக்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது!

திராவிட மாடலின் குரல், தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை; வடக்கிலும் ஒலிக்கிறது; வடக்கிற்கும் சேர்த்தே ஒலிக்கிறது! ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நாம்தான் சிறந்த எடுத்துக்காட்டு! ஒரு ஒன்றிய அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு பா.ஜ.க. அரசுதான் எடுத்துக்காட்டு!

சில நாட்களுக்கு முன்னால், இதே சேலத்திற்கு வந்த பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்குக் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து தி.மு.க.வின் தூக்கம் தொலைந்துவிட்டது” என்று பேசிவிட்டுச் சென்றார்.

மோடி அவர்களே, உண்மையில் உங்களால் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் யார் தெரியுமா? பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தினீர்களே! அந்த சாமானிய மக்கள், தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள்! சிலிண்டர் விலையை உயர்த்தினீர்களே! தாய்மார்கள், ஏழைகள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள்!

வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள்! ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை நடத்துகின்றவர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டார்கள்!

மூன்று வேளாண் சட்டங்களால் உழவர்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள்!

தொழிலாளர் விரோத சட்டங்களால் பாட்டாளி மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள்!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள்!

சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டுவதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின் மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள்!

இப்படி, பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் ஒட்டுமொத்த நாடுமே தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நிம்மதியில்லாமல் தவிக்கிறது.

இப்படி நாட்டின் அமைதியையும் – மக்களின் நிம்மதியையும் கெடுத்த பா.ஜ.க. ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடி, இன்றைக்கு உச்சநீதிமன்றத்தால் வெளிவந்துள்ள தேர்தல் பத்திர ஊழலால் தூக்கத்தைத் தொலைத்துள்ளார்!

அதுமட்டுமல்ல, இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது… அதுதான் பிரதமர் மோடிக்கு ஒன்றிய உளவுத்துறை கொடுத்திருக்கும் “ரிப்போர்ட்” என்று ஒரு செய்தி வருகிறது… அந்தச் செய்தி என்ன? ”தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு வரைக்கும் தென் மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்பதுதான் நிலைமையாக இருந்தது! தேர்தல் பத்திர ஊழல் வெளிவந்த பிறகு, வட மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறாது என்பதுதான் உண்மையான நிலைமையாக இருக்கிறது!” என்று உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது!

இதனாலேயும், பிரதமர் மோடி தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பதற்றப்படுகிறார்! பதட்டத்தில் என்ன என்ன செய்கிறார்? ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களையும், டெல்லியில் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களையும் - E.D.யை விட்டு, கைது செய்கிறார்கள்! காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறையை ஏவி விட்டு, நோட்டீஸ் விடுகிறார்! எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்த்துப் பேசினால், சி.பி.ஐ ரெய்டு விடுகிறார்! ஒருசில பத்திரிகைகள் இதைப் பற்றி விமர்சிக்கிறார்கள்! ஆனால் எதற்கும் பதில் இல்லை! தேர்தல் நேரத்தில், பா.ஜ.க.வுக்கு இப்படி கூட்டணி கட்சிகளைப் போல், E.D. – C.B.I. – I.T. ஆகியவற்றைப் பிரதமர் பயன்படுத்துகிறார் என்றால், உச்சக்கட்ட தோல்வி பயத்தில் இருக்கிறார் என்று அர்த்தம்!

எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற வெறியில், பல தியாகங்களால் உருவான இந்திய ஜனநாயகத்தையே சீரழித்துவிட்டு இருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்கின் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த நாட்டின் நிதியமைச்சர் உட்பட முன்னணி பா.ஜ.க.வினரும் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குகிறார்கள்.

இங்கு தமிழ்நாட்டில் அதைவிடப் பரிதாபமாக இருக்கிறது பா.ஜ.க… ஒரு காமெடி வரும் ஞாபகம் இருக்கிறதா! “பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு” என்று… அதுபோல, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் கிடைக்காமல் - கவர்னர் – சிட்டிங் எம்.எல்.ஏ. என்று அழைத்து நிறுத்தி, செய்தியில் இருக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள்… இதிலிருந்து என்ன தெரிகிறது? பா.ஜ.க.வுக்கு இருக்கும் பயமெல்லாம், நோட்டாவைவிடக் கீழே சென்றுவிடாமல் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்ற முயற்சிதான் நன்றாகத் தெரிகிறது!

அதனால்தான், மோடி அவர்கள், இப்போது திடீர் என்று எம்.ஜி.ஆரையும் – ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசுகிறார். திடீர் என்று அம்மையார் ஜெயலலிதா மேல் ஏன் மோடிக்கு பாசம் பொங்குகிறது? அம்மையார் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவரைப் பாராட்டியது உண்டா? “இந்தியாவிலேயே அதிகமாக ஊழல் நடைபெறும் ஆட்சி ஜெயலலிதா ஆட்சிதான்” என்று மோடி சொல்லியது இப்போது ஞாபகமில்லையா?

“தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படாததற்கு ஒரு பெண்தான் காரணம்“ என்று அம்மையார் ஜெயலலிதாவை குறை சொன்னவர்தான் மோடி. ”தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஜெயலலிதாவும் - சோனியாவும்தான் காரணம்” என்று குற்றம் சாட்டியவரும் மோடிதான். இதையெல்லாம் பிரதமர் மோடி மறந்துவிட்டாரா? எதற்கு இந்த நாடகம்? அடுத்து, பெண் சக்தியைப் பற்றி சேலத்தில் பேசியிருந்தார்… உண்மையில், பா.ஜ.க. ஆட்சியில் பெண்களின் நிலைமை என்ன? பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான காங்கிரஸ் கொண்டுவந்த நிர்பயா நிதியை முறையாக ஒதுக்காமல் விட்டது பா.ஜ.க. ஆட்சிதான்.

பா.ஜ.க. எம்.பி.யால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது, அவர்கள் போராடியது எல்லாமே பா.ஜ.க. ஆட்சியில்தான்! குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது, மோடி ஆட்சியில்தான்!

மணிப்பூரில் பெண்கள் என்ன என்ன கொடுமைகளுக்கு ஆளாகினார்கள் என்று நம்முடைய எம்.பி.க்கள் குழு சென்று பார்த்து வந்து கதறினார்களே… அந்த கொடுமைகளை எல்லாம் இரக்கமில்லாமல் வேடிக்கை பார்த்தது மோடி ஆட்சிதான்! ஜம்மு காஷ்மீரில், 8 வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிக்கு ஆதரவாக இரண்டு பா.ஜ.க. அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே?

உத்தரப்பிரதேசத்தில் வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பா.ஜ.க. எம்.எல்.ஏ குல்தீப் சிங்கும் அவரின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தார்களே? அதுமட்டுமா, அந்தப் பெண்ணின் தந்தையை அநியாயமாகச் சிறையிலேயே வைத்து கொன்றார்களே? பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு பெண்ணை நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியிலேயே உயிருடன் கொளுத்தினார்களே? அதுவும் பா.ஜ.க. ஆட்சியில்தான்!

இந்தச் செய்திகளுக்கு எல்லாம் பிரதமரிடம் இருந்து பதில் வந்திருக்கிறதா? வருத்தப்படுகிறேன் என்று பெயரளவுக்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த இலட்சணத்தில் பெண் சக்தி என்று பேசுவதற்கு உங்களுக்கும் – பா.ஜ.க. ஆட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது? என்ன அருகதை இருக்கிறது?

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டைப் புண்ணிய பூமியாக மாற்றுவோம் என்று பேசியிருக்கிறார். பத்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்தீர்கள். தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, இந்தப் புண்ணிய பூமிக்கு ஏன் வரவில்லை? பேரிடர் நிவாரணமாக ஒரு பைசாகூட ஏன் கொடுக்கவில்லை? எய்ம்ஸ் மருத்துவமனையைப் பத்தாண்டுகளாக ஏன் இன்று வரைக்கும் கட்டவில்லை? மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம்கட்டப் பணிக்கு நான்கு ஆண்டுகளாக ஏன் நிதி கொடுக்கவில்லை?

பிரதமர் மோடி அவர்களே… தமிழ்நாடு ஏற்கனவே புண்ணிய பூமியாகத்தான் இருக்கிறது! இங்கு எல்லோரும் சமத்துவமாக – சகோதரர்களாக – ஒற்றுமையாக இருக்கிறோம். அமைதியாக வாழும் தமிழ்நாட்டு மக்களை, மதத்தின் பெயரால் – சாதியின் பெயரால் பிரித்து, குளிர்காயலாம் என்று நினைக்கும் ஒரே கட்சி பா.ஜ.க.தான்!

இந்தத் தேர்தல் மட்டுமல்ல, இன்னும் நூறு தேர்தல்கள் நடந்தாலும் உங்கள் நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது… இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாடு எப்போதும் புண்ணிய பூமியாகத்தான் இருக்கும்… நாட்டை மத அடிப்படையில் துண்டாட நினைக்கும் பா.ஜ.க. பாவிகளின் மண்ணாக, மாறவே மாறாது!

நான் இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்… இங்கு தி.மு.க. இருக்கும் வரைக்கும் உங்கள் மோடி மஸ்தான் வித்தையெல்லாம் பலிக்காது! இது, பெரியார் பண்படுத்திய மண்! பேரறிஞர் அண்ணாவால் கட்டமைக்கப்பட்ட மண்! நம் உயிரனைய முத்தமிழறிஞர் கலைஞர் வளர்த்த மண்! இதுபோன்ற எண்ணற்ற பெருந்தலைவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது!

பா.ஜ.க. எனும் மதவெறிக் கூட்டத்தோடு சேர்ந்திருப்பது யார்? நான் பெரிதும் மதிக்கும் சமூகநீதி பேசும் அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்கள் சேர்ந்திருக்கிறார். ஏன் சேர்ந்தார்? எதற்காக சேர்ந்தார் என்று உங்களுக்கும் தெரியும்! அவர்கள் கட்சிக்காரர்களுக்கும் நன்றாகத் தெரியும்! சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த அய்யா ராமதாஸ் அவர்கள், அந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டாம் என்று சொல்லும் சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.விடம் சரண்டர் ஆகியிருக்கிறார். இதைப்பற்றி நேற்று தருமபுரி கூட்டத்தில் நான் மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறேன்.

அதற்கு விளக்கம் கொடுப்பதாக நினைத்து, அய்யா ராமதாஸ் இன்றைக்கு என்ன சொல்லியிருக்கிறார்? ”பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வலிமையான கட்சியாக இருக்கிறது. அதனால், பா.ஜ.க.வுக்கு அழுத்தம் தந்து சாதிவாரிக் கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம்” என்று சொல்கிறார்.

ஆனால், பா.ம.க. கடந்த 3 தேர்தலாக தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறது. உழவர்களுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கும், இலங்கைத் தமிழருக்கும் – சிறுபான்மையினருக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து வாக்களித்த பா.ம.க. ஏன் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுக்கவில்லை?அதனால்தான், இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியை ஏற்றுக் கொள்ள முடியாமல், அவர்கள் கட்சிக்காரர்களே மனம் நொந்து, அவமானத்தில் தலைகுனிந்து இருக்கிறார்கள்…

இன்று காலை நாளேடுகளில் மோடி அவர்கள் பேசிய பேச்சு வெளிவந்திருக்கிறது. தன்னுடைய தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். நேற்று மாலையில் இதைப் பேசிய அவர், காலையில் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? “அகில இந்திய வானொலி” என்ற தமிழ்ப் பெயரை ”ஆகாசவாணி” என்று இந்திப் பெயருக்கு மாற்றி உத்தரவு போட்டிருக்கிறார்.

“எங்கும் இந்தி - எதிலும் இந்தி” என்று இந்தியைத் திணிப்பதற்கான வேலைகளைக் காலை பார்த்துவிட்டு மாலையில் கண்ணீர் வடிக்கிறார். இதற்குத்தான் சொல்வது… மோடியின் கண்ணீரை அவரின் கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? ஒருபக்கம் கண்ணைக் குத்திக்கொண்டு, மற்றொருப் பக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?

அதுமட்டுமா, நேற்று மற்றொன்றையும் பேசியிருக்கிறார்… கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போன குடும்ப அரசியல் பல்லவியையே மீண்டும் பாடியிருக்கிறார். ”நாங்கள் அரசியலுக்கு வருவது; மக்களுக்குச் சேவை செய்வதற்குத்தானே தவிர; ஊர் சுற்றுவதற்காக அல்ல” என்று நானும் எத்தனை முறைதான் அவருக்கு விளக்குவது? தி.மு.க. என்பது கோடிக்கணக்கான தமிழ்நாட்டுக் குடும்பங்களை முன்னேற்றுவதற்குப் பாடுபடும் கட்சி! அது மோடிக்குப் புரியவில்லை!

”பா.ஜ.கவில் 261 ரவுடிகள்” : பட்டியல் வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது என்று புதிய அவதூறு பிரச்சாரத்தைக் கிளப்பியிருக்கிறார். அதற்கு ஏதாவது தரவுகளை ஆதாரமாகச் சொல்கிறாரா? இல்லையே! பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தது! அப்போது நீங்கள் எங்குச் சென்றீர்கள்? அந்த மாநில முதலமைச்சரைக் குறைந்தபட்சம் பதவி விலக வைக்க முடிந்ததா? இதுவரை நடக்காத கொடூரமாக, பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றார்களே, அப்போது சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்ததே… அப்போது ஒரு நாட்டின் பிரதமராக நீங்கள் என்ன செய்தீர்கள்? வாயே திறக்கவில்லையே! பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று, சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் அமைதியான தமிழ்நாட்டை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

என் கையில் ஒரு பட்டியல் இருக்கிறது… நான் ஆதாரத்துடன்தான் பேசுவேன். ஏனென்றால் நான் தலைவர் கலைஞரின் மகன். இதில் இருக்கும் பெயர் பட்டியல் ஏதோ தேசத் தலைவர்களோ… சமூகச் சேவகர்களோ இல்லை… எல்லோரும் சட்டம்–ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள்! சரித்திரப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள்! ஆனால் இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை பேரும் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்கள்! வழக்கமாக இந்த பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும்…

32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் இருக்கிறது. எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா? உங்களிடம் இருக்கும் உளவுத்துறை மூலமாக அந்தப் புத்தகத்தை வாங்கிச் சரிபார்த்துவிட்டு (”கிராஸ் வெரிஃபை” செய்துவிட்டு,) அதற்குப் பிறகு எங்களைப் பற்றி பேசுங்கள் பிரதமர் அவர்களே…

அடுத்து, போதைப் பொருட்கள் பற்றியும் பேசியிருக்கிறார். தி.மு.க.வில் இருந்த ஒருவர் மேல் இது தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்ததுமே, அந்த நபர அடுத்த விநாடியே கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். அவர் மீதான விசாரணைக்கு நாங்கள் தடையாக இல்லை… இந்த வழக்கை வைத்து, தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பது போன்று அவதூறு பரப்புரை செய்கிறார். இது, அவர் இப்போது வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல!

இந்தியாவிற்கே போதைப் பொருள் குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் வருகிறது என்று பிடிக்கிறார்கள்… ஒரு காலத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்ததே நீங்கள்தானே? இப்போதும் உங்கள் கட்சிதானே அங்கு ஆட்சியில் இருக்கிறது?… இது பற்றியாவது வாய் திறப்பீர்களா?

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் வந்திருக்கிறது… அது எதுவும் நாங்கள் சொன்னது இல்லை… மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் மாதம் உங்கள் ஆட்சி சார்பில் ஒன்றிய அரசு வைத்த அறிக்கையில் இருக்கிறது.

அதுமட்டுமில்ல, போதைப் பொருள் அதிகமாக கைப்பற்றப்பட்ட ‘டாப் 10’ மாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது! இந்தப் பத்து மாநிலங்களில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லை! அந்தளவுக்குக் கடுமையான நடவடிக்கைகளை நமது திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது.

பிரதமர் மோடி அவர்களே… உங்கள் ஆட்சி அறிக்கையிலேயே இல்லாத தமிழ்நாட்டைப் பற்றி அரசியல் ஆதாயத்திற்காக இப்படி பொய்க் குற்றச்சாட்டை வைக்கிறீர்களே… உங்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் மேல் அப்படி என்ன கோபம்? இது மாதிரியான அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களையும் - எங்கள் இளைஞர்களையும் ஏன் அவதூறு செய்கிறீர்கள்…

மாண்புமிகு பிரதமர் அவர்களே… உங்களுக்குச் சொல்லப்படாத ஒரு தகவலைச் சொல்கிறேன்… போதைப் பொருள் தொடர்புடைய வழக்குகளில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 14 பேர் இங்கு சிறைகளில் இருக்கிறார்கள். அதற்கும் ஆதாரம் இருக்கிறது. இதற்குப் பிரதமர் மோடி என்ன விளக்கம் அளிப்பார்?

பிரதமர் என்பது ஒரு உயர்ந்த பதவி! இதுவரைக்கும் எத்தனையோ பிரதமர்களின் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்திருக்கிறோம்… அவர்கள் ஆட்சியில் நாட்டிற்குச் செய்ததைச் சொல்வார்கள்… அடுத்து ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்று சொல்வார்கள்… ஆனால் பிரதமர் மோடி சாதனைகள் சொல்ல வழியில்லை என்று வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்.

இப்படிப்பட்ட மோடி அவர்களின் கூட்டணியில் இருந்துகொண்டு, இப்போது அவரின் டைரக்‌ஷனில் கள்ளக்கூட்டணி நாடகம் போடும் பழனிசாமி என்ன செய்கிறார்? காலையில் இந்து நாளேட்டுக்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் ஏன் பா.ஜ.க.வை எதிர்ப்பதில்லை என்று அவர்கள் கேட்டால், தி.மு.க. – தி.மு.க. என்ற தேய்ந்துப்போன பழைய ரெக்கார்டு மாதிரியே பேசிக் கொண்டு இருக்கிறார். பா.ஜ.க.வைப் பற்றியும் - மோடியைப் பற்றியும் பேச, எஜமான விஸ்வாசம் தடுக்கிறதா பழனிசாமி அவர்களே…

உங்கள் தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழ்நாட்டின் இருண்ட காலம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; கொடநாடு கொலை, கொள்ளை, தற்கொலை; பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை; தலைமைச் செயலகத்தில் ரெய்டு; அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. மீது குட்கா வழக்கு; பெண் எஸ்.பி.க்குப் பாலியல் வன்முறை; சட்டம்–ஒழுங்கு என்பதே இல்லாமல், ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் முடங்கிய ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி!

தான் பதவிசுகம் அனுபவிக்கத் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர்தான் பழனிசாமி! இப்படிப்பட்ட பழனிசாமிக்கு மக்களும் வாக்களிக்கத் தயாராக இல்லை! உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும் தயாராக இல்லை!

தமிழ்நாட்டின் பொற்காலம் என்பது தி.மு.க. ஆட்சிதான்! தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கியது தி.மு.க. ஆட்சியில்தான்! தமிழ்நாட்டின் கல்வி அறிவு உயர்வுக்கு வித்திட்டது தி.மு.க. ஆட்சிதான்! தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சியில்தான்! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது தி.மு.க. ஆட்சிதான்.

சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்திருப்பீர்கள்… உலகத் தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரம் ஒன்றில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது என்று சுட்டிக் காட்டியிருக்கிறது. அதில், 83 விழுக்காடு இளைஞர்கள் வேலையின்றித் தவிப்பதாக வேதனையான செய்தியை வெளியிட்டிருக்கிறது. போலியான பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட மோடி மாடல் இன்றைக்கு அம்பலப்பட்டு நிற்கிறது.

அதேசமயம், எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் நாம் செயல்படுத்தி வரும் திராவிட மாடலில் தமிழ்நாடு எத்தகைய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அதுவும், ஒன்றிய அரசின் புள்ளிவிவரம் ஒன்றை வைத்தே இதனை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். பத்தாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி சீரழித்த தமிழ்நாட்டை மீட்டுக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு தொழிற்சாலைகளைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனால், வேலைவாய்ப்பைப் பெற்ற இளைஞர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPF) அக்கவுண்ட் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைத்திருக்கும் வேலைவாய்ப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா? நமது அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் 77 இலட்சத்து 78 ஆயிரத்து 999 புதிய வேலைவாய்ப்புகள் தனியார் துறைகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அந்தப் புள்ளி விவரம் சொல்கிறது. இப்படி திட்டங்களாலும் - செயல்பாடுகளாலும் உண்மையாகவே சாதனைகளை நிகழ்த்தும் மாடல்தான் நமது ”திராவிட மாடல்”.

நான் சொல்வதை விட, தமிழ்நாட்டு மக்கள் என்ன கூறினார்கள் என்று ஒரு வீடியோ பார்த்தேன். அதில் ஒரு மகளிர் சொல்கிறார்: எங்கள் வீட்டில், குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லையென்றால், காசிற்காக யாரையும் எதிர்பார்க்க வேண்டிய தேவை இனிமே இல்லை. எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும், தாய்வீட்டு சீர் மாதிரி 1000 ரூபாய் இருக்கிறது! இப்படி மாதா மாதம், மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்!

அடுத்து, விடியல் பயணம் திட்டம் பற்றிப் பேசுகிறார்கள்! ”ஸ்டாலின் சார் பஸ்ல போயி நான்கு மாதம் இலவசமாகப் பயணம் செய்து கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்து, இப்போது வேலைக்குச் செல்கிறேன்” என்று சகோதரி ஒருவர் மகிழ்ச்சியுடன் கூறினார், இது போன்று, மாநிலம் முழுவதும் இதுவரைக்கும் மகளிர் மட்டும், 445 கோடி முறை பயணம் செய்து இருக்கிறார்கள்!

அடுத்து, மாணவி ஒருவர் பேசுகிறார்! ஏழ்மையான சூழலில் அரசுப் பள்ளியில் படித்துக் கல்லூரிக்கு வந்த எனக்கு, அப்பா மாதிரி, ஸ்டாலின் அய்யா 1000 ரூபாய் தருகிறார் என்று கூறினார்! இப்படி மாநிலம் முழுவதும் 4 இலட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் புதுமைப் பெண் திட்டம் மூலமாகப் பயனடைகிறார்கள்!

அடுத்த வீடியோவில், “எப்போதாவதுதான் வீட்டில் சாப்பிடுவேன்… காலையில் அம்மா வேலைக்குச் சென்றுவிடுவார்கள்... நான் பள்ளிக்கு வந்துவிடுவேன்… இப்போது பள்ளியிலேயே ஸ்டாலின் தாத்தாவின் காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடுகிறேன்” என்று, சிரித்துக்கொண்டே ஒரு குழந்தை பேட்டி கொடுத்தது! எனக்குப் புல்லரித்துப் போய்விட்டது. அது போன்று தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடுகிறார்கள்!

அதுமட்டுமல்ல, உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகள்,

மக்களைத் தேடி மருத்துவம்,

நான் முதல்வன் திட்டம்,

புதுமைப்பெண் திட்டம்,

தமிழ்ப்புதல்வன் திட்டம்,

இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48,

இப்படி மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா குடும்பத்திற்கும் பார்த்துப் பார்த்து அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பல திட்டங்களைத் தீட்டி தருபவன்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

ஆனால், பத்தாண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த மோடியாலும் இப்படிப்பட்ட சாதனைகளைப் பட்டியலிட முடியுமா? தமிழ்நாட்டை ஆட்சி செய்த பாதம்தாங்கி பழனிசாமியாலும் பட்டியலிட முடியுமா?

நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகள் ஒன்றியத்திலும் தொடர வேண்டும் என்றுதான், சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். அதில் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்…

பத்தாண்டுகளாக சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று சிறிதும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்! தொழிலாளர் விரோதச் சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும்! ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்!

விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் - வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்! உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்திக் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும்!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்! மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாகவும் - ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்!

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்! வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்! ஆலங்குப்பம் இரயில்வே சுரங்கப்பாதை மேம்பாலமாக மாற்றி அமைக்கப்படும்!

சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்! பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப் பரிசீலிக்கப்படும்! சேலத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படும்! சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்!

இது எல்லாவற்றிற்கும் மேல், முக்கியமாக, சாதிவாரிக் கணக்கெடுப்பும் - வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை - ஒரே நேரத்தில் ஒன்றிய அரசால் எடுக்கப்படும்!

இதெல்லாம் நிறைவேற, சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் செல்வகணபதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று சேலம் தொகுதி மக்களையும் - கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் மலையரசன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி தொகுதி மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்!

தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – அவர்களோடு கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க. – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. - இவர்கள் அனைவரையும் ஒருசேர வீழ்த்துங்கள்.நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! உங்கள் எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்!பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தைக் காக்க - உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்!நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!நன்றி! வணக்கம்!

Related Stories

Related Stories