மு.க.ஸ்டாலின்

“தமிழ் மொழியின் தரத்தை குறைக்கும் #NEP2020-ஐ அமல்படுத்தாதீர்” - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

அனைவருக்கும் உள்ளடக்கிய தரமான கல்வியை தருவதற்கு தி.மு.க எப்போதும் துணை நிற்கும் என தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

M.K.Stalin
M.K.Stalin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதை நிறுத்தச் சொல்லி பிரதமர் மோடி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

“தாங்கள் நல்ல உடல்நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பீர்கள் என நம்புகிறேன். மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பல கவலைகளை உங்களுக்குத் தெரிவிப்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நாடே கோவிட்-19 தொற்று நோய்ப் பரவலின் பாதிப்புகளால் தத்தளித்துக் கொண்டும், பொருளாதாரம் தேக்கமடைந்தும் உள்ள இந்தத் தருணத்தில், நாடாளுமன்றத்தில் ஆலோசனையோ, விரிவான விவாதமோ செய்யப்படாமல், தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்க ஒருதலைப் பட்சமாக முடிவெடுக்கப்பட்டிருப்பது, நமது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டின் மதிப்பைக் குறைப்பதாக உள்ளது.

கல்வி என்பது மாநிலங்களின் தலையீடு மற்றும் பரவலாக்கத்தின் வழியாக மட்டுமே சிறப்பாக செயல்படுத்தக்கூடிய முக்கிய மற்றும் பொருள் பொதிந்த துறையாகும். நமது தேசத்தை உருவாக்கிய தலைவர்கள் கூட, கல்வியில் மாநில அரசுகளுக்கான பங்கை அங்கீகரித்து, அரசமைப்புச் சட்டத்தின் படி, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்த்திருந்தனர்.

“தமிழ் மொழியின் தரத்தை குறைக்கும் #NEP2020-ஐ அமல்படுத்தாதீர்” - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

1976ஆம் ஆண்டு அவசர நிலையின் போது, கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட நடவடிக்கை, கல்வி தொடர்பாக சட்டமியற்றும் மாநில அரசுகளின் பொறுப்பை, மத்திய அரசும் பகிர்ந்து கொள்ள வழிவகுத்தது. இதற்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை போராடிய எங்கள் அன்புக்குரிய தலைவர் கலைஞர் அவர்கள், நீண்ட காலமாக நாங்கள் மதித்துப் போற்றிவரும் சமூகநீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் கொண்டு வந்து சேர்ப்பது அவசியம் என உறுதியாக நம்பினார்.

தற்போதைய கல்விக் கொள்கை குறித்த மத்திய அரசின் ஒருதலைப் பட்சமான முடிவானது, இந்திய ஒன்றியத்தின் அடிப்படையான கூட்டாட்சித் தத்துவத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு 2019ஆம் ஆண்டு பொதுமக்களின் கருத்தறிய முன்வைக்கப்பட்ட போது, அதன் பல அம்சங்களை தி.மு.கழகம் எதிர்த்ததுடன், அதற்கான பரிந்துரைகளையும் மத்திய அரசிடம் வழங்கியது. ஆனால், தேசிய கல்விக் கொள்கை 2020, 2019 ஆண்டு வரைவில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதாக இல்லை; எங்களது எந்தப் பரிந்துரைகளும் அதில் சேர்க்கப்படவில்லை.

இந்தத் தேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களுக்கான அதிகாரங்களின் மதிப்பைக் குறைத்து, நாட்டில் சமூகநீதி, சமத்துவத்திற்கு கூடுதல் தடைகளை உருவாக்குவதன் மூலம், கல்வியைப் பெறுதல், உள்நுழையும் வாய்ப்பு மற்றும் தரம் ஆகிய இதுவரை அடைந்த முன்னேற்றங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அனைவரையும் ஒரே அளவுகோலுக்குள் பொருத்தப் பார்க்கும் இந்தக் கல்விக் கொள்கை, நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், அனைத்து பின்னணிகளில் இருந்தும் வரும் மாணவர்கள் கல்வியை அணுகுவதில் தேவையற்ற கூடுதல் தடைகளை ஏற்படுத்துகிறது.

மும்மொழிக் கொள்கை: மும்மொழிக் கொள்கை குழந்தைகள் மீது கடுமையான சுமையை ஏற்றுவது மட்டுமின்றி, வெவ்வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாத ஓர் அடையாளத்தையும் திணிக்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவின் எதிர்காலத் தலைமுறையினர் தமிழை ஒரு மொழியாகவே ஏற்காமல் மறுதலிக்கச் செய்யும் இந்த முடிவையும், உயர்கல்வி உட்பட அனைத்து மட்டங்களிலும் சமஸ்கிருதத்தைக் கட்டாய விருப்பப் பாடமாகக் கொண்ட மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த நடவடிக்கை தமிழ் மொழியின் பெருமை மற்றும் மாண்பைக் குறைப்பதுடன், தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும் உள்ளது. தமிழ் கற்பதைக் கட்டாயமாகக் கொண்ட இருமொழிக் கொள்கை தமிழ்நாட்டில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அது நல்ல முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது.

3,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான மதிப்பீட்டு முறை: 3,5, மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் தேர்வுகள், உயர்நிலைப் பள்ளியில் தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் உள்ள நிலையில், 9ஆம் வகுப்புக்கும் செமஸ்டர் தேர்வுகள் போன்றவை எல்லாம் நிர்வாகச் சுமையை அதிகரிக்கச் செய்வதுடன், ஏற்கனவே மனச்சோர்வு மற்றும் அழுத்தத்தைச் சந்தித்து வரும் நம்நாட்டு மாணவர்களுக்கு, அவற்றை மேலும் அதிகரிக்கச் செய்வதாகவே இருக்கும். கற்றல் தொடர்பான பெற்றோர் மற்றும் குழந்தைகளின் சுமைகளைக் குறைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் எனக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்வு முறைகள் அந்தக் கருத்துக்கு முரணாகவே உள்ளன.

கூடுதல் கல்லூரி நுழைவுத் தேர்வுகள்: பள்ளித் தேர்வுகளோடு புதிதாக, அனைத்துத் துறைகளுக்குமான கல்லூரி சேர்க்கைகளுக்குப் பொது நுழைவுத்தேர்வுகளை அறிமுகப்படுத்துவது, மாணவர்கள் சந்திக்க கூடுதலாக மற்றொரு தேர்வைச் சேர்ப்பது மட்டுமின்றி, அத்தகைய தேர்வுகளை நன்றாக எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகளில்கூட சேர முடியாத விளிம்புநிலைச் சமூக மாணவர்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும் ஆகிவிடும்.

கல்வியில் பெண்கள்: தேசிய கல்விக் கொள்கையில், பள்ளிகள் மற்றும் உயர்கல்வியில் பெண்களின் வருகைப் பதிவு விகிதத்தை அதிகரிக்கச் செய்வதற்கான முன்னேற்பாடுகள் மிகக் குறைவாகவே உள்ளன. அனைத்துப் பிரிவுகளுக்கும் பன்முக மதிப்பீட்டு முறைகள், விருப்பத்தின் அடிப்படையில் தொழில் பயிற்சிகள், பொதுத் தேர்வுகள் ஆகியவற்றைக் கொண்ட கட்டமைப்பு, ஒரு பெண்குழந்தை தனது கனவுகளைப் பின்தொடரத் தடையாகவே செயல்படும்.

இடஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை: தேசிய கல்விக் கொள்கையில் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினர் தரமான கல்வியைப் பெறுவதற்குரிய சமவாய்ப்பை உறுதி செய்வதற்குத் தேவையான வழிமுறைகள் தவிர்க்கப்படுவது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்திற்கும், ஒட்டுமொத்தமாக நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கையாகும்.

“தமிழ் மொழியின் தரத்தை குறைக்கும் #NEP2020-ஐ அமல்படுத்தாதீர்” - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தொழில் பயிற்சி அறிமுகம்: தேசிய கல்விக் கொள்கையில் தொழில் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் மற்றொரு வழியாகும். இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுத் தொடக்கத்திலேயே தோல்வியடைந்ததால், அது ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை, கிராமப்புற மாணவர்களைக் கல்வி பெறவிடாமல் வெளியேற்றுவதுடன், சாதி அடிப்படையிலான பரம்பரைத் தொழில்கள் மற்றும் சாதிப் படிநிலைகளை வலுப்படுத்தும்.

அரசுப் பள்ளிகளை இணைத்தல்: அரசுப் பள்ளிகளை மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அடிப்படையில் வளாகங்களாக இணைப்பதற்கான உத்தேசத் திட்டம் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். இது தொலைவு மற்றும் பயணத் தடைகளின் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளில் இருந்து வெளியேற வழிவகுக்கும்.

தொழில்நுட்ப உதவியுடன் இணையவழி கற்றல்: தமிழ்நாட்டில் மட்டும் 1.3 கோடி மாணவர்களில் 60% பேர் கிராமப்புறங்களில் உள்ளனர். தமிழ்நாட்டிலும், நாட்டின் பிற பகுதிகளிலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கிடையில் தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு இடைவெளியைக் கருத்தில் கொள்ளாமல்; தொழில்நுட்ப உதவியுடன் கற்றல்முறை மீது தேசிய கல்விக் கொள்கை அதிக கவனம் செலுத்துவது, தொழில்நுட்பவழிக் கல்வி கற்றலுக்கான வாய்ப்பை அனைவரும் பெறுவதில் உள்ள சிக்கல் கவனத்தில் கொள்ளப்படாததையே காட்டுகிறது.

அதீத மையப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பு: அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும், அரசு நடத்தும் நிறுவனங்களையும் ஒரே ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் சேர்ப்பது மாநிலத்தின் பங்கு மற்றும் உரிமைகளின் மதிப்பைக் குறைப்பதுடன் நாட்டின் கூட்டாட்சித் தன்மைக்கு எதிரான செயல்பாடுகளாகும்.

தனியார் பங்களிப்புக்கு முன்னுரிமை: அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களை விடத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவு தன்னாட்சி அதிகாரமும், செயல்படுவதற்கான சுதந்திரமும் வழங்கப்படுகின்றன. கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் இன்றி, பொதுக் கல்வி நிறுவனங்களுக்கு இணையாகத் தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதிப்பதன் மூலம் கல்வித் துறையைத் தாராளமயமாக்குவது, கல்வியை வணிகமயமாக்குவதுடன், ஏற்றத்தாழ்வுகளையும் அதிகரிக்கும்.

தன்னாட்சி நிறுவனங்களின் இணைப்பு: செம்மொழித் தமிழாய்வு நிறுவனங்களைப் பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது, செம்மொழியாம் தமிழ் மொழிக்கு இழைக்கப்படும் கடும் அநீதியாகும். மேலும், இது தமிழக மக்களின் பெருமிதத்தையும், பெருமையையும் இழிவுபடுத்துவதாகும். இந்த நடவடிக்கை முன்னுரிமையின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும் தமிழ் மொழியின் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், மாநில அரசு அனுமதிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளின் மூலம் தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவில் கல்வியை முன்னேற்றும் நோக்கத்துடன் வடிவமைக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அரசியலமைப்பு, கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக்கு எதிரான இந்தக் கொள்கை, இதுவரை நம் நாடு கல்வியில் அடைந்த முன்னேற்றத்திற்கு அதிகத் தீங்கையே விளைவிக்கும். மத்தியில் அதிகாரத்தை குவித்தல், மாநிலங்களின் குரல்களைப் புறக்கணிக்கத்தல் ஆகிய இத்தகைய முடிவுகள், இந்த நாட்டுக் குடிமக்களின் நலன்களுக்கு எதிரானவை.

சமூகநீதியைக் காக்க உறுதிபூண்ட ஒரு கட்சியின் தலைவர் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவன் என்ற முறையில், தேசிய கல்விக் கொள்கை 2020, நம் நாட்டின் அடிப்படையான மதிப்பீடுகள் அனைத்தையும் சிதைக்கக் கூடிய வகையில் உள்ளதாகவே நான் நம்புகிறேன். நாடு முழுவதும் உள்ள நமது குழந்தைகள் அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கல்வி உரிமையை உறுதிப்படுத்தவும், அதனை நீங்கள் முழுமையாக உணரவும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நான் முன்வைக்கிறேன்.

1. நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள குடிமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் இந்தக் கொள்கை குறித்து விவாதிக்க மற்றும் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்ய, மாநிலங்கள் மற்றும் மத்தியில் இருந்து தொடர்புள்ள அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பதற்கான ஓர் ஆலோசனைச் செயல்முறையை மீண்டும் நிறுவுங்கள்.

2. தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மறுவடிவமைத்து, நாடாளுமன்ற அமர்வின் மூலம், நமது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சிமுறை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நடைமுறையை உத்தரவாதப் படுத்துதல் ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்துங்கள்.

நமது அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிய செயல்முறைகளைப் பின்பற்றுவதற்கு உகந்த சூழ்நிலை ஏற்படும் வரை தேசியக் கல்வி கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்தும் முடிவை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த விவாதம் மற்றும் கலந்துரையாடல் செயல்முறைகள் நமது ஜனநாயகத்தின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு மையமானவையாகவும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நலன் பயக்கக் கூடியவையாகவும் இருக்கும்.

banner

Related Stories

Related Stories