மு.க.ஸ்டாலின்

“எக்காலத்திலும் பா.ஜ.க-வை புதுச்சேரிக்குள் விட்டுவிடாதீர்கள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை!

"உங்களை ஐந்து வருடங்களாக தொல்லைப்படுத்திய பா.ஜ.க-வை நீங்கள் மறப்பீர்களா? உங்களை துன்பப்படுத்திய பாஜகவைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருப்பீர்களா?"

“எக்காலத்திலும் பா.ஜ.க-வை புதுச்சேரிக்குள் விட்டுவிடாதீர்கள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“புதுச்சேரி வளங்களைச் சுரண்டப் பார்க்கும் பா.ஜ.க - அ.தி.மு.க - என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி 'வேஸ்ட்' கூட்டணி; தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 'பெஸ்ட்' கூட்டணி" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

இன்று (03-04-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, புதுச்சேரியில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன். கடந்த 20 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் நடத்தி விட்டு வந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் சுற்றுப் பயணத்தை செய்த ஸ்டாலின் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். அந்த 234 தொகுதிகளுக்கும் சேர்த்து 55 கூட்டங்களில் நான் பேசி முடித்திருக்கிறேன். இன்று 56-ஆவது கூட்டத்தில் உங்களை எல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன்.

சற்று ஏறக்குறைய 12,000 கிலோ மீட்டர் வரை என்னுடைய சுற்றுப்பயணம் அமைந்து, அதைத் தொடர்ந்து இந்த புதுவை மாநிலத்திற்கு வந்திருக்கிறேன். இதை முடித்து விட்டு அவசர அவசரமாக நான் சென்னைக்கு சென்று, அங்கு இன்று இரவு சில கூட்டங்கள் இருக்கிறது. நாளை முழுவதும் சென்னை மாநகரத்தில் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன்.

இன்று உங்களை எல்லாம் நான் சந்திக்க வந்திருக்கிறேன். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வருகின்ற ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் - வில்லியனூர் தொகுதியில் இரா.சிவா அவர்களையும், ராஜ்பவன் தொகுதியில் எஸ்.பி.சிவக்குமார் அவர்களையும், காரைக்கால் தெற்கு தொகுதியில் ஏ.எம்.ஹெச்.நாஜிம் அவர்களையும், உப்பளம் தொகுதியில் வி.அனிபால் கென்னடி அவர்களையும், மங்கலம் தொகுதியில் சண்.குமரவேல் அவர்களையும், மண்ணாடிப்பட்டு தொகுதியில் ஏ.கிருஷ்ணன் என்கிற ஏ.கே.குமார் அவர்களையும், காலாப்பட்டு தொகுதியில் எஸ்.முத்துவேல் அவர்களையும், உருளையன்பேட்டை தொகுதியில் எஸ்.கோபால் அவர்களையும், நெல்லித்தோப்பு தொகுதியில் வி.கார்த்திகேயன் அவர்களையும், முதலியார்பேட்டை தொகுதியில் எல்.சம்பத் அவர்களையும், பாகூர் தொகுதியில் ஆர்.செந்தில்குமார் அவர்களையும், திருபுவனை தொகுதியில் சு.முகிலன் அவர்களையும், நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் நாகதியாகராஜன் அவர்களையும் நீங்கள் எல்லாம் வெற்றி பெற வைக்க உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் - காரைக்கால் வடக்கு தொகுதியில் ஏ.வி.சுப்பிரமணியன் அவர்களையும், ஏம்பலம் தொகுதியில் மு.கந்தசாமி அவர்களையும், திருநள்ளாறு தொகுதியில் ஆர்.கமலக்கண்ணன் அவர்களையும், காமராஜ் நகர் தொகுதியில் எம்.ஓ.ஹெச்.எஃப்.ஷாஜகான் அவர்களையும், மணவெளி தொகுதியில் ஆர்.கே.ஆர்.அனந்தராமன் அவர்களையும், அரியாங்குப்பம் தொகுதியில் த.ஜெயமூர்த்தி அவர்களையும், நெட்டப்பாக்கம் தொகுதியில் வி.விஜயவேணி அவர்களையும், லாஸ்பேட்டை தொகுதியில் எம்.வைத்தியநாதன் அவர்களையும், ஊசுடு தொகுதியில் ஆர்.கார்த்திகேயன் அவர்களையும், கதிர்காமம் தொகுதியில் ஆர்.செல்வநாதன் அவர்களையும், இந்திரா நகர் தொகுதியில் எம்.கண்ணன் அவர்களையும், முத்தியால்பேட்டை தொகுதியில் எஸ்.செந்தில்குமார் அவர்களையும், நெடுங்காடு தொகுதியில் ஏ.மாரிமுத்து அவர்களையும், மாகே தொகுதியில் ரமேஷ் பிரேம்பத் அவர்களையும் நீங்களெல்லாம் கை சின்னத்தில் ஆதரித்து சிறப்பான வெற்றியை தேடித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில் கே.சேது என்கிற சேது செல்வம் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், அதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உழவர்கரை தொகுதியில் நிற்கும் அங்காளன் என்கிற தேவபொழிலன் அவர்களுக்கு பானை சின்னத்திலும் ஆதரித்து நீங்கள் சிறப்பான வெற்றியை தேடித் தரவேண்டும்.

பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்ட புதுச்சேரிக்கு உங்களை எல்லாம் சந்திக்க இந்த ஸ்டாலின் வந்திருக்கிறான். புரட்சிக்கவியின் மண்ணுக்கு நான் வந்திருக்கிறேன். தந்தை பெரியாருக்கும் கலைஞருக்கும் சந்திப்பு ஏற்படுத்தியதே இந்த புதுச்சேரி தான். அந்த புதுச்சேரிக்கு நான் வந்திருக்கிறேன்.

அவ்வாறு வந்திருக்கும் நான் ஒன்றை உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறப் போகிறது.

அதேபோல இந்த புதுச்சேரியிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நீங்கள் வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று உங்களை எல்லாம் நான் மிகுந்த பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஐந்து வருடங்களாக மத்திய பா.ஜ.க. அரசு எப்படி எல்லாம் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அரசை தொல்லைப்படுத்தியது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். ஒரு ஆளுநரை வைத்துக்கொண்டு எந்த அளவிற்கு இந்த மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த நம்முடைய கூட்டணி ஆட்சியை எப்படி எல்லாம் துன்பப்படுத்தினார்கள், தொல்லைப்படுத்தினார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

ஆனால் என்னை பொறுத்தவரையில் அது தனிப்பட்ட எங்களுக்கு கொடுத்த தொல்லையாக நான் கருதவில்லை. ஒட்டுமொத்த புதுவை மக்களுக்கே பெரிய தொல்லையை, பாஜக அரசு மாநில ஆளுநரை வைத்துக் கொடுத்திருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

அப்படிப்பட்ட தொல்லை கொடுத்த பாஜக-வை இங்கே உள்ளே விடலாமா? அதை விரட்ட வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

இப்போது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையில் இருக்கும் அணிதான் வெற்றி பெறப் போகிறது என்று கருத்துக் கணிப்புகளில் ஊடகங்களில், தொலைக்காட்சிகளில் தொடர்ந்து செய்தி வந்து கொண்டு இருக்கிறது. அதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

அதனால் ஆத்திரத்தின் உச்சாணிக்கு சென்று மத்தியில் இருக்கும் பாஜக அரசு இதை எப்படித் தடுப்பது? பணியாற்றிக் கொண்டிருக்கும் நம்முடைய கட்சித் தோழர்களை - கூட்டணித் தோழர்களை எப்படி சோர்வடைய செய்வது? அவர்கள் பணியை எவ்வாறு முடக்கி வைப்பது? என்றெல்லாம் திட்டம் போட்டு சோதனை என்று ஒன்றை செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.

நேற்றைக்கு என்னுடைய மகள் வீட்டில் சோதனை நடந்தது. அந்த சோதனை பற்றியெல்லாம் கவலைப்படுவது இந்த ஸ்டாலின் அல்ல. ஒரு வாரத்திற்கு முன்பு திருவண்ணாமலையில் மாவட்டச் செயலாளராக இருக்கும் சட்டமன்ற வேட்பாளராக நிற்கும் வேலு அவர்களுடைய பிரச்சாரத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கேயும் சோதனைக்கு வந்தார்கள். இரண்டு நாள் முழுவதும் சோதனை செய்தார்கள். ஒன்றும் கைப்பற்ற முடியவில்லை. அதேபோல கரூரில் நிற்கும் நம்முடைய கழக வேட்பாளர் செந்தில் பாலாஜி அவருடைய வீட்டில், அலுவலகத்தில், அவருடைய நண்பர்கள் வீட்டில் சோதனை செய்தார்கள்.

எனவே அ.தி.மு.க. வேண்டுமானால் பயப்படலாம். உங்கள் வருமான வரிச் சோதனையைப் பார்த்து அவர்கள் உங்கள் காலில் விழலாம். ஆனால் தி.மு.க. பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு எல்லாம் நாம் அஞ்சிட மாட்டோம். எனவே இப்படி எல்லாம் மிரட்டி பார்க்கிறார்கள்.

இந்த மாநிலத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பாஜக என்ன செய்தது என்று உங்களுக்கு தெரியும். ஒரு ஆளுநரை நியமித்தார்கள், கிரண்பேடி என்கிற ஒரு ஆளுநர். தங்களுக்கு ஏவலாக அவரைப் பயன்படுத்தி முதலமைச்சராக இருந்த நம்முடைய மதிப்பிற்குரிய நாராயணசாமி அவர்களுக்கு சொல்ல முடியாத தொல்லைகளை, துன்பங்களை எல்லாம் கொடுத்தார்கள்.

“எக்காலத்திலும் பா.ஜ.க-வை புதுச்சேரிக்குள் விட்டுவிடாதீர்கள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை!

மக்கள் நலத்திட்டங்களை செய்யவிடவில்லை. ரேஷன் கடைகளில் பொருட்களை ஒழுங்காக விநியோகிப்பதற்கும் தடை போட்டார்கள். ஏன் அரசு அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விட்டார்களா? இல்லை.

இப்போது கிரண் பேடியை நீக்கிவிட்டார்கள். அதாவது ஏன் கிரண்பேடியை நீக்கினார்கள் என்றால், மக்களுக்கு அந்த ஆளுநர் மீது அந்த அளவிற்கு வெறுப்பு. இந்த தேர்தல் நேரத்தில் நாம் நீக்கி விட்டால் அதை மக்கள் மறந்து விடுவார்கள் என்று அவரை நீக்கியிருக்கிறார்கள்.

உங்களை ஐந்து வருடங்களாக தொல்லைப்படுத்திய பாஜக-வை நீங்கள் மறப்பீர்களா? உங்களை துன்பப்படுத்திய பாஜகவைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருப்பீர்களா? அவர்களை உள்ளே நுழைய விடுவீர்களா? நான் அதைத்தான் உங்களிடத்தில் கேட்க வந்திருக்கிறேன்.

கடந்த 2 மாதமாக பாஜக புதுச்சேரியில் என்ன செய்கிறது என்றால், அமைச்சர்களை மிரட்டினார்கள், சபாநாயகரை மிரட்டினார்கள், பிறகு கட்சிகளை மிரட்டினார்கள். புதுச்சேரியில் பாஜக தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் – அ.தி.மு.க. கூட்டணி அமைத்து உங்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள். அந்த கூட்டணி ஒற்றுமையான கூட்டணியா? கொள்கை கூட்டணியா? என்பதை நீங்கள் தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். மூன்று கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான். அதாவது நம்ப வைத்து ஏமாற்றுவது.

பாஜகவை பொறுத்தவரையில் - அதைத் தலைமை ஏற்று நடத்தும் பிரதமராக இருக்கும் மோடியைப் பொறுத்தவரையில் - அவருடைய பணி நாடு முழுவதும் இருக்கும் மாநிலங்களில் எங்கும் நிம்மதியாக ஒரு ஆட்சியை நடத்தவிடக் கூடாது. பாஜக-வைத் தவிர யாரும் எந்த மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடாது.

அதற்காக 2014-இலிருந்து பார்த்தீர்கள் என்றால் எப்போது மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததோ, எப்போது மோடி பிரதமராக வந்து உட்கார்ந்தாரோ, அன்றிலிருந்து நீங்கள் பார்க்கலாம். ஒரு பெரிய பட்டியலே என்னிடத்தில் இருக்கிறது. எந்தெந்த மாநிலங்களில் மெஜாரிட்டியோடு இருக்கும் ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது.

2016-ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் கவிழ்த்தார்கள். 2017-ஆம் ஆண்டு கோவா மாநிலத்தில் ஆட்சியை கவிழ்த்தார்கள். 2017-ஆம் ஆண்டு மணிப்பூர் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். 2018-ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தில் நடைபெற்ற ஆட்சியை கவிழ்த்தார்கள். 2018-இல் ஜம்மு-காஷ்மீரில் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்தார்கள். 2019-இல் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஆட்சியைக் கலைத்தார்கள். அதே 2019-இல் சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற ஆட்சியை கலைத்தார்கள். 2020-இல் மத்தியப் பிரதேச ஆட்சியைக் கவிழ்த்தார்கள். அதற்குப் பிறகு 2021-இல் கடைசியாக புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற ஆட்சியைக் கவிழ்த்தார்கள்.

இப்போது நடக்கின்ற தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கவிழ்த்துக் கொண்டிருக்கும் பாஜக ஆட்சியை மத்தியிலிருந்து கலைக்கும் அந்தப் பவர் நமக்கு வரவேண்டும். அதுதான் நான் உங்களிடத்தில் வைக்கும் கோரிக்கை.

இவ்வாறு சர்வாதிகாரமாக, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளை கவிழ்ப்பதுதான் மோடி தலைமையில் இருக்கும் பாஜக ஆட்சியின் கொள்கையாக இருந்து வருகிறது.

இவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் என்ன செய்யவேண்டும், மக்களுக்கு என்ன செய்யலாம்? என்று நினைக்கவேண்டும்.

ஆனால் தன்னுடைய மிருக பலத்தால் பாசிச முறையால் கட்சிகளையும், தனி மனிதர்களையும் மிரட்டிக் கொண்டிருக்கும் பணியைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த புதுச்சேரியை எடுத்துக்கொண்டால் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒட்டு மொத்தமாக வாங்கிய வாக்குகள் வெறும் 19,000. ஆனால், ரங்கசாமியையும் – அ.தி.மு.க.வையும் மிரட்டி 9 தொகுதிகளில் பாஜக இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. அதற்கு ரங்கசாமியும் தலையாட்டி இருக்கிறார். இங்கிருக்கும் அ.தி.மு.க.வும் தலையாட்டி இருக்கிறது.

அதே போல இங்கிருக்கும் ரங்கசாமியும், இங்கு இருக்கும் அ.தி.மு.க.வும் எப்படி தலையாட்டுகிறதோ அதே போல தமிழ்நாட்டிலும் பழனிசாமி தலைமையில் இருக்கும் ஆட்சி தலையாட்டிக் கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அங்கே துரோக கூட்டணி என்று சொன்னால் இங்கு வேஸ்ட் கூட்டணி. அதனால்தான் புதுச்சேரியை வளப்படுத்த இப்போது நாம் பெஸ்ட் கூட்டணியாக சேர்ந்திருக்கிறோம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி.

எனவே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நீங்கள் எல்லாம் பெரும் வெற்றியைத் தர வாக்களிக்க வேண்டும் என்று உங்களை மிகுந்த பணிவோடு கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

பாஜக கூட்டணியில் இருக்கும் ரங்கசாமி வெற்றி பெற்றால், நான் தான் முதலமைச்சர் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இரண்டு முறை பிரதமர் அவர்கள், இந்த புதுவைக்கு வந்து விட்டு சென்றிருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்திற்காகவும், அரசியல் நிகழ்ச்சிக்காகவும் வந்தார். அவ்வாறு வந்த பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் வெற்றி பெற்றால் ரங்கசாமிதான் முதலமைச்சர் என்று சொல்லி விட்டுச் சென்றாரா? இல்லை.

அதனால் அப்படி ஒரு குழப்பம் இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. எனவே தேர்தல் முடிந்தால் என்ன சொல்வார் என்பது ரங்கசாமிக்கும் தெரியும். அ.தி.மு.க.வுக்கும் தெரியும். அவர்கள் கட்சிக்காரர்களுக்கும் தெரியும்.

“எக்காலத்திலும் பா.ஜ.க-வை புதுச்சேரிக்குள் விட்டுவிடாதீர்கள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடி இங்கு வந்து விட்டுச் சென்றிருக்கிறார். அவர் தமிழ்நாட்டிற்கு வந்து தாராபுரத்திலும், மதுரையிலும் பேசிய பேச்சுக்கள் உங்களுக்கு தெரியும்.

அவர் தாராபுரத்தில், தான் ஒரு பிரதமர் என்பதை மறந்து, சாதாரண ஆட்கள் பேச முடியாத சொற்களை எல்லாம் அங்கு பேசி விட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த பத்து வருடங்களாக அ.தி.மு.க.வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டிற்கு வந்து, திமுக ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசுகிறார்.

நான் அதற்கு உடனே மதிப்பிற்குரிய மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, தாராபுரத்திற்கு பக்கத்தில் தான் இருக்கிறது பொள்ளாச்சி. அங்கு நடந்த சம்பவம் உங்களுக்கு தெரியாதா? அதை மறந்துவிட்டு பேசுகிறீர்களா?

அதுமட்டுமல்ல சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் ஒரு பெண் எஸ்.பி.க்கு, ஸ்பெஷல் டி.ஜி.பி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. இவ்வாறு ஒரு அசிங்கம் நடந்து இருக்கிறது. இது பிரதமர் மோடிக்கு தெரியாதா?

பிரதமர் அவர்களே, புதுவை மாநிலத்தில் நீங்கள் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றிருக்கிறீர்கள். அப்போது இந்த புதுவை மாநிலத்தை பற்றி ஏதாவது பேசினீர்களா? புதுச்சேரி மாநில அந்தஸ்தை பெற ஏதாவது கருத்து சொன்னீர்களா? புதுச்சேரி மாநிலத்தின் கடன் 8,600 கோடி ரூபாய். அதை தள்ளுபடி செய்யப் போகிறோம் என்று சொன்னீர்களா?

ஆனால் இதையெல்லாம் சொல்லுகிற ரங்கசாமி, மோடியிடம் இந்த கோரிக்கைகளை மேடையில் ஏன் சொல்லவில்லை?

மத்திய ஆளுங்கட்சி மாநிலத்தில் இருந்தால்தான் திட்டங்களை கொண்டு வர முடியும். அதை காப்பாற்ற முடியும் என்கிறார்கள். திட்டங்கள் கிடைப்பதற்கு மக்களைப் பற்றி சிந்திக்கின்ற அரசு இருந்தாலே போதும்.

உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி இன்றைக்கு அ.தி.மு.க. பெயரில் நடந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட தமிழ்நாட்டில் கொண்டுவர முடியவில்லையே? இந்த நிலையில் மத்திய அரசோடு ஒற்றுமையாக இருந்தால் நிச்சயமாக எல்லா திட்டங்களையும் கொண்டு வர முடியும் என்று சொல்கிறாரே, இன்றைக்கு தமிழ்நாட்டில் நீங்கள் இரண்டு பேரும், அதாவது மாநில அரசும் – மத்திய அரசும் ஒற்றுமையாக தான் இருக்கிறீர்கள். ஏதாவது செய்து கிழித்து இருக்கிறீர்களா? இல்லையே.

புதுச்சேரியில் இன்றைக்கும் பாஜக எதற்காக குறிவைத்து கொண்டிருக்கிறது என்றால் ஒரே ஒரு காரணம்தான். புதுச்சேரியில் இயற்கை வளம் நிறைய இருக்கிறது. சாகர்மாலா என்ற திட்டத்தின் மூலம் அதனை அபகரிக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அவர்கள் அதை கடுமையாக எதிர்த்த காரணத்தினால் அது முடியவில்லை.

அதனால் எப்படியாவது பாஜக இந்த மாநிலத்திற்குள் நுழைந்து, அதை அபகரிப்பதற்காக திட்டங்களை எல்லாம் போட்டுக்கொண்டிருக்கிறது. அதை நீங்கள் தயவு கூர்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல, தமிழகத்தில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் மட்டுமல்ல அனைத்தையும் தாண்டி கலைஞருடைய மகனாக உங்களை நான் சந்திக்க வந்திருக்கிறேன்.

தமிழகத்தில் உறுதியாக ஒரு பொற்கால ஆட்சி மலரப்போகிறது. தமிழகத்தில் செயல்படுத்தும் திட்டங்களை நிச்சயமாக புதுச்சேரியிலும் செயல்படுத்துவோம். தலைவர் கலைஞருடைய உயிரை காப்பாற்றிய ஊர் இந்த பாண்டிச்சேரி - இந்த புதுச்சேரி. அதை நான் மறந்துவிடவில்லை.

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த இந்த மண் மீது ஆணையாகச் சொல்கிறேன், தி.மு.க. எப்படி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் என்னென்ன செய்யப் போகிறோம் என்று சொன்னோமோ, அவற்றை இங்கு உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

அதேபோல இந்த மாநிலத்தில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு நீங்கள் வெற்றியை தேடி தருகிற போது, குடும்பத் தலைவியருக்கு மாதம் மாதம் 1,000 ரூபாய் நிச்சயமாக வழங்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, தனி கல்வி வாரியம் அமைக்க நிச்சயமாக எங்கள் கூட்டணி பாடுபடும். இது உறுதி. காரைக்காலுக்கு காவிரி நீர் உரிமையையும், புதுச்சேரிக்கு உள்ள உரிய பங்கையும் நிச்சயமாக பெற்றுத்தருவோம். காரைக்கால் பகுதியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, சிறப்பு நிதியினை நிச்சயமாக ஒதுக்குவோம். தமிழகம் - புதுச்சேரி இணைப்புச் சாலைகள், பாலங்கள் மேம்பாட்டுப் பணிகளுக்கு தமிழகம் தாயுள்ளத்தோடு நிச்சயமாக உதவும். புதுச்சேரி மாநிலத்தின் அத்தனை நலன்களுக்காகவும் தமிழகம் பாடுபடும். புதுச்சேரியில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும். தமிழகத்தில் கழக ஆட்சி மலரும்போது, புதுச்சேரியிலும் கழக கூட்டணி ஆட்சி மலரும்! புதுச்சேரி மக்களின் வாழ்வு வளம்பெறும்!

எனவே நீங்கள் மறந்துவிடாமல் உதயசூரியன் சின்னத்திலும், கை சின்னத்திலும், கதிர் அரிவாள் சின்னத்திலும், பானை சின்னத்திலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று அன்போடு கேட்டு உங்கள் அன்பான உற்சாகமான இந்த இனியதொரு வரவேற்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories