மு.க.ஸ்டாலின்

”தலைவர் கலைஞர் எனக்கு வைக்க இருந்த பெயரே வேறு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த முக்கிய வேண்டுகோள்!

உங்களுக்கு கூட ஒரு சந்தேகம் வரலாம். உன் பெயர் என்ன தமிழ் பெயரா? என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்கலாம். அது ஒரு காரணப் பெயர். அதற்கு நான் பல இடங்களில் விளக்கமாக சொல்லி இருக்கிறேன்.

”தலைவர் கலைஞர் எனக்கு வைக்க இருந்த பெயரே வேறு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த முக்கிய  வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை – அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழகத்தின் தலைமை நிலையச் செயலாளரும் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை வாரியத் தலைவருமான பூச்சி எஸ். முருகன் இல்லத் திருமணத்தைத் தலைமை ஏற்று நடத்திவைத்து, மணமக்கள் எம்.அருணா (எ) ஸ்ரீ – எம். அசோக் சக்கரவர்த்தி ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

”பூச்சி முருகன் அவர்களைப் பற்றி சொல்லவேண்டுமென்றால், எப்போது பார்த்தாலும் சிரித்த முகத்தோடு, இவரா இப்படி பணியாற்றுகிறார் என்று எண்ணும் அளவிற்கு சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய பூச்சி முருகன் அவர்கள்.

எனவே அவருடைய பெயரை நாம் இன்றைக்குப் பூச்சி முருகன் என்றும், சிலர் பூச்சி என்றும் கூப்பிடுகிறார்கள். நான் பெரும்பாலும் பூச்சி என்று கூப்பிடுவது இல்லை. முருகன்.. முருகன்.. என்று தான் கூப்பிடுவேன். ஏனென்றால் முருகன் மீது நமக்கு அன்பு உண்டு, பாசம் உண்டு. துரைமுருகன் அவர்களைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

எனவே அப்படிப்பட்ட பெயரை பெற்றிருக்கும் பூச்சி முருகன் அவர்கள் இல்லத்தில் நடக்கும் இந்த மணவிழாவில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். அது என்னவென்று கேட்டால், உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என்பது தான் அந்த வேண்டுகோள்.

உங்களுக்கு கூட ஒரு சந்தேகம் வரலாம். உன் பெயர் என்ன தமிழ் பெயரா? என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்கலாம். அது ஒரு காரணப் பெயர். அதற்கு நான் பல இடங்களில் விளக்கமாக சொல்லி இருக்கிறேன். பல பத்திரிகைகளில், செய்திகளில் படித்து நீங்களும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.

தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தவரையில் எங்களுடைய குடும்பத்தில் அது அண்ணனாக இருந்தாலும், தங்கைகளாக இருந்தாலும் எல்லா பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் தான். என் பெயர் மட்டும்தான் கொஞ்சம் வித்தியாசம். அதுவும் ஒரு காரணப் பெயர்.

கம்யூனிசக் கொள்கை மீது தலைவர் கலைஞர் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனால் தான் அவர் இறந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால் அவருடைய நினைவாக இந்தப் பெயரை எனக்கு சூட்டினார்கள்.

அந்தப் பெயரை சூட்டுவதற்கு முன்பு தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு என்ன பெயர் சூட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார் என்று சொன்னால், ‘அய்யாதுரை’ என்று தான் பெயர் சூட்ட நினைத்தார்கள். ‘ஐயா’ என்றால் யார் என்று தெரியும், தந்தை பெரியார். ‘துரை’ என்றால், அண்ணாவின் பெயருக்குப் பின்னால் வரும் துரை என்று சேர்த்து வைக்க வேண்டும் என்று கருதி இருந்தார்கள்.

ஆனால் ரஷ்யாவில் ஸ்டாலின் அவர்கள் இறந்தபோது, கடற்கரையில் இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு துண்டு சீட்டை கலைஞர் இடத்தில் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார்கள். அந்த துண்டு சீட்டில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்று சொன்னால், உங்களுக்கு ஒரு பையன் - மகன் பிறந்திருக்கிறான் என்ற செய்தி.

அதைப் படித்துப் பார்த்த தலைவர் கலைஞர் அவர்கள் அங்கேயே எனக்கு பெயர் சூட்டினார்கள். எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான், அந்த மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறேன் என்று சொல்லியிருக்கிறார், இது வரலாறு.

என்னுடைய அண்ணன்கள் மு.க.முத்துவாக இருந்தாலும், அழகிரியாக இருந்தாலும், தம்பி தமிழரசாக இருந்தாலும், தங்கை கனிமொழியாக இருந்தாலும், செல்வியாக இருந்தாலும் எல்லாம் தமிழ்ப் பெயர்கள் தான். அதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது.

என்ன காரணம் என்றால், மு.க.முத்து - அவருக்கு அந்தப் பெயர் வைத்ததற்கு காரணம், என்னுடைய தாத்தா - தலைவருடைய தந்தை முத்துவேல் அவருடைய நினைவாக வைக்கப்பட்ட பெயர்.

அதேபோல அழகிரி - பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களைப் பார்த்துத்தான் நான் பேச்சாளராகவே ஆனேன் என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் நினைவாக அழகிரி என்று பெயர் சூட்டினார்கள்.

என்னுடைய பெயரை ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தலைவர் கலைஞர் அவர்கள் என் தம்பிக்கு தமிழ் என்று பெயர் சூட்டினார்கள். இதுதான் வரலாறு.

எனவே இதை மனதில் வைத்துக் கொண்டு இன்றைக்கு மணமக்களாக வீற்றிருக்கும் நிச்சயமாக அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும்.

எனவே அப்படிப்பட்ட தமிழை வளர்க்கின்ற முயற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொண்டு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக” வாழுங்கள்.. வாழுங்கள்.. என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories