மு.க.ஸ்டாலின்

” நீங்கள் வருங்காலத் தலைமுறைக்கான ‘ரோல் மாடலாக மாறவேண்டும்’ ”.. மாணவர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!

“நான் முதல்வன் திட்டம்” என்னுடைய கனவுத் திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

” நீங்கள் வருங்காலத் தலைமுறைக்கான ‘ரோல் மாடலாக மாறவேண்டும்’ ”.. மாணவர்களுக்கு முதலமைச்சர்  வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.08.2023) சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற “நான் முதல்வன்” திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய விழாப் பேரூரை:-

ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்டு இன்று நாம் காணும் நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், உருவாக்கப்பட்ட இணையதளத்தை இன்று நான் தொடங்கி வைத்திருக்கிறேன். இன்றைய தினம் முரசொலி நாளிதழில் நான் எழுதிய கவிதையில் ஒன்றை சுட்டிக் காட்டி இருந்தேன்.

தலைவர் கலைஞர் அவர்களே, “நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்” என்று எழுதியிருந்தேன். அந்த வகையில் கலைஞருக்கும் பிடிக்கக்கூடிய திட்டம் தான், இந்த “நான் முதல்வன்” திட்டம்.

“நான் முதல்வன் திட்டம்” என்னுடைய கனவுத் திட்டம்! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலர்ந்த பிறகு, தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் வளர்ந்து வருகிறது.

அனைத்து தரப்பினரும் உயர்ந்து வருகிறார்கள். மாணவர்கள், இளைஞர் இடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இந்த திட்டம் காரணமாகயிருக்கிறது. நம்முடைய கழக அரசு ஆட்சிக்கு வந்ததும், ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்தார்கள். அப்போது, பல தொழிலதிபர்களுடன் பேசுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

“புதிய கம்பெனிகள் தொடங்கினாலும், அதில் வேலை செய்வதற்கு திறமையான இளைஞர்கள் கிடைக்கிறது கஷ்டமாக இருக்கிறது” என்று அதில் சிலர் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அதை கவனத்தில் வைத்து, என்னுடைய மனதில் உருவான திட்டம்தான், இந்த 'நான் முதல்வன்' திட்டம்.

தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள், கல்வியில், அறிவாற்றலில், சிந்தனைத் திறனில், பன்முக ஆற்றலில் முன்னேறக்கூடிய வகையில் அவர்களை உயர்த்த வேண்டும் என்று இந்தத் திட்டத்தை கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி, என் பிறந்த நாளில் தொடங்கி வைத்தேன்.

” நீங்கள் வருங்காலத் தலைமுறைக்கான ‘ரோல் மாடலாக மாறவேண்டும்’ ”.. மாணவர்களுக்கு முதலமைச்சர்  வேண்டுகோள்!

இதிலிருந்து இந்தத் திட்டம் எந்த அளவுக்கு என் மனதுக்கு நெருக்கமான திட்டம் என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டு இளைஞர்களை உலகத்திலேயே முதன்மையானவர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய “தணியாத ஆசை”! சில திட்டங்கள், அப்போதைய தேவையை நிறைவு செய்வதாக இருக்கும். சில திட்டங்கள், ஓராண்டுக்குப் பயன் தருவதாக இருக்கும். ஆனால், நான் முதல்வன் போன்ற திட்டங்கள்தான் தலைமுறை தலைமுறைக்குப் பயன்படுகின்ற திட்டங்கள்!

இந்த திட்டத்தை அறிவிக்கும்போது, "இதை முறையாக நடத்திக் காட்டவேண்டும்! இதனுடைய நோக்கத்தை முழுமையாக அடைகின்ற வகையில் நடத்தவேண்டும்" என்று நான் உறுதி எடுத்துக் கொண்டேன். அறிவிப்பு செய்வதுடன் எந்தத் திட்டமும் முழுமை அடைந்துவிடாது. அதை கடைசி வரை நடத்திக் காட்டுவதில்தான், அதனுடைய வெற்றி அடங்கியிருக்கிறது என்று அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் சொல்லக்கூடியவன் நான். அந்த வகையில், “நான் முதல்வன்” திட்டம் ஓராண்டை நிறைவு செய்கிறது.

நெஞ்சில் நிறைவும், முகத்தில் மகிழ்ச்சியும் பொங்க, நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். உலகை வெல்லும் இளைய தமிழ்நாட்டை உருவாக்குகின்ற, “நான் முதல்வன்” திட்டத்துடன் வெற்றிச் செய்தியை சொல்வதற்காகத்தான் இந்த விழா நடைபெறுகிறது.

இதற்குக் காரணமான, மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் தம்பி உதயநிதி அவர்களை நான் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். விளையாட்டுத் துறையில், எப்படிப்பட்ட மாற்றத்தை உருவாக்கி வருகிறாரோ, அதே மாதிரி “நான் முதல்வன்” திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிறார்.

இதற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்ற, திருமதி இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் அவர்கள், திட்ட உயர் அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அலுவலர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

” நீங்கள் வருங்காலத் தலைமுறைக்கான ‘ரோல் மாடலாக மாறவேண்டும்’ ”.. மாணவர்களுக்கு முதலமைச்சர்  வேண்டுகோள்!

ஆண்டுக்கு, “10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி” என்று தான் முதலில் இலக்கு நிர்ணயித்தோம். முதல் வருடத்திலேயே, 13 லட்சம் மாணவர்களுக்கு, உயர் தரத்தில் திறன் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்தத் திட்டத்தினுடைய மிகப்பெரிய சாதனை. இப்படி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மிகச்சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கிறது என்பது, அடுத்த சாதனை.

“நான் முதல்வன்” திட்டம் மூலமாக, 445 பொறியியல் கல்லூரிகளில் திறன் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் பயிற்சி பெற்ற, 85 ஆயிரத்து 53 பொறியியல் பட்டதாரிகள் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பித்திருந்தார்கள். அதில், 65 ஆயிரத்து 34 மாணவர்கள் மிகச் சிறந்த இடங்களில் பணி நியமனம் பெற்றிருந்தார்கள். இதை சொல்வதில், நான் அளவில்லா பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

அதே போல, 861 கலைக் கல்லூரிகளில் “நான் முதல்வன்” திட்டம் செயல்பாட்டில் இருந்தது. இந்தக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற, 99 ஆயிரத்து 230 மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு பணிகள் கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள். இதில், 83 ஆயிரத்து 223 மாணவர்கள் பணி நியமனம் பெற்றிருந்தார்கள்.

“நான் முதல்வன்” திட்டம் மூலமாகவும், தனியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம், 5 ஆயிரத்து 844 பொறியியல் மாணவர்களுக்கும், 20 ஆயிரத்து 82 கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த திட்டத்தினுடைய மாபெரும் வெற்றி இது. இந்த திட்டத்தினுடைய ஓராண்டு வெற்றி இது.

இந்த திட்டத்தை கலைவாணர் அரங்கத்தில் துவக்கி வைக்கும்போது "என்னுடைய வாழ்விலோர் பொன்னாள்" என்று நான் சொன்னேன்.

உண்மையாகவே, அது பொன்னாள்தான் என்று, இந்த நாள் உறுதி செய்திருக்கிறது. “தமிழ்நாட்டு மக்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவன் நான், அனைத்து மாணவச் செல்வங்களையும் முதல்வன் ஆக்க உருவாக்கிய திட்டம்தான் இந்த திட்டம்” என்று அப்போது சொன்னேன். அந்த வகையில், இலட்சக்கணக்கான திறமைசாலிகளான நம்முடைய செல்வங்கள் இந்த ஓராண்டு காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

பள்ளிப் படிப்புக்குப் பிறகு மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்ட மாவட்டந்தோறும் “கல்லூரிக் கனவு” என்ற திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இதன் மூலமாக, 75 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். மாணவர்களுடைய உயர்கல்வியை ஊக்குவிக்க, “உயர்வுக்குப் படி” என்ற திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இதில் 2 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

“நான் முதல்வன்” இணையதளம் மூலமாக, 25 இலட்சம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்த இணையதளம், 4 கோடி முறை பார்வையிடப்பட்டிருக்கிறது.

” நீங்கள் வருங்காலத் தலைமுறைக்கான ‘ரோல் மாடலாக மாறவேண்டும்’ ”.. மாணவர்களுக்கு முதலமைச்சர்  வேண்டுகோள்!

ஒரே ஒரு திட்டம் தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்தில் எப்படிப்பட்ட அறிவுப் புரட்சியை உருவாக்கி வருகிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் இவைகள் எல்லாம்!

தொழிற்கல்விக்கு அடித்தளமாக விளங்குகிற பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களுக்கும், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும், திறன் பயிற்சி விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு பன்னாட்டு நிறுவனமும் தொழில் தொடங்குவதற்கு தேவையான திறன் மிகுந்த மனித வளத்தை தமிழ்நாட்டில் 'நான் முதல்வன் திட்டம்' உறுதி செய்திருக்கிறது.

தலைநகரத்தில் இருக்கின்ற தலைசிறந்த கல்லூரியில் படித்தால்தான் சிறந்த வேலைவாய்ப்பும், எதிர்காலமும் இருக்கும் என்ற நிலையை மாற்றி, தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலேயும் எந்தக் கல்லூரியில் படித்தாலும், அங்கே உரிய திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அந்தக் கல்லூரி வளாகத்திலேயே முன்னணி நிறுவனங்களால் நடத்தப்படுகின்ற வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு, பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்குப் போகக்கூடிய அளவிற்கு இளைஞர்களுடைய திறன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டினுடைய மொத்த மக்கள் தொகையில், 2 கோடியே 31 லட்சம் இளைஞர்கள், 18 வயதிலிருந்து 35 வயசுக்கு உட்பட்டோர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்லுகின்றது. அதாவது 33 விழுக்காடு பேர்! இந்த இளைய சக்தியை வளர்த்தெடுக்க வேண்டும்.

“தமிழ்நாடு திறன் போட்டிகள்” தொடர்ச்சியாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. படிக்கின்ற காலத்திலேயே மாணவர்கள் – இளைஞர்களின் திறமையை நிரூபிக்கக் கிடைத்த, மிகப்பெரிய வாய்ப்புதான் இது! இந்தத் திறன் போட்டிகள் நம்முடைய மாநிலம் முழுவதும் பள்ளிகள், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்று எல்லோரும் பங்குபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

அடுத்த மாதம், தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருக்கின்ற, தமிழ்நாடு திறன் போட்டிகளுக்கு, இதுவரைக்கும் 58 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். தேசிய அளவில் திறன் போட்டிகள் ஒருங்கிணைக்கின்ற அமைப்பான, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தினுடைய புள்ளிவிவரப்படி, திறன் போட்டிக்கான பதிவுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது.

படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமில்லை; திறமை சார்ந்ததாகவும் மாறவேண்டும்! வேலை என்பது, சம்பளம் சார்ந்ததாக மட்டுமில்லை, திறமை சார்ந்ததாகவும் மாறவேண்டும். அத்தகைய திறமையை உங்களுக்கு உருவாக்க – உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய நான், இந்த தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இதை இன்றையில் இருந்து எப்போதும் நினைவில், மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

“நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக, நான் முன்னேறி இன்றைக்கு நல்ல நிலைமையில் இருக்கிறேன்” என்று நீங்கள் சொல்வதைவிடப் பெரிய பெருமை எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த நேரத்தில், ஒரு வருத்தமான செய்தியையும் பதிவு செய்துதான் ஆகவேண்டும்.

” நீங்கள் வருங்காலத் தலைமுறைக்கான ‘ரோல் மாடலாக மாறவேண்டும்’ ”.. மாணவர்களுக்கு முதலமைச்சர்  வேண்டுகோள்!

குடிமைப் பணித் தேர்வு என்று சொல்லப்படுகிற ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்களுடைய தேர்ச்சி, நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. 2016-ஆம் ஆண்டில் இருந்து, 10 விழுக்காட்டுக்கு மேல் என்ற நிலையில் இருந்து, 5 விழுக்காடாக குறைந்து விட்டது. இது என்னை மிகவும் வருந்த வைக்கிறது. இந்த நிலை மாறவேண்டும். நாம்தான் மாற்றவேண்டும்!

அதற்காகத்தான் ‘நான் முதல்வன்’ திட்டத்தினுடைய ஒரு பகுதியாக ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு பயிற்சிப் பிரிவு உருவாக்கப்பட்டது. குடிமைப் பணி தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு, இனி பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று, சமீபத்தில் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தோம்.

முதல் அறிவிப்பு, ஒவ்வொரு ஆண்டும், ஆயிரம் பேருக்கு, முதல்நிலைத் தேர்வுக்கு தயாராக, மாதம் 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். இரண்டாவது, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இந்த பொருளாதார உதவியானது, குடிமைப் பணி தேர்வுக்காக படிக்கின்ற மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். அதைவிட முக்கியமாக, அவர்கள் IAS - IPS அதிகாரியானால், நம்முடைய தமிழ்நாட்டிற்குத்தான் பெருமை!

வங்கித்துறை, ரயில்வே துறை, மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகிய தேர்வுகளுக்கும், ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சித் திட்டத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் பயிற்சிகள் தந்துகொண்டு இருக்கிறோம். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் – அனைத்துப் பணிகளிலும் இடம் பெறவேண்டும். அதிகாரத்தை அடையவேண்டும்!

அந்த சமூகநீதியை நிலை நிறுத்துவதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியோட இலட்சியம்! அதற்காகத்தான் இத்தனை திட்டங்களும்! இதற்கு தேவையான எல்லாவற்றையும் செய்து தர, நான் இருக்கிறேன்! நம்முடைய அரசு இருக்கிறது! உங்களிடம் நான் கேட்பது எல்லாம், அரசு உருவாக்கித் தருகிற வாய்ப்புகளை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

படிங்க! படிங்க! படிங்க! படிக்கின்ற காலத்தில் எந்த கவனச் சிதறல்களும் கூடாது!

தலைவர் கலைஞர் திருக்குறள் போல் ஒன்று சொல்வார்:

‘முடியுமா நம்மால்’ என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்;

‘முடித்தே தீருவோம்’ என்பது வெற்றிக்கான தொடக்கம்!” என்று சொல்வார். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். முயற்சி செய்தவர்கள்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்!

தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக மட்டுமல்ல - உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உங்கள் தந்தையாக நான் உங்களை வாழ்த்துகிறேன்.

உங்களுடைய கனவுகளுக்கு பாதை அமைத்துத் தர இந்த ஸ்டாலின் இருக்கிறான். நீங்கள் எல்லோரும், வருங்காலத் தலைமுறைக்கான ‘ரோல் மாடலாக மாறவேண்டும்’ என்று வாழ்த்தி, விடை பெறுகிறேன்!

Related Stories

Related Stories