மு.க.ஸ்டாலின்

“மாவீரர் பூலித்தேவர் பிறந்த நாள்: தன்மானச் சுடரொளியை உயர்த்திப் பிடித்திடுவோம்” - மு.க.ஸ்டாலின் அறைகூவல்

“மாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும் - துணிவையும் - தியாகத்தையும் எந்நாளும் போற்றிடுவோம்! இந்தியத் திருநாட்டைக் காத்திடுவோம்! தமிழகத்தின் தன்மானச் சுடரொளியை உயர்த்திப் பிடித்திடுவோம்!”

“மாவீரர் பூலித்தேவர்  பிறந்த நாள்: தன்மானச் சுடரொளியை உயர்த்திப் பிடித்திடுவோம்” - மு.க.ஸ்டாலின் அறைகூவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விடுதலைப் போராட்ட வீரர் மாவீரர் பூலித்தேவரின் 305வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

“ஏகாதிபத்திய வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக, வீரம் செறிந்த விடுதலைக் குரலை முதன்முதலில் எதிரொலித்த மண் - பாரம்பரியமாக தீரம் விளைந்த நம் செந்தமிழ் மண்தான்!

இந்திய வரலாறு, பல்வேறு முரண்பட்ட காரணங்களினாலே, வடக்கிலிருந்து எழுதப்பட்டாலும், தென்னகத்தின் விடுதலை வேட்கையையும் சுயாட்சிச் சரித்திரத்தையும் யாராலும் மறைத்திட முடியாது என்பதற்கு, மலையொத்த சான்றாக இருப்பவர் மாவீரர் பூலித்தேவர்.

நெல்லை மாவட்டம், நெற்கட்டும்செவலைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பண்டையப் பாளையக்காரரான மாவீரர் பூலித்தேவர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கோ, அவர்களின் கைப்பாவைகளாகக் காலம் தள்ளியவர்களுக்கோ கடுகளவும் அஞ்சிடாமல் சுயாட்சி புரிந்தவர்.

பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முனைந்த வெள்ளைக்காரர்களை, வீரத்துடன் நேருக்கு நேர் எதிர்த்துக் களம் கண்டவர். அதற்காக, மற்ற பாளையக்காரர்களையும் இணைக்கும் முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டவர்.

“மாவீரர் பூலித்தேவர்  பிறந்த நாள்: தன்மானச் சுடரொளியை உயர்த்திப் பிடித்திடுவோம்” - மு.க.ஸ்டாலின் அறைகூவல்

ஒரு சிறிய நிலப்பகுதியை நிர்வகித்து, அதன் தனித்தன்மையைக் காப்பதற்காக, 12 ஆண்டுகள் ஆங்கிலேயர்களையும் அவர்களின் கூலிப்படையினரையும் எதிர்கொண்டு விரட்டிய சுயமரியாதை ஆட்சியாளர், பொன்னினும் மேன்மை மிக்க பூலித்தேவன். 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மாவீரர் பூலித்தேவர் எழுப்பிய முதல் விடுதலைக் குரல்தான், 20-ம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டமெங்கும் பிரவாகமாகப் பெருக்கெடுத்து, நம் தேசத்தின் சுதந்திரத்திற்கு நல்ல அடித்தளமிட்டது எனின், அது மிகையல்ல.

மாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும், அவரது துணிவையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றிடுவோம்! அந்த உணர்வினை நாமும் நிரம்பப் பெற்று இந்தியத் திருநாட்டைக் காத்திடுவோம்! தமிழகத்தின் தன்மானச் சுடரொளியை உயர்த்திப் பிடித்திடுவோம்!

banner

Related Stories

Related Stories