மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் இளைய சக்தி செயல்படுவதற்கான காலம் நெருங்கிவிட்டது - வேலைவாய்ப்பு முகாமில் மு.க.ஸ்டாலின் பேச்சு

“தமிழகத்தின் இளைய சக்தி இன்னும் தீவிரமாகச் செயல்படுவதற்கான ‘கலைஞர் அரசு’ அமைவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

தமிழகத்தின் இளைய சக்தி செயல்படுவதற்கான காலம் நெருங்கிவிட்டது - வேலைவாய்ப்பு முகாமில் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று (22-10-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் ‘வெங்கடேஷ்குமார் மெமோரியல் டிரஸ்ட்’ சார்பில் நடைபெற்ற மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியைக் காணொலி வாயிலாகத் தலைமையேற்று துவக்கி வைத்து உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“கல்வியை ஒரு தொழிலாக இல்லாமல், மக்கள் சேவையாற்றும் தொண்டாக நினைத்துச் செயல்படக் கூடிய உள்ளம் கொண்டவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணியின் துணைத் தலைவர் அய்யாத்துரைப் பாண்டியன். கல்விப்பணியையும் அரசியல் பணியையும் இரு கண்களாகக் கருதிச் செயல்பட்டு வரும் அவரது முயற்சியால் வெங்கடேஷ்குமார் மெமோரியல் டிரஸ்ட் தொடங்கப்பட்டு, அதன் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அய்யாத்துரைப் பாண்டியன் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாட்டில் இப்போது எது பஞ்சமாக இருக்கிறது என்றால் வேலைக்குத்தான் பஞ்சமாக இருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோற்று விட்டார்கள். ஏற்கனவே இருந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதிலும் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் காலத்தின் தேவையாக இருக்கின்றன. இந்த முகாமுக்கு வருகை தந்துள்ள, பங்கேற்றுள்ள 50 நிறுவனங்களுக்கும், அதன் நிர்வாகிகளுக்கும், அதிகாரிகளுக்கும், என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனென்றால், இன்றைய தினம், வேலை இருக்கிறது, வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்று சொல்வதே அரிய வார்த்தையாக ஆகிவிட்ட காலம். இந்தக் காலத்தில் வேலை வாய்ப்பு முகாமில் நீங்கள் பங்கெடுக்க வந்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியது. பல்வேறு கனவுகளோடு இளைஞர்கள் இங்கு வந்துள்ளீர்கள். உங்களது படிப்பு, உங்களது விருப்பம், உங்களது கனவுகளுக்கு ஏற்ற வேலைகளைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து வேலைகளைத் தேர்வு செய்யுங்கள்.

3000 வேலைவாய்ப்புகள் என்று அறிவித்துள்ளார்கள். இது உங்களது வாழ்க்கையின் மிக நல்ல தொடக்கம். முன்னேற்றத்துக்கு முதல் படி. இதில் முதல் தலைமுறை பட்டதாரிகள் இருப்பீர்கள். உங்களது ஊதியத்தை நம்பி உங்கள் குடும்பம் காத்திருக்கலாம். ஏராளமான கடமைகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக இந்த வேலைவாய்ப்பு முகாம் என்பது அமைந்துள்ளது.

இன்னும் சில மாதங்கள் கழித்து, அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ எங்காவது ஒரு ஊரில் என்னைச் சந்தித்து, “நீங்கள் தென்காசி வேலைவாய்ப்பு முகாமைத் தொடக்கி வைத்தீர்கள் அல்லவா, அதில் வேலை பெற்றவன்; நான். மிக நல்ல நிலைமையில் இருக்கிறேன்” என்று நீங்கள் என்னைச் சந்தித்துச் சொன்னால் அதை விட மகிழ்ச்சிக்குரிய செய்தி வேறு இருக்க முடியாது.

அனைவரும் படிக்க வேண்டும்; அனைவரும் வேலைக்குப் போக வேண்டும்; கல்வி, வேலைவாய்ப்பைப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.

1920-ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி தமிழகத்தில் தொடங்கியது. அதனுடைய தொடர்ச்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை - என்பதை தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக தலைவர் கலைஞர் அவர்கள் வைத்துக் கொண்டார்கள்.

தமிழகத்தின் இளைய சக்தி செயல்படுவதற்கான காலம் நெருங்கிவிட்டது - வேலைவாய்ப்பு முகாமில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்தது பெருந்தலைவர் காமராசர் என்றால், ஏராளமான கல்லூரிகள் திறந்து வைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். ஐ.டி.க்கு எனத் தலைமைச் செயலகத்தில் தனித்துறையை 1998-இல் உருவாக்கினார். முதலமைச்சர் தலைமையில் ஐ.டி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.

இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐ.டி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது. அரசுத்துறையை கம்ப்யூட்டர் மயமாக்க முனைந்தார். பள்ளிக் கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தார். தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார். 340 கோடியில் டைடல் பார்க்கை 2000-ஆம் ஆண்டில் கட்டினார்.

கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் காரிடார் அமைத்தார். சிறுசேரியில் வன்பொருள் - மென்பொருள் பூங்கா அமைத்தார். தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐ.டி ஹைவே ஆக்கினார். தமிழ்நெட் 1999 மாநாடு நடத்தினார். யுனிக்கோட் கன்சோர்டியத்தில் இணைந்த முதல் இந்திய மாநிலம் தமிழகம். உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கினார்.

அரசு மேனிலைப்பள்ளிகளில் கணினி மையங்களை உருவாக்கினார். கல்லூரிகளிலும் கணினிப் பயிற்சி தொடங்கினார். தமிழ் இணைய ஆய்வு மையம் அமைத்தார். டானிடெக் அமைத்தார். 1996-க்கு முன்னால் 34 ஐ.டி நிறுவனங்கள்தான் தமிழ்நாட்டில் இருந்தன. 1996 - 2000 காலக்கட்டத்தில் 632 நிறுவனங்கள் வந்தன.

1994-ஆம் ஆண்டு 12 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 2000-ஆம் ஆண்டில் 1900 கோடி ஆனது. ஒரே இடத்தில் அனைத்துத் தொழில்களும் நடக்கும் சிப்காட் உருவாக்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள். ராணிப்பேட்டை, ஓசூர், திருப்பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, கும்மிடிப்பூண்டியில் தொழில்வளாகங்கள் அமைத்தார்.

ஹூண்டாய் வந்தது. மிட்சுபிசி வந்தது. ஃபோர்டு வந்தது. "சென்னை இந்தியாவின் டெட்ராய்ட்" என்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் எழுதியது. இவ்வளவையும் செய்தவர் முதலமைச்சர் கலைஞர். இத்தகைய கலைஞர் அரசு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இருந்தால் தமிழகத்தின் இளைய சக்தி இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு இருக்கும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

இத்தகைய சூழலில் அய்யாத்துரைப் பாண்டியன் அவர்களது முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலமாக ஏராளமான இளைஞர்களின் கனவு நிறைவேறட்டும் என்று வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!” இவ்வாறு தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories