மு.க.ஸ்டாலின்

என்னதான் மோடி, அமித்ஷா வந்தாலும் அவங்க ஜீரோ; நாமதான் ஹீரோ - மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட பரப்புரை! DMK4TN

இது எங்க ஏரியா, உள்ள நுழையவே முடியாது. உங்கள் பாசிச அதிகாரம் தமிழ்நாட்டில் எடுபடாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மக்கள் கடலில் பரப்புரையாற்றினார்.

என்னதான் மோடி, அமித்ஷா வந்தாலும் அவங்க ஜீரோ; நாமதான் ஹீரோ - மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட பரப்புரை! DMK4TN
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கடைசி நாள் பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் சென்னையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கழக வேட்பாளர்களை ஆதரித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

துறைமுகம்

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கும் வேட்பாளர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

நம்முடைய வேட்பாளர் சேகர்பாபு அவர்களைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே, இந்தத் தொகுதியில் உங்களிடத்தில் வேட்பாளராக நின்று உங்களால் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினராகப் பொறுப்பேற்று அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். அவர் எப்படி எல்லாம் பணியாற்றியிருக்கிறார்? எப்படி எல்லாம் தொண்டாற்றியிருக்கிறார்? என்பதைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்.

கொரோனா காலத்தில் மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை துயரங்களைக் களைவதற்காக, வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக, திராவிட முன்னேற்ற கழகம் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலமாக, வீட்டில் அடைந்திருந்த மக்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உணவு, மளிகைப் பொருட்கள், மருந்து - மாத்திரைகள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி பல வகைகளில் திராவிட முன்னேற்றக் கழகம் உதவி செய்திருக்கிறது.

அவ்வாறு உதவி செய்து இருப்பவர்கள் பட்டியலில் நம்முடைய மாவட்டச் செயலாளர் சேகர்பாபு அவர்கள்தான் முதலிடத்தில் இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். தன்னுடைய உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், உயிரையே பணயம் வைத்துப் பணியாற்றி இருக்கும் ஒரு சிறந்த செயல் வீரர்தான் நம்முடைய சேகர்பாபு அவர்கள். அவரை மீண்டும் இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் அதே நேரத்தில் நம்மை எப்படியாவது அழித்துவிட, ஒழித்துவிட மத்தியில் மதவெறி பிடித்திருக்கும் பாஜக அரசு எவ்வளவோ திட்டங்களை முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக பிரதமர் மோடி வருகிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார். என்னதான் மோடி வந்தாலும், அமித் ஷா வந்தாலும், அது ஜீரோ தான். நாம் தான் ஹீரோ.

என்னதான் மோடி, அமித்ஷா வந்தாலும் அவங்க ஜீரோ; நாமதான் ஹீரோ - மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட பரப்புரை! DMK4TN

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வந்தார்கள். என்ன ஆனது? ஒரு இடத்தில்கூட அவர்கள் வெற்றி பெற முடியவில்லை என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும். வேறு மாநிலங்களில் உங்கள் பாச்சா பலிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் பலிக்காது. அதைத்தான் இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் பாசிச அதிகாரம் தமிழ்நாட்டில் எடுபடாது. இது ‘எங்க ஏரியா, உள்ள நுழையவே முடியாது’. இன்றைக்கு மத்திய அரசிற்கு அடிபணிந்து, கூனிக்குறுகி, சேவகனாக, அடிமையாக, எடுபிடியாக பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழைத்து, நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் மருத்துவராக வர முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதனால் அரியலூர் பகுதியில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அனிதா என்ற ஒரு மாணவி தற்கொலை செய்து மாண்டு போனார். அதைத் தொடர்ந்து பல மாணவ - மாணவியர்கள் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள்.

அதனால்தான் அனிதாவின் நினைவாக கொளத்தூர் தொகுதியில் அந்த மாணவி பெயரில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ என்ற ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்கி, இதுவரை அந்தப் பயிற்சி மையத்தின் மூலமாக ஆயிரம் பேருக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன் என்பதைப் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.

எப்படி கொளத்தூரில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ ஒன்றை அமைத்து அதன் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோமோ, அதே போல தமிழ்நாடு முழுவதும் இருக்கும் எல்லா மாவட்டங்களிலும் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ தொடங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருக்கிறோம்.

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்தார். அவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்கின் காரணமாக அவர் பதவி விலக வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தது. அவர் சிறைக்குப் போனார். பிறகு வெளியில் வந்தார். அதற்குப் பிறகு அவர் உடல் நலிவுற்று இறந்து போனார்.

அவர் இறந்தது கூட ஒரு மர்ம மரணமாக இருக்கிறது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த விசாரணைக் கமிஷனை முறைப்படுத்தி வேகப்படுத்தி, தவறு செய்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து வெளியில் கொண்டு வருவேன். அதை இந்த ஸ்டாலின் நிச்சயமாகச் செய்வான்.

அந்த அம்மையார் இறந்ததற்குப் பிறகு, இப்போது கடந்த நான்கு வருடங்களாக பழனிசாமி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவர், நான் விருது வாங்கி விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இவர் எப்படி முதலமைச்சரானார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானாரா? மண்புழு போல ஊர்ந்து சென்று, தவ்வித் தவ்விச் சென்று காலில் விழுந்து முதலமைச்சரானார். இதைச் சொன்னால், நான் என்ன பாம்பா? பல்லியா? என்று கேட்பார். பாம்பு, பல்லிக்கு விஷம் கம்மியாகத்தான் இருக்கும். இவர் செய்த துரோகத்திற்குதான் விஷம் அதிகம்.

காலில் விழுந்து பதவி வாங்கி விட்டு அந்த அம்மாவையே தூக்கி எறிந்தவர். ஜெயலலிதாவின் மரணத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறார்கள். இப்படி துரோகம் செய்து கொண்டிருப்பவர் மக்களைப் பற்றி கவலைப்படப் போகிறாரா? நிச்சயம் கவலைப்பட மாட்டார்.

எனவே இந்தத் தமிழகத்தை மீட்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு அடிமையாக இருக்கும் இந்தத் தமிழ்நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். அதனால்தான் நம்முடைய தேர்தல் அறிக்கையில் நாம் பல உறுதி மொழிகளை தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்.

அதில் இந்தத் துறைமுகம் தொகுதிக்கு, ஜோத்பூருக்கு – சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் விடப்படும். இது குறித்து நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேசியிருக்கிறார். ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் இருக்கின்ற யானை கவுனி மேம்பாலம் விரைந்து கட்டி முடித்து நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். வியாபாரத் தலமான குறுகிய சாலைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வணிகத் தலங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், குப்பைகள் அதிகளவில் சேர்கின்றது. குப்பைகளை சுழற்சி முறையில் தினந்தோறும் 3 முறை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகளைச் சொல்லி இருக்கிறோம். அதையெல்லாம் விரைவில் நிறைவேற்றப் போகிறோம்.

அதற்கு, நம்முடைய சேகர்பாபு அவர்கள் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ஒரு மக்கள் தொண்டனாக, மக்கள் சேவகனாக கழகத்திற்கு மட்டுமல்ல, இந்த வட்டாரத்தில் இருக்கும் மக்களுக்கும் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் அவர் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஆற்றலாளர். அவரை நீங்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் சகோதரர் எபினேசர் அவர்களுக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தரவேண்டும்.

இன்றைக்கு ஆளும் கட்சியின் சார்பில் எப்படிப்பட்ட நிலையில் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

கடந்த பத்து வருடங்களாக அ.தி.மு.க.தான் ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? இந்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இந்த சென்னை மாநகர மக்களுக்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்? எப்படிப்பட்ட சாதனைகளைச் செய்திருக்கிறோம்? என்பதைச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டும். அது அவர்களால் முடியவில்லை.

பிரதமராக இருக்கும் மோடியாக இருந்தாலும், முதலமைச்சராக இருக்கும் பழனிசாமியாக இருந்தாலும் நம்மைத் திட்டி விமர்சனம் செய்து பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மோடி அவர்கள் தாராபுரத்திற்கு வந்தார். அதற்குப் பிறகு மதுரைக்கு வந்தார். அவருக்கு, எய்ம்ஸ் கட்டி முடித்து விட்டோம் என்று சொல்லும் தகுதி இல்லை. தமிழ்நாட்டுக்கு இந்தந்தத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லும் யோக்கியதை அவருக்கு இல்லை.

தி.மு.க. – காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசியிருக்கிறார். அவருக்கு தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்கிறார் என்று தெரியவில்லை. நாம் கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை. அவ்வாறு ஆட்சியில் இருப்பது அவர்கள் கூட்டணிக் கட்சி அ.தி.மு.க. அதை மறந்துவிட்டுப் பேசுகிறார். பொள்ளாச்சியில் நடந்த சம்பவம், ஒரு பெண் எஸ்.பி.க்கு நடந்த சம்பவம், இதைப்பற்றி எல்லாம் அவர் பேசாமல் தி.மு.க.வும் - காங்கிரசும் தான் காரணம் என்று பேசினார்.

பிரதமர் மோடி அவர்களே… தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களிடத்தில் சி.பி.ஐ. இருக்கிறது. புலனாய்வுத்துறை இருக்கிறது. அவர்களிடம் தயவு செய்து விசாரியுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் என்னென்ன கொடுமைகள் நடந்திருக்கின்றது என்பதை விசாரியுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் பேசுங்கள். அதுதான் என்னுடைய வேண்டுகோள்.

பழனிசாமியை பொறுத்தவரையில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், அதுவும் அரசாங்கத்தின் வரிப்பணத்தைப் பயன்படுத்திக் கொடுத்தார். இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்திருக்கிறார். நம்மைத் திட்டி விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் என்ன சாதனை செய்திருக்கிறார்கள் என்று விளம்பரம் செய்தால் பரவாயில்லை. நம்மை விமர்சனம் செய்து - அதாவது நில அபகரிப்புக்கு தி.மு.க.தான் காரணம். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் தி.மு.க.தான். என்று விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் கடந்த பத்து வருடங்களாக அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். நாம் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எங்கள் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். அவ்வாறு வழக்கு நிரூபிக்கப்பட்டு நம்மைச் சிறையில் தள்ளியிருக்க வேண்டும். அதைச் செய்தார்களா? இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, அவர்கள் கடந்த பத்து வருடங்களில் இந்த ஆட்சியைப் பயன்படுத்திக் கொள்ளைதான் அடித்திருக்கிறார்கள். லஞ்சம், ஊழல், கரப்ஷன் - கமிஷன் - கலெக்சன் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

தி.மு.க.வின் சார்பில் ஒரு பெரிய ஊழல் பட்டியலைத் தயாரித்து பழனிசாமி முதல், ஓ.பன்னீர்செல்வம் முதல், அங்கிருக்கும் எல்லா அமைச்சர்களும் என்னென்ன ஊழல் செய்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்தோடு புள்ளி விவரங்களோடு சேகரித்து ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம். ஏற்கனவே சில பிரச்சினைகள் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதற்கு இதுவரையில் பழனிசாமி பதில் சொல்லவில்லை. ஆனால் இன்றைக்கு நம்மை விமர்சனம் செய்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.

நாங்கள் குற்றம் செய்யவில்லை, ஊழல் செய்யவில்லை என்பதை ஆதாரத்தோடு அவர்கள் விளம்பரம் செய்து இருந்தால் உள்ளபடியே நாம் பாராட்டி இருக்கலாம். அதை விட்டுவிட்டு, இன்றைக்கு நம்மை விமர்சனம் செய்வதற்காகவே அவர்கள் விளம்பரம் செய்திருக்கிறார்கள். அது மக்களிடத்தில் எடுபடப் போவதில்லை. அதற்குச் சரியான பாடத்தை வரும் 6ஆம் தேதி அவர்களுக்கு வழங்கிட வேண்டும். இதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.”

இவ்வாறு உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories