மு.க.ஸ்டாலின்

“விசா தடையால் 40 பில்லியன் டாலர் இழப்பு; முன்னரே அமெரிக்காவுக்கு அழுத்தம் தராதது ஏன்?” : மு.க.ஸ்டாலின்

கொரோனா தாக்கத்திற்குள்ளாகியுள்ள இந்தக் காலகட்டத்தில் பின்னடைவான முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசிற்கு பா.ஜ.க அரசு உடனடியாக அழுத்தம் கொடுத்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“விசா தடையால் 40 பில்லியன் டாலர் இழப்பு; முன்னரே அமெரிக்காவுக்கு அழுத்தம் தராதது ஏன்?” : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"இந்தியப் பணியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எச்-1பி, எச்-2பி, எல்-1 விசாக்கள் மற்றும் தற்காலிகப் பணி விசாக்கள் உள்ளிட்டவற்றை “தற்காலிகமாக” நிறுத்தி வைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசிற்கு மத்திய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்திட வேண்டும்" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதன் விவரம் :

கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றினால் உலகப் பொருளாதாரமே எதிர்மறையான விளைவுகளை வேகமாகச் சந்தித்து வருகின்ற நேரத்தில், எச்-1பி, எச்-2பி, எல்-1 விசாக்கள் மற்றும் தற்காலிகப் பணி விசாக்கள் உள்ளிட்டவற்றை “தற்காலிகமாக” நிறுத்தி வைத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது, அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. கோவிட்-19 பேரிடரிலிருந்து பொருளாதார ரீதியாக மீட்சி பெற முயற்சி செய்யும் நம் இந்திய நாட்டின் மீது, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாகவே இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

அமெரிக்கத் தூதரகத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் எச்-1பி விசாவில் 75 சதவீதம் பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை அதிகரித்திட வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவினை எடுத்திருந்தாலும்; அந்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம், தொழில்நுட்பத்திலும், மருத்துவத்திலும் அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கு பெரும்பங்களித்து வரும் இந்தியப் பணியாளர்களுக்கு, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும், இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்கா உணர்ந்திட வேண்டும்.

இந்த நியாயமற்ற முடிவு, அந்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான “உயர் தொழில்நுட்ப அறிவு சார்ந்த” இந்தியப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் மிக மோசமாகப் பாதிப்பதோடு- அவர்களுடைய வருமானத்தையே நம்பியிருக்கும் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் திடீரென இன்னல்கள் நிறைந்த இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

அமெரிக்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களின் படிப்பினை முடித்து வேலை தேடுவதற்கும், பெற்றுள்ள கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும், இந்த “விசா நிறுத்தம்” தடையை ஏற்படுத்தி, கொரோனா நோய்த் தொற்று ஆபத்து உச்சம் பெற்றுள்ள நிலையில், தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்லத் தவிக்கும் கடும் நெருக்கடியையும் நம் மாணவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா உலகத்திற்கே முன்னோடி மட்டுமல்ல; நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம் இத்துறையை நம்பித்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள இன்ஃபோசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மேற்கண்ட விசாக்களை நம்பித்தான், தங்களின் வாடிக்கையாளர்களின் முக்கிய திட்டச் செயல்பாடுகளை முடித்துக் கொடுக்க தங்களது பணியாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்புகின்றன. அதற்கும் அமெரிக்க அதிபரின் முடிவு, சிக்கலை ஏற்படுத்தி, இந்தியாவிற்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் இழப்பையும் உருவாக்கியிருக்கிறது. பொருளாதார ரீதியாக, உலகமே தலைகீழான மாற்றங்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில், அமெரிக்கா இப்படியொரு கடுமையான முடிவினை எடுத்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

“விசா தடையால் 40 பில்லியன் டாலர் இழப்பு; முன்னரே அமெரிக்காவுக்கு அழுத்தம் தராதது ஏன்?” : மு.க.ஸ்டாலின்

இந்த விசாக்கள் எல்லாம் நிறுத்தப்படும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்தபோதே, மத்திய பா.ஜ.க அரசு, இந்தியாவின் நலன் கருதி, அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்; அமெரிக்க அதிபருடன் தாம் போற்றிவரும் நட்பை பிரதமர் பயன்படுத்தி இருக்கவேண்டும். அவற்றைச் செய்யத் தவறியதால், அமெரிக்காவில் உள்ள இந்தியப் பணியாளர்கள் நடக்கக் கூடாதென நினைத்ததது இப்போது நடந்தே விட்டது.

ஆகவே, கோவிட்-19 தாக்கத்திற்குள்ளாகியுள்ள இந்த காலகட்டத்தில்- பின்னடைவான இந்த முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசிற்கு மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இரு நாடுகளின் பொருளாதார மற்றும் தூதரக உறவினை மேம்படுத்திடும் வகையில் இந்த விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் முடிவினை திரும்பப் பெற்று, அமெரிக்காவில் உள்ள இந்தியப் பணியாளர்களையும், நம் நாட்டில் உள்ள அவர்களது குடும்பங்களையும் காப்பாற்றிட மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories