மு.க.ஸ்டாலின்

”நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு பேச்சு!

"அண்ணா" "தம்பி" "உடன்பிறப்பு" இதெல்லாம் குடும்பப் பாச உணர்வை ஊட்டுகின்ற சொற்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தள்ளார்.

”நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.4.2023) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு 100-வது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-

"வங்கக் கடலோரம் வாஞ்சைமிகு தாலாட்டில் - தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று சொல்லியவாறு தனது தம்பி கலைஞர் அவர்களின் பாதுகாப்புடன் துயில்கின்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் அமைந்துள்ள இந்த அரங்கில் உங்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!

"பொங்கு கடல் நடையும் பூவையரின் மென் நடையும் - தன் புதுத்தமிழ் நடையில் காட்டியவன் பொல்லாங்கு உரைப்போரை வாதத்தில் மாட்டியவன் பொடியெடுத்துப் போடும் நேரம் புன்னகையால் எதிரிகளைப் பொடியாக வாட்டியவன், புழுதிக்குணம் படைத்தோரை ஓட்டியவன், பொன்மகுடம் தமிழ்த்தாய்க்குச் சூட்டியவன், என்று பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றி பாராட்டிப் போற்றி எழுதினார் நம்முடைய தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களை "தம்பி" என்று அழைத்து அரவணைத்தார் பேரறிஞர் அண்ணா. அண்ணா என்ற அந்த ஒற்றைச் சொல்தான் இலட்சக்கணக்கான இளைஞர்களை தமிழ் சொந்தங்களை இணைக்கின்ற ஒற்றுமைச் சொல்லாக மாறியது!

இதையும் தாண்டி, 'உடன்பிறப்பே' என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தார் நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

"அண்ணா" "தம்பி" "உடன்பிறப்பு" இதெல்லாம் குடும்பப் பாச உணர்வை ஊட்டுகின்ற சொற்கள்! இப்படி உறவாக இணைத்து செயல்பட்டதுதான் தமிழ்ச் சமுதாயத்தினுடைய விடியலுக்கு அடித்தளம் அமைத்தது!

பேரறிஞர் அண்ணாவோட பேச்சுக்களை- மாலை நேரத்துக் கல்லூரிகள்-என்று சொல்லுவார்கள்!

சென்னை கன்னிமாரா நூலகத்தில் இருக்கின்ற பெரும்பாலான புத்தகங்களைப் படித்தவர் என்று பெயர் பெற்ற ஒரு அறிஞர் தான் நம்முடைய பேரறிஞர் அண்ணா. தான் படித்த அனைத்தையும் தன்னோட மொழியில் இந்த நாட்டுக்குச் சொன்னார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் இளைஞர்களிடத்தில்தான் அதிகமாக பேசுவார். அதுவும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்தான் அதிகமாக பேசுவார். அவரோட பேச்சுக்கள் எல்லாம் ஏதாவது தலைப்பை மையப்படுத்திதான் இருக்கும்!

அந்தத் தலைப்பைக் கூட அவருக்கு முன்கூட்டியே தரமாட்டார்கள். அவர் ஒலிவாங்கி முன்னாடி நிற்கும்போதுதான் தலைப்பை சொல்வார்கள். உடனே அந்த தலைப்பில் பேசுவார்.

”நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு பேச்சு!

1961-ஆம் ஆண்டு சென்னை கிறித்துவக் கல்லூரியில பேசும்போது, 'என்ன தலைப்பு'-என்று கேட்டார் அண்ணா. அந்த நிகழ்ச்சி நடத்துகின்ற மாணவர் தலைவர், 'தலைப்பு இல்லை’ என்று சொன்னார்.

'தலைப்பில்லை' என்ற தலைப்பிலேயே அண்ணா பேசினார். அந்த உரையில், “'தமிழ்நாடு' என்ற தலைப்பு சென்னை அரசில் கிடைத்ததே தவிர, அரசியல் சட்டத்தில் ‘தமிழ்நாடு’ என்ற தலைப்பு தரப்படவில்லை. ‘சென்னை ராஜ்யம்’ என்ற 'தலைப்பு இல்லாத் தலைப்பு' தரப்பட்டிருக்கிறது.

ஒரு நாடு தலைப்பைப் பெற வேண்டும் என்றால் அது 'சிற்றுரிமை' பெற்றால் மட்டும் போதாது – 'முற்றுரிமை' பெற்றாக வேண்டும். நாடு என்ற தலைப்பிற்கே முழு அதிகாரம் அந்த நாட்டு மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதுதான் அரசியல் இலக்கணம். தமிழ்நாடு முழு அதிகாரம் பெறவில்லை. எனவே தமிழ்நாட்டிற்குத் தலைப்பு இல்லை!" என்று "தலைப்பு இல்லா நாடாகத் தமிழ்நாடு திகழ்வதா?" என்ற தலைப்பில் மாணவர்களிடத்தில் உரையாற்றினார். 1961-இல் இந்த உரையை ஆற்றினார். 1967-இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் நம்முடைய தாய்நிலத்துக்குத் "தமிழ்நாடு" என்று பெயரிட்டார். அதனால்தான் அவர், தம்பியருக்கு அண்ணன் மட்டுமல்ல; தாய்த் தமிழ்நாட்டுக்கே தலைமகன்!

இப்படி பேரறிஞர் அண்ணாவின் உரைகள் ஒவ்வொன்றும் அறிவுப்பூர்வமானவை! கருத்தாழமிக்கவை!

பேரறிஞர் அண்ணா பேசிய தலைப்புகளில் சிலவற்றை மட்டும் இங்கே நான் குறிப்பிட்டு காட்டுகிறேன்.

* இலட்சியம் வளர்த்த வரலாறு

* மலரும் மாணவர்

* போர்வாள்

* சுதந்திர இந்தியாவில் வாலிபர் தேவை

* என்னைக் கவர்ந்த புத்தகங்கள்

* வீட்டிற்கோர் புத்தகச் சாலை

* மேடைப்பேச்சு

* போர் முரசு

* ஆற்றோரம்

* ஏ தாழ்ந்த தமிழகமே!- இப்படி எத்தனையோ தலைப்புகளில் பேசினார் அண்ணா.

தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் ஆற்றிய உரைகள் நமக்கெல்லாம் வழிகாட்டும் அறிவுப் பெட்டகமாக, கருவூலங்களாக!

“தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று அவரிடம் கேட்டார்கள். “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்று திரும்பக் கேட்டார். “because என்கிற சொல்லை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அண்ணா சொன்னார்கள்..

‘No sentence ends with because, because, because is a conjunction’ - என்று சொன்னார் அறிஞர் அண்ணா.

”நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு பேச்சு!

பேரறிஞர் அண்ணா ஆற்றிய தமிழ் சொற்பொழிவுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 12 ஆயிரத்து 775, ஆங்கில உரைகளின் எண்ணிக்கை, ஏறத்தாழ 400-ஐ தாண்டியிருக்கும். பொதுமக்களிடமும் இளைய சமூகத்திடமும் பேசுவதை மிகுந்த விருப்பத்துடனும், அக்கறையுடனும் செய்தவர் நம்முடைய அண்ணா அவர்கள். இளைய சமுதாயம் மீது அளப்பரிய நம்பிக்கையை அவர் கொண்டிருந்தவர். தான் கண்ட கனவுகளை அவர்கள் நனவாக்குவார்கள் என்று நம்பினார். அவர்கள் கண்ட கனவுகளை தன்னுடையதாக ஆக்கிக்கொண்டார். அப்படிப்பட்ட அண்ணாவின் நினைவு நாளில், ’மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இப்படி ஒரு நிகழ்ச்சியைக் கல்லூரிகளில் நடத்த இருப்பதாக இந்தத் தமிழ் இணையக் பல்கலைக்கழகத் தலைவர், நம்முடைய அரசுச் செயலாளர் உதயச்சந்திரன் அவர்கள் என்னிடத்தில் சொன்னார், "இதன் முதன்மை நோக்கம் என்ன?" என்று நான் கேட்டேன்.

"இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாட்டையும், தமிழர் மரபையும் உணர்த்துவதற்காக!" என்று அவர் சொன்னார். நிச்சயம் இதனைச் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட நான் ஒரு வேண்டுகோளையும் வைத்தேன். "அரசியல் சார்பு இல்லாமல் பொதுவானதாக நடத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டேன்.

"எந்த இடத்திலும் என்னுடைய பெயரோ, படமோ இடம்பெறக் கூடாது" என்றும் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டேன். நான் சொன்னபடி நடத்திக் காட்டி இருக்கிறார்கள்!

இதனுடைய தொடக்க நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை. ஆனால் 100-ஆவது நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார். இது கூடச் சரியானதுதான். இந்த 100 நிகழ்ச்சிகளும் சரியாக, முறையாக நடந்திருக்கிறதா? என்பதை கண்காணிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

100 நிகழ்ச்சிகளில், 200 சொற்பொழிவுகள் நடந்துள்ளன. இதில் மொத்தம் ஆயிரம் கல்லூரிகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்கள் பங்கெடுத்துள்ளார்கள். ஒரு லட்சம் மாணவ, மாணவியருக்கு தமிழ் மரபும், பண்பாடும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கெடுத்து உரையாற்றிய எழுத்தாளர்கள் - சொற்பொழிவாளர்கள் - ஊடகத்துறையைச் சார்ந்தோர் - அறிஞர்கள் - சமூக செயற்பாட்டாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - கலைத் துறையைச் சார்ந்தவர்கள் - தொழில் முனைவோர் - அரசு அதிகாரிகள் என அனைவருக்கும் என நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் கனவைத் தூக்கிச் சுமந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். மிகப்பெரிய வரலாற்றுக் கடமையை நீங்கள் செய்திருக்கிறீர்கள்!

நீங்கள் ஆற்றிய உரை, ஒரு நாள் நிகழ்ச்சியாகக் கருதப்படலாம். ஆனால், பலரது நினைவடுக்குகளில் போய்ச் சேர்ந்திருக்கும் என்ற செய்திகள், நாளைய நினைவுக்கு வரும்போதுதான் முழுப்பயன்பாடுகூட வெளிவரும்.

”நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு பேச்சு!

அந்த அறிவும் ஆற்றலும் மாணவர்களைக் கூர்மைப்படுத்தி வைத்திருக்கும். அந்த வகையில், நீங்கள் பேச்சாளர்கள் - சொற்பொழிவாளர்கள் அல்ல, ஆசான்கள் என்று சொல்லவே நான் ஆசைப்படுகிறேன். இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியை இணையக் கல்விக் கழகத்தினர் ஒருங்கிணைத்திருக்கின்ற மிகக் குறுகிய காலத்தில் செறிவாக இதனைச் செயல்படுத்திக் காட்டிய தமிழ் இணையக் கல்விக் கழகத்தினர்க்கு என்னுடைய பாராட்டுதல்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தோடு உங்கள் பணி முடிந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது. தொடர்ச்சியான பரப்புரைகள் மூலமாகத்தான் நல்ல பல கருத்துகளை விதைக்க முடியும். ஒரு கருத்தை திரும்பத் திரும்ப சொன்னவர்களிடமே மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும் என்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள். அதுமாதிரி விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி விதைத்தால்தான் பேரறிஞர் அண்ணா காலத்தில் உருவானதைப் போன்ற மாணவர்களை உருவாக்க முடியும்.

''நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். நான் என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியர்க்கோ, குஜராத்தியர்க்கோ எதிரானவன் அல்ல. நான், என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும்போது திராவிடனிடம் இந்த உலகத்துக்கு வழங்க திட்டமான - தெளிவான - மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட சில இருக்கின்றன" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசினார்கள்.

நம் தாய்த்தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசும் போது இதையெல்லாம் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

தாய்த் தமிழ்நாட்டு இளைஞர்களாகிய நீங்கள் - தமிழின் பெருமையை - தமிழினத்தின் பண்பாட்டை - தமிழ்நாட்டின் வரலாற்றை - முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அண்ணாவின் தம்பிமார்களாகிய எங்களால் இந்த மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, இதே அரங்கில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுடைய "ஒரு பண்பாட்டின் பயணம்" என்ற நூல் வெளியீட்டு அந்த விழாவில் நான் கலந்துகொண்டேன். அது புத்தகம் அல்ல, தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலம்!

நீங்கள் படித்துத் தெரிந்து கொண்டிருக்கும் சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் பற்றிய முழுமையான ஆய்வு நூல் அது. அந்த புத்தகத்தை வெளியிடக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நான் இன்றைக்கும் பெருமையாக கருதிக் கொண்டிருக்கிறேன்.

* சிந்துப் பண்பாடு என்பது 5000 ஆண்டுகள் பழமையானது என்றால் அங்கு வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் பேசிய மொழி என்ன? என்ற கேள்விக்கான விடையைதான் பாலகிருஷ்ணன் அவர்கள் ஆய்ந்து சொல்கிறார்...

அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி, தமிழ் மொழி. வாழ்ந்த மக்கள் சங்ககாலத் தமிழரின் மூதாதையர் என்பதை நிறுவி இருக்கிறார். 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டு நெறிமுறைகளோடு வாழ்ந்த சமூகம், தமிழ்ச் சமூகம். இன்றைக்கும் நமது பயன்பாட்டில் இருக்கும் கொற்கை, வஞ்சி, தொண்டி, ஊர், பட்டி, பள்ளி, காவேரி, பாண்டியன், குமரன், மதுரை, வன்னி, வேல் ஆகிய சொற்களெல்லாம் சிந்துப் பண்பாட்டு வெளியான குஜராத், மராட்டியம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் இருக்கிறது என்பதை அவர் நிறுவி இருக்கிறார்.

தமிழர்களின் பண்பாட்டுப் பெருமை இது! இதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

"நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறேன்!

நான் பிசிக்ஸ் படிக்கிறேன்..!

நான் எதற்கு இதை படிக்க வேண்டும்?

நான் எதற்காக இதனை தெரிந்து கொள்ள வேண்டும்?" என்று நீங்கள் நினைக்கக் கூடாது!

நாம் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள்!

நமது இனத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்!

நமது மொழியின் சிறப்பை, நமக்காக உழைத்த தலைவர்களை, நமது நாட்டின் வளத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒருவர் தனது பயணத்தை, எங்கிருந்து தொடங்கினார், எதற்காகத் தொடங்கினார் என்பதை நினைவில் வைத்திருந்தால்தான், அவரது பயணத்தின் இலக்கை அடைய முடியும்! இல்லையென்றால் அவர் இலக்கை மறந்து வழிதவறிவிடுவார்!

இது ஒரு இனத்தின் பயணம்! நம் தமிழினத்தின் பயணம்! நமது வரலாறு என்பது, நமது இலக்கை தலைமுறைகளைக் கடந்தும் நினைவுபடுத்துவது!

அதற்காகத்தான் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அரங்கத்தின் மேடையில், பதாகைகளில் வள்ளுவர் நிறைந்திருந்தார். ’மாபெரும் தமிழ்க் கனவு’என்பது வள்ளுவர் வகுத்ததுதான்.

”நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு பேச்சு!

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கனவு அது. அதுவே சமூகநீதி. அதை எல்லா நிலையிலும் சாத்தியப்படுத்துவதற்கு நாம் ஓயாது உழைத்துக்கொண்டிருக்கிறோம்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தமிழினத் தலைவர் கலைஞர் என அனைவரிலும் வள்ளுவரை நீங்கள் பார்க்கலாம்! வள்ளுவர் சொன்ன சமத்துவத்தை நோக்கியே திராவிட இயக்கம் உழைக்கிறது!

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்" என்பதுதான் தமிழரின் அறநெறி!

*சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறி முறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி" – என்பதுதான் தமிழரின் அறநெறி!

*சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே. சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே! - என்பதுதான் தமிழரின் அறநெறி!

சங்க காலத் தமிழர் வாழ்க்கை என்பது அறம் சார்ந்த வாழ்க்கை! இடைக்காலத்தில் புகுந்த சனாதனம், இந்த அறத்தைக் கொன்றது. சமய நம்பிக்கைகளுக்குள் சனாதனம் நுழைந்ததும் – உழைப்புக்குள் நிலவுடைமை நுழைந்ததும்தான் தமிழ்ச் சமுதாயத்தில் சாதிய ஏற்றத்தாழ்வையும் - பொருளாதார ஏற்றத் தாழ்வையும் விதைத்தது. இதனை எதிர்கொள்வதற்கான போராட்டம்தான் காலம் காலமாக நடந்து வருகிறது.

திருவள்ளுவர் - வள்ளலார் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் தந்தை பெரியார் வரையிலான சமூகசீர்திருத்த தலைவர்களின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறை அறிய வேண்டும்.

எப்படி இருந்த நாம் இப்போது இப்படி வளர்ந்திருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

கோவிலுக்குள் வர முடியாது -

சாலைகளில் நடக்க முடியாது -

படிக்கக் கூடாது -

எதிரே வரக்கூடாது -

போன்ற தடைகள் எல்லாம் இப்போது இல்லை என்றால், எப்படி இல்லாமல் ஒழிக்கப்பட்டது? அதுதான் நமது சமூகச் சீர்திருத்தத் தலைவர்களுடைய வெற்றி!

தோள் சீலைப் போராட்டத்துக்கு 200-ஆவது ஆண்டு விழா.

வைக்கம் போராட்டத்துக்கு இது நூற்றாண்டு விழா ஆண்டு!

இந்த வரலாறுகளைப் படியுங்கள்!

ஒருகாலத்தில் சமூக வாசல் அடைக்கப்பட்டுக் கிடந்தது. அதனை நீதிக்கட்சி ஆட்சி திறந்து விட்டது.

பள்ளிக்கூடங்கள் மூடி இருந்தது. பெருந்தலைவர் காமராசர் திறந்து வைத்தார்.

கல்லூரி வாசல்களை பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும் திறந்து விட்டார்கள்.

நம்முடைய அரசு உயர்கல்வியை உருவாக்கித் தரும் அரசு. அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து விதமான தகுதிகளையும் உருவாக்கித் தரும் அரசு. நான் முதலமைச்சராக இருந்து மட்டுமல்ல, ஒரு தந்தையாக இருந்து திட்டங்களைத் தீட்டித் தருகிறேன். .

தமிழ்நாட்டில் ஒரு கல்விப் புரட்சியே நடந்து கொண்டு இருக்கிறது.

பள்ளிக் கல்வியாக இருந்தாலும் -

கல்லூரிக் கல்வியாக இருந்தாலும் -

பல்கலைக் கல்வியாக இருந்தாலும் -

அது உங்களை கல்வித் தகுதி பெற்றவர்களாக மாற்ற வேண்டும்.

ஆனால் அதனையும் தாண்டிய தனித்திறமைகள் அவசியம். அவசியம். அவசியம். அதனை மறந்துவிடாதீர்கள். எல்லோருமே அதிக மதிப்பெண் பெறுகிறீர்கள். ஆனால் அதிலும் தனித்திறமை கொண்டவர்களாக இருக்கக்கூடியவர்களுக்குத்தான் நல்ல வேலை கிடைக்கிறது.

சுயமாகச் சிந்திப்பதும் - சிந்தித்ததை அடுத்தவருக்கு வெளிப்படுத்துவதும் அதைச் சொல்வதும் - அதை எழுதிக் காட்டுவதும் மிகமுக்கியமான தனித்திறமைகள். அறிவின் கூர்மை - அறிவாற்றல் என்பது இதுதான்!

இப்படி தமிழ்நாட்டு மாணவர்கள் - இளைஞர்கள் அனைவரும் திகழ வேண்டும் என்பதற்காகத்தான் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் நாள் எனது பிறந்தநாளில் தொடங்கி வைத்தேன். இது எனது கனவுத் திட்டம். நான் மட்டுமே முதல்வன் அல்ல, தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரையும் நான் முதல்வன் என்று சொல்ல வைத்துக் கொண்டிருக்கும் திட்டம் அது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களிடம் உயர் கல்வி, வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகம் தரப்பட்டுள்ளது. மாநில அளவிலும் - ஒன்றிய அளவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் என்னென்ன வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இந்தக் கையேடு சொல்கிறது.

தந்தை பெரியார் அவர்கள்தான் சொல்வார்கள்...

"தமிழர்களே நீங்கள் எங்காவது போய் முன்னேறி விடுங்கள்" என்பார். அத்தகைய வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறோம்.

தமிழ்ப் பெருமிதம் என்ற கையேடும் - கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகமும் ஒரு லட்சம் மாணவ மாணவியர் கைக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. இணையம் வழியாக இன்னும் பல லட்சம் பேருக்கு போய்ச் சேர்ந்திருக்கும்.

இந்த கையேட்டை தயாரித்து வழங்கிய தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி வேலை வாய்ப்புக் கையேடு என்பது உங்களை உயர்த்திக் கொள்ள!

தமிழ்ப் பெருமிதம் என்ற கையேடு, நமது இனத்தையும் மொழியையும் உயர்த்துவதற்காக!

”நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு பேச்சு!

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, தன்னைப் பற்றிய சிந்தனையும் இருக்கவேண்டும் - நாட்டைப் பற்றிய பொது நோக்கமும் இருக்கவேண்டும். இரண்டுமே முக்கியம்தான்!

இந்த அரங்கத்தில் இருக்கும் உங்களைப் போல, இளம் வயதில், அதாவது 18 வயதில், கோவையில் நடந்த திமுக மாணவர் மாநாட்டுக்கு, பார்வையாளராகச் சென்றிருந்தேன். அப்போது அழைப்பிதழில் பெயர் போடும் அளவுக்கு முக்கியப் பேச்சாளராக நான் வளரவில்லை. 'எனக்கு ஒரு நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு தர முடியுமா?' என்று மாநாட்டு தலைவராக, பொறுப்பாளராக இருந்த எல்.கணேசன் அவர்களிடம் அனுமதி கேட்டு அனுமதியும் கொடுத்தார். பேசினேன். ''மொழிக்காக - நம்முடைய இனத்துக்காக போராடுகிறோம். போராடுகிற இந்த நேரத்திலே நம்முடைய உயிரை இழக்கின்ற தியாகத்தைச் செய்வதற்குக்கூடக் காத்திருக்கிறோம். மொழிக்காக – இனத்துக்காக 'தனயனை இழந்த தந்தை' என்று என்னுடைய தந்தைக்கு பாராட்டுக் கிடைக்கும்" - என்று நான் பேசினேன்.

‘இது நடந்தது, 1971-ஆம் ஆண்டு!

எனது முதல் மாநாட்டு பேச்சு இது!

அதே மேடையில், தலைவர் கலைஞர் இருந்தார், அப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். எனக்கு மட்டுமல்ல, இளைஞர்கள் அனைவர்க்கும் அவர் அறிவுரை கூறினார்.

"முதலில் நன்கு படியுங்கள்! அதுதான் உங்களது பெற்றோருக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய முதல் கடமை" என்று குறிப்பிட்டார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!

அதே அறிவுரையைத்தான் இன்றைய இளைஞர்களுக்கும் நான் சொல்வேன்.

படியுங்கள்!

படியுங்கள்!

படியுங்கள்!

இதுதான் என்னுடைய முதல் வேண்டுகோள்!

கல்விதான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து! அந்த சொத்தைச் சேகரித்துவிட்டால் மற்ற சொத்துகள் தானாக வந்து சேர்ந்துவிடும்!

எனவே பள்ளிக் காலத்தில், கல்லூரிக் காலத்தில் படிப்பில் இருந்து கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது. எந்தச் சூழலிலும் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடாதீர்கள். அது உங்கள் உடல் நலனுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு நலனுக்கும் கேடு விளைவிக்கும்.

அதேபோல் இணையத் தளங்களை, சமூக வலைத்தளங்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள். குறிப்பாக மாணவிகள், நிச்சயமாக படித்தாக வேண்டும். பட்டங்கள் வாங்கத் தவறக் கூடாது. வாங்கிய பட்டத்துக்குத் தகுதிவாய்ந்த வேலைகளுக்கு நிச்சயம் செல்லவேண்டும். உயர் பதவிகளை அடைய வேண்டும். தங்களின் பொருளாதாரத் தேவையை தாங்களே பணியாற்றிப் பெறும் தகுதியை அடைய வேண்டும்.

மாணவராக இருந்தாலும் - மாணவியாக இருந்தாலும் தைரியம் - துணிச்சல் - தன்னம்பிக்கை - அஞ்சாமை ஆகியவை வேண்டும். சமூகநீதி - சமநீதி - சமதர்மம் – சகோதரத்துவம் ஆகிய நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும்!

எனக்கு ஒரு மாபெரும் கனவு இருக்கிறது. "எல்லார்க்கும் எல்லாம்" என்பதுதான் அந்தக் கனவு!

கனவு என்றால், கண்ணை மூடிக் கொண்டு கற்பனை உலகில் மிதப்பது அல்ல!

ஒரு லட்சியத்தை நெஞ்லேந்தி நாளும் உழைப்பது!

அந்த உழைப்பைத்தான் நாள்தோறும் நான் இந்த தமிழ்ச்சமுதாயத்திற்காக தந்துகொண்டு இருக்கிறேன்!

என்னுடைய கனவை நோக்கிய பெரும்பயணத்துக்கு கைகாட்டி, கலங்கரை விளக்காக இருக்கக் கூடியவைதான், மாபெரும் தமிழ்க் கனவு போன்ற நிகழ்ச்சிகள்!

இதனை சிறப்பாக நடத்தித் தந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!

இதுபோன்ற நிகழ்ச்சிகள் உருவாக்க இருப்பதே உண்மையான உணர்ச்சிகள்.

நாடு இதனால் அடையும் தமிழ் மலர்ச்சிகள்.

ஆகவே, உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories