மு.க.ஸ்டாலின்

“‘அனைவருக்கும் தடுப்பூசி’ என கொள்கை முடிவெடுங்கள்” - பாஜக - அதிமுக அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

“தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அ.தி.மு.க. அரசு மட்டுமல்ல - மத்திய பா.ஜ.க. அரசும் தோல்வியடைந்து விட்டது” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

“‘அனைவருக்கும் தடுப்பூசி’ என கொள்கை முடிவெடுங்கள்” - பாஜக - அதிமுக அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"கொரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய பா.ஜ.க. அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீ போல் அதிகரித்து வருகின்ற சூழலில் “அனைவருக்கும் தடுப்பூசி” எனக் கொள்கை முடிவு எடுக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, “அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி” என்ற முடிவினை எடுத்திருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது. கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,985 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 6,984 பேர் பாதிக்கப்பட்டு, சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா தொற்று அதி வேகமாகப் பரவி வருவதாகத் தமிழக அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன.

இரண்டாவது அலை தாக்குதல் இவ்வளவு படுமோசமாக நம் மாநிலத்திற்கு மட்டுமின்றி - நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதற்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் அலட்சிய மனப்பான்மையும் - அஜாக்கிரதையான நிர்வாகமுமே காரணம். தடுப்பூசிகளை உரிய நேரத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வராதது, நம் மக்களுக்குப் பயன்பட வேண்டிய சுமார் 5.84 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என “கொரோனா முதல் அலை தாக்குதலில்” காட்டிய மெத்தனத்தை விட அதிக பொறுப்பின்மையை இந்த முறையும் மத்திய பா.ஜ.க. அரசு காட்டிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் தடுப்பூசி போடுவதை “திருவிழா” என்று பெயர் சூட்டி தனது அரசின் நிர்வாக அலட்சியத்தைத் திசை திருப்புவதிலேயே பிரதமர் நரேந்திர மோடி அக்கறை காட்டுகிறாரே தவிர - அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிட வேண்டும் என்று முடிவு எடுக்க இதுவரை அவர் முன்வரவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்த பிறகும் கூட - அவர் இன்னும் பா.ஜ.க.விற்காக மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில்தான் இருக்கிறார்!

தமிழ்நாட்டில் இதுவரை முதல் டோஸ் 35.67 லட்சம், இரண்டாவது டோஸ் 4.53 லட்சம் என்ற அளவில் மொத்தம் 40.21 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பிற்கு இது எப்படி போதுமானதாக இருக்கும்? ஏன் அ.தி.மு.க. அரசு அதிக தடுப்பூசிகளை கேட்டுப் பெறவில்லை? தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ஒரு பேட்டியில், “தடுப்பூசி பயன்பாட்டின் அடிப்படையில்தான் மத்திய அரசு தடுப்பூசி சப்ளை செய்கிறது. குறைவாக ஊசி போட்டுக் கொண்டால் தமிழகத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாகவே இருக்கும்” என்கிறார். “அனைவருக்கும் தடுப்பூசி போடும் நோக்கில் சப்ளை செய்வதற்குப் பதில் மாநிலத்தில் போடப்படும் தடுப்பூசியின் அடிப்படையில்தான் சப்ளை” என்று மத்திய பா.ஜ.க. அரசு முடிவு எடுத்திருந்தால் - அது எவ்வளவு மோசமான மக்கள் விரோத முடிவு? ஏன் இதை அ.தி.மு.க அரசு எதிர்க்கவில்லை?

உயிர்காக்கும் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள மக்கள் முன்வரவில்லை என்றால் - அதற்கு மத்திய அரசும், அ.தி.மு.க. அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் தடுப்பூசியின் பாதுகாப்புப் பற்றி உரிய வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறியது இரு அரசுகளும்தான். “தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” என்ற விழிப்புணர்வை உரிய காலத்தில் ஏற்படுத்தாமல் - தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையை வைத்தே தடுப்பூசி சப்ளை செய்யப்படும் என்று மத்திய பா.ஜ.க. அரசு பிடிவாதம் காட்டுவது மிகவும் தவறான நடைமுறை. இது மாதிரி - தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசி சப்ளை செய்வதில் அறிவியல்பூர்வமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களின் உயிரோடு நடத்தும் விபரீத விளையாட்டாகும்.

கடந்த 8-ஆம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, “தடுப்பூசி குறித்து இன்னும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுமதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் விரைந்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார் எனத் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அ.தி.மு.க. அரசு மட்டுமல்ல - மத்திய பா.ஜ.க. அரசும் தோல்வியடைந்து விட்டது என்பதை இது காட்டுகிறது.

எனவே, கொரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி - மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழியும் சூழ்நிலை உருவாகியுள்ள இந்த நேரத்தில், “அனைவருக்கும் தடுப்பூசி” என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளைத் தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை - குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக அரசு அதிகாரிகளும் போதிய விழிப்புணர்வை இப்போதாவது ஏற்படுத்தி - அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்கள் அனைவரும் - தவறாமல் முகக்கவசம் அணிந்து - கைகளை அடிக்கடி கழுவி - பொது இடங்களில் தனிமனித இடைவெளி விட்டு கொரோனா தொற்றினை தடுப்பதற்கான தமிழக அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும், அனைவரும் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories