மு.க.ஸ்டாலின்

“மனு கொடுத்தால் நிறைவேறும் என நம்புகிறார்கள்.. நான் இங்கு உறுதியளிக்கிறேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தமிழ்நாட்டு மக்களே உங்கள் கோரிக்கைகளை எங்கள் தோளில் இறக்கி வையுங்கள். அவற்றை நிறைவேற்றிக் காட்டுவோம்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

“மனு கொடுத்தால் நிறைவேறும் என நம்புகிறார்கள்.. நான் இங்கு உறுதியளிக்கிறேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.12.2021) திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

“மன்னர்கள் விசுவநாதரும், முத்துவீரப்பனும் கோட்டை கட்டிய இந்த திருச்சியில் - சந்தா சாகிப் வீரமிகு போர் நடத்திய இந்த திருச்சியில் - ராணி மங்கம்மாள் சிறப்புமிகு ஆட்சி நடத்திய இந்த திருச்சியில் – ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவு பகவலவன் தந்தை பெரியார் மாளிகை அமைத்துக் குடியிருந்த இந்த திருச்சியில் - நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களைத் தலைவர் ஆக்கிய இந்த திருச்சியில் - இன்றைய தினம் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுவிற்கு நான் வந்திருக்கிறேன். திருச்சிக்கு எத்தனையோ முறை வந்திருக்கிறேன். திருமண விழாக்களில், பொதுக் கூட்டங்களில், கழக நிகழ்ச்சிகளில், அரசு நிகழ்ச்சிகளில், மாநாடுகளில் இலட்சக்கணக்கான தொண்டர்கள், உடன்பிறப்புகள் மத்தியில் நான் பங்கேற்று பலமுறை பேசி இருக்கிறேன். ஆனால், இன்று முதலமைச்சராக மக்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் நேரு அவர்கள் மீண்டும் ஒரு மக்கள் கடலை இங்கே உருவாக்கி இருக்கிறார். தம்பி மகேஸ் சொன்னார், மாநாட்டு மன்னர் என்று. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அவருக்கு மாநாடு போன்ற கூட்டத்தை எழுப்புவது என்பது சர்வ சாதாரணம், டீக்கடையில் நின்று டீ குடிப்பது போன்று. அதனால்தான் நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு என்று நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். நேருவுக்கு நிகர் நேருதான் என்று நான் குறிப்பிட்டுள்ளேன். மாநாடு என்றால் நேரு என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன் என்று சொன்னால், எதிரியை நேருக்கு நேராக எதிர்ப்பதிலும் நட்பை நெஞ்சுக்கு நேராக அரவணைப்பதிலும் நிகரானவர் நேரு அவர்கள் என்று நான் பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். இந்த மேடையில் நிற்கும்போது, திருச்சிக்கு வந்தபோதெல்லாம் நான் சொல்லியிருப்பது, இப்போது மலைக்கோட்டையில் இருந்து எனக்கே எதிரொலியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் சேலத்தில் இதே போன்ற அரசு நிகழ்ச்சியை நேரு அவர்கள் முன்நின்று நடத்தினார்கள். அங்கிருக்கக்கூடிய நம்முடைய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பில் இருக்கும் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அந்த நிகழ்ச்சிக்கு காரணமாக இருந்திருந்தாலும், முறையோடு, செழிப்போடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு, கம்பீரமாக அதைப் பொறுப்பேற்று நடத்திக் காட்டியவர் நேரு அவர்கள். முதலில் அவர் திருச்சியில் நடத்தாமல் சேலத்தில் நடத்தி முடித்துவிட்டு - அதன்பிறகு தான் திருச்சிக்கு வந்திருக்கிறார். எனவே, இது அவருடைய பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது. சில பெண்கள் - திருமணம் முடித்துச் சென்றதும் புகுந்த வீட்டுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். அது தவறில்லை. அது போன்றுதான் நேரு அவர்களும் புகுந்த வீடான சேலத்தில் சிறப்பாக நடத்திவிட்டு - பிறந்த வீட்டையும் மறக்காமல் இங்கும் அவர் சிறப்பாக நடத்திக் கொண்டு இருக்கிறார்.

நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அவர்களும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களும் இரட்டையர்களாகச் திருச்சி மாவட்டம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து மொத்தம் 78 ஆயிரத்து 582 மனுக்களை மக்களிடத்திலிருந்து பெற்றுள்ளார்கள். அவற்றை அலசி ஆராய்ந்து ஆய்வு நடத்தி, அதில் 45 ஆயிரத்து 88 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்களை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், பரிசீலனை செய்துகொண்டிருக்கும் மனுக்களில் தகுதியான மனுக்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு நிறைவேற்றப்படும் என்ற உறுதியை நான் உங்கள் மத்தியில் குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் எந்தத் தனிமனிதருக்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க மனு இல்லாத ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும். அதுதான் என் இலட்சியம். அரசின் நலத் திட்டங்கள் - சேவைகள் அனைத்தும் அனைத்து மக்களையும் சென்றடைந்தாக வேண்டும். அரசிடம் கோரிக்கை வைத்தால் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை, ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.

“மனு கொடுத்தால் நிறைவேறும் என நம்புகிறார்கள்.. நான் இங்கு உறுதியளிக்கிறேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பல்லாயிரக்கணக்கான மனுக்கள் மீது நாம் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றால் மீண்டும், மீண்டும் மனுக்களை மக்களிடம் இருந்து பெறக்கூடிய நிலையைத்தான் இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது உறுதியாகச் சொல்கிறேன், இத்தகைய சுழற்சி முறையை எப்போதும் நாங்கள் நிறுத்த மாட்டோம். சிலர் நினைக்கலாம், இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் - ஆரம்பத்தில் இப்படித்தான் - கல்யாண ஜோர் - புது மாப்பிள்ளை என்று நினைப்பார்கள். உறுதியாகச் சொல்கிறேன், நாங்கள் எப்போதும் இப்படித்தான் இருப்போம். எந்த நிலையிலும் இதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

இன்றைய தினம் திருச்சி மாவட்டத்துக்கான பெருந்திட்டங்கள் சிலவற்றை மட்டும் உங்களிடம் குறிப்பிட விரும்புகிறேன். திருச்சி மாநகராட்சியின் வேகமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இப்பெருந்திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம்.

  • திருச்சி மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளில் 210 கோடி ரூபாய் செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.

  • 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பஞ்சப்பூரில் 100 எம்.எல்.டி. நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.

  • திருச்சி - திருவரங்கம் இடையிலான பாலம் பழமையானதாக இருக்கிறது. அதனால் புதிய பாலம் அமைப்பது குறித்தும் - திருச்சி நீதிமன்ற ரவுண்டானா - முதல் சுண்ணாம்புக்காரன்பட்டி வரையில் புதிய வெளிவட்டச் சாலை ஒன்றை அமைப்பது குறித்தும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கச் சொல்லி இருக்கிறேன். அது கிடைத்த பிறகு அந்தப் பணியும் விரைவில் தொடங்கப்படும்.

  • துறையூர் மாநகராட்சி மக்களுக்காக புதிய குடிநீர் திட்டமானது 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

  • மணப்பாறை கூட்டுக்குடி நீர்த்திட்டம் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் மேம்படுத்தப்படும்.

- ஆகிய இப்படிப்பட்ட பெரிய திட்டங்களை நான் இங்கு சுருக்கமாக உங்களிடத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

திருச்சியைப் பொறுத்தவரையில் 153.22 கோடி ரூபாய் மதிப்பிலான 203 திட்டப்பணிகள் முடிந்து அவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. இன்றைய தினம் 604.10 கோடி ரூபாய் மதிப்பிலான 532 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இவை விரைவாக முடிக்கப்பட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும். அடிக்கல் நாட்டிய பணிகள் எந்தளவுக்கு வேகத்துடன் நடந்து வருகிறது என்பதை இந்த மாவட்டத்தைச் சார்ந்திருக்கக்கூடிய அமைச்சர் மட்டுமல்ல முதலமைச்சராக இருக்கக்கூடிய நானே அடிக்கடி வந்து நேரடியாக ஆய்வு நடத்துவேன், துரிதப்படுத்துவேன். இன்றைக்கு காலையிலே கூட தஞ்சையிலே இதே போன்று ஒரு அரசு நிகழ்ச்சி நடந்தது. நான் அங்கே பேசும்பொழுதும் தெளிவாகச் சொன்னேன். ஏன் என்றால் இன்றைக்கு அதிகம் கூட்டம் கூட்டக் கூடாது. அப்படியே ஒருவேளை கூட்டம் கூட்டினாலும் மாஸ்க்குடன் நீங்கள் வரவேண்டும். கொரோனாவுக்கு என்னென்ன விதிமுறைகள் வகுத்துத் தந்து இருக்கின்றோமோ நீங்கள் அதை கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே, கொரோனாவை முழு அளவில் கட்டுப்படுத்தாவிட்டாலும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.

“மனு கொடுத்தால் நிறைவேறும் என நம்புகிறார்கள்.. நான் இங்கு உறுதியளிக்கிறேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இப்போது ஒமைக்ரான் என்கிற ஒரு புதிய தொற்று வந்திருக்கிறது. வெளிநாடுகளில் பெரிய அதிர்ச்சியைத் தரக்கூடிய வகையில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே சில மாநிலங்களில் வந்து விட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இரண்டு நாட்களாக அப்படியே தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆகவே, இந்தச் சூழ்நிலையில் நான் போய் தஞ்சையிலே, திருச்சியிலே இந்த நிகழ்ச்சியை நடத்தினால் அந்த நோய் பரவக்கூடிய காரணமாக அமைந்துவிடுமோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதனால் நேரு அவர்களையும், மகேஸ் பொய்யாமொழி அவர்களையும் இரண்டு நாளைக்கு முன்பு சென்னைக்கு வரச்சொல்லி, கலந்துபேசி ஏறக்குறைய தஞ்சையைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட ஒரு 20000-25000 பேர் பயனாளிகளை அழைத்து நடத்த வேண்டும். அதே போல திருச்சியைப் பொறுத்த வரை 45,344 பயனாளிகளை அழைத்து நடத்த வேண்டும். ஆகவே அதை யோசித்துப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்ற சொன்னபோது மிகவும் பெருந்தன்மையோடு சொன்னார்கள்.

நாங்கள் அத்தனை பேரையும் கூப்பிடவில்லை. அதில் ஒரு 25 சதவீதம் அதாவது 5000 பேர் அவர்களையும் மட்டும் அழைத்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து, இடைவெளி விட்டு இடைவெளி விட்டு அவர்களை உட்கார வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அது ஒன்றும் தவறில்லை என்று என்னிடத்திலே எடுத்துச் சொல்லி அதற்குப் பிறகு அந்த வகையிலேதான் நாம் காலையிலும் இப்பொழுது மாலையில் திருச்சியிலும் நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு மட்டும் 44 ஆயிரத்து 645 பயனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் நலத்திட்ட உதவிகள். அவர்கள் அத்தனை பேரும் இங்கு வரவில்லை. ஒரு 5000 பேர் மட்டும்தான் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் இந்த விழா முடிவடையும் நேரத்தில் அந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. மிச்சம் இருக்கக்கூடியவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் கலந்து பேசி முடிவெடுத்திருக்கிறோம்.

இன்றிலிருந்து மூன்றே நாட்களுக்குள்ளே அந்த மிச்சம் இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் வீடுதேடி வந்து அதிகாரிகளே, நம்முடைய மக்கள் பிரதிநிதிகளே உங்களிடத்திலே அந்த நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இது உறுதி. ஆகவே, இதன் மொத்த மதிப்பு 327. 48 கோடி ரூபாய் ஆகும். ஆகமொத்தம் இன்றைய தினம் மட்டும் சுமார் 1084.80 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள் என்ற இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. எனக்கு உண்மையில் மனநிறைவாக இருக்கிறது. எனது மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் உண்மையான, மக்கள் நலன் சார்ந்த தெம்போடு, ஒரு இருமாப்போடு இந்த ஆட்சியை வழங்கிக் கொண்டு இருக்கிறேன்.

நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இந்த இடத்திற்கு 10 அல்லது 15 நிமிடத்திற்குள் வந்துவிட முடியும், ஆனால் ஏறக்குறைய இரண்டு, இரண்டரை மணி நேரம் ஆகியிருக்கிறது. என்ன காரணம்? மகேஸ் சொன்னார், திரு.சிவா அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார். பொதுமக்கள் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சிலர், சாலை இருமருங்கிலும் நின்றுகொண்டு மகிழ்ச்சியோடு, உணர்ச்சியோடு வரவேற்றார்கள். இங்கே சொன்னதுபோல அடைமொழி வைத்து என்னை வாழ்த்தி முழக்கமிட்டார்கள், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, பூரித்துப் போனேன்.

ஆனால், அதே நேரத்தில் எனக்கு ஒரு அச்சுறுத்தலும் ஏற்பட்டது. எவ்வளவு நம்பிக்கை நம் மீது வைத்திருக்கிறார்கள், அந்த நம்பிக்கையை நாம் எப்படி காப்பாற்றப் போகிறோம் என்பதுதான் எனக்கு வந்தது. எங்கே சென்றாலும், மனுநீதி சோழன் என்று கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் இப்போது மனு வாங்கக்கூடிய சோழனாக இன்றைக்கு வலம் வரக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அந்த மனுக்களைக்கூட சில நேரங்களில் உள்ளே புகுந்து, இடிபாடுகளில் சிக்கி அவதிக்கு ஆளாகும் அந்தச் சூழ்நிலையை பார்க்கும்போது, நான் ஏற்கனவே நம்முடைய தோழர்கள், தொண்டர்களிடத்தில், அரசு அதிகாரிகளிடத்தில், அரசு அலுவலர்களிடத்தில் நீங்களே முன்கூட்டியே நேரடியாகச் சென்று அதைப் பெற்றுக் கொள்ளுங்கள், அதற்குப் பிறகு நான் அதை வாங்கிக் கொள்கிறேன், எளிமையாக முடியும் என்றும் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிக்கலாம் என்று நான் சொன்னேன். ஒரு சிலர் கொடுக்கிறார்கள், ஒரு சிலர் கொடுப்பதில்லை, அவர் கையில்தான் கொடுப்போம், அப்போதுதான் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை இன்றைக்கு மக்களிடத்தில் வந்திருக்கிறது.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதுமான நிகழ்ச்சியில் பங்கெடுப்பதன் மூலமாக ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற வாக்குக்கு உண்மையாக இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொளண்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இதே திருச்சியில் ஒரு மாபெரும் மாநாடு. ஒரு பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நம்முடைய அமைச்சர் நேரு அவர்கள் நாம் ஆட்சிக்கு முன்பு, தேர்லுக்கு முன்பு நடத்தினார். அந்தக் கூட்டத்தில் ஏழு உறுதிமொழிகளை நான் தந்தேன். அந்த உறுதிமொழிப்படிதான் இன்றைக்கு நாம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

''தி.மு.க தலைமையில் அடுத்து அமைகிற ஆட்சி

தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதி ஆட்சியாக இருக்கும்.

பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சியின் ஆட்சியாக இருக்கும்.

நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடைய நவீன மேம்பாட்டு ஆட்சியாக இருக்கும்.

பெருந்தலைவர் காமராசரின் கல்வி வளர்ச்சி ஆட்சியாக இருக்கும்.

தோழர் ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியாக - அமையும்!" என்று நான் சொன்னேன். அத்தகைய ஆட்சியைத்தான் நாம் அமைத்திருக்கிறோம். அமைத்தது மட்டுமல்லாமல், அத்தகைய ஆட்சியைத்தான் இன்றைக்கு நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆட்சி அமைந்தால் அந்த அரசு என்னென்ன திட்டங்களுக்கு முன்னுரிமை தரும் என்பதையும் அந்தக் கூட்டத்தில் அப்போது நான் சொன்னேன். அந்த ஏழு உறுதிமொழிகளைத் தந்து அதற்கு என்னென்ன முன்னுரிமையை நாங்கள் வழங்குவோம் என்று தெளிவாக நான் எடுத்துச் சொன்னேன்.

“மனு கொடுத்தால் நிறைவேறும் என நம்புகிறார்கள்.. நான் இங்கு உறுதியளிக்கிறேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு!

  • மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!

  • குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!

  • அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்!

  • எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!

  • உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்!

  • அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்! –

இவற்றைத்தான் எனது ஏழு உறுதிமொழிகளோடு நான் குறிப்பிட்டுச் சொன்னேன்!

இந்த ஆறு மாத காலத்தில் ஏராளமான புதிய தொழில்களை உருவாக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. அதனால், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறப் போகிறார்கள். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி என்பது மிகப்பெரிய இலக்கை எட்ட இருக்கிறது.

வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு என்று நிதிநிலை அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னோம். அதை முதல் நிதிநிலை அறிக்கையிலேயே மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறோம். வேளாண்மைத் துறைக்கு என்று தனிகவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பைக் கொடுத்து மகசூலை அதிகரிக்க உதவிகள் செய்து வருகிறோம்! கிராமப்புறத் திட்டங்கள் அனைத்தையும் புதுப்பித்து நிதிகளை ஒதுக்கீடு செய்து வருகிறோம்! புதிய கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன! மக்களைத் தேடி மருத்துவம் முதல் அதிநவீன மருத்துவமனைகள் வரை எத்தனையோ திட்டமிடுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன! நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் அடிப்படையில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலைகள், பாலங்கள் அறிவிக்கப்பட்டுப் பணிகள் நடக்கத் தொடங்கி இருக்கிறது!

தொழில் வளர்ச்சிக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை சமூக வளர்ச்சிக்கும், வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும், பெண்களுக்கான மேம்பாட்டுக்கும் தரத் தொடங்கி இருக்கிறோம். அந்த அடிப்படையில் பார்த்தால் திருச்சியில் தேர்தலுக்கு முன்பு நான் வழங்கிய ஏழு உறுதிமொழிகளையும் எடுத்து வைத்துக் கொண்டு, நான் செயல்படுத்தத் தொடங்கி விட்டேன். இதை திருச்சி மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகத்தான் நான் விரும்புகிறேன்.

''நம்மால் முடியும்! நம்மால் மட்டும்தான் முடியும்!" என்று நான் அப்போதே குறிப்பிட்டேன். அந்த நம்பிக்கை தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போது எனக்கு அதிகமாக வந்துவிட்டது. கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்திக் காட்டி வருகிறோம். ஆட்சிக்கு வந்தபோது கொரோனாவின் கோரத்தாண்டவம்! அதன் பிறகு மழை - வெள்ளப் பாதிப்புகள். அத்தனை சோதனைகளையும் வென்றோம். இந்தச் சோதனையான நேரங்களில் எல்லாம் மக்களோடு மக்களாக நான் இருந்தேன். நான் மட்டுமல்ல, அமைச்சர் பெருமக்கள் இருந்தார்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள், உள்ளாட்சி அமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் இருந்தார்கள், அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் இருந்தார்கள். மொத்தத்தில் அரசாங்கமே இருந்தது.

தமிழ்நாட்டு மக்களே உங்கள் கோரிக்கைகளை எங்கள் தோளில் இறக்கி வையுங்கள். அவற்றை நிறைவேற்றிக் காட்டுவோம். நாளை மறுநாள் 2022 புதிய ஆண்டு பிறக்கிறது. புதிய ஆண்டு பிறக்கப் போகும் நேரத்தில் நான் குறிப்பிட விரும்புவது 2021 முடிந்து 2022 அடுத்த ஆண்டு பிறப்பதாகக் கருத வேண்டாம். கடந்த காலச் சுமைகள் - சோகங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ஒரு சிறப்பான ஆண்டு பிறக்கப் போகிறது. மக்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் ஆண்டாக 2022 அமையட்டும். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்கக்கூடிய ஆண்டாக இருக்கட்டும்.

இந்தியாவிலேயே இருக்கக்கூடிய மாநிலங்களை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து, அதில் இருக்கும் முதலமைச்சர்களை எல்லாம் சுட்டிக்காட்டி, ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அந்த செய்திகள் எல்லாம் வந்தது. எனக்கு அதில் மகிழ்ச்சி கிடையாது, ஒரு பக்கத்தில் இருக்கலாம், அது வேறு. ஆனால், முழு மனநிறைவு அடைய வேண்டுமென்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய முதலமைச்சர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த மு.க.ஸ்டாலின் முதலிடம் என்று சொல்வதைவிட, இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் நம்முடைய தமிழ்நாடு முதலிடம் என்று சொல்லக்கூடிய நிலை வந்தால்தான் எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி ஏற்படும். ஆகவே, 2022 ஆம் ஆண்டை சிறந்த ஆண்டாக ஆக்குவதற்கு நம்முடைய அரசு தொடர்ந்து தன்னுடைய கடமையை ஆற்றும், அதற்கு நீங்கள் ஒன்றிணைந்து, துணை நின்று கரம் கொடுங்கள். அந்த வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்தித் தருவதற்கு நீங்களும் ஒத்துழைப்பு தாருங்கள்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories