மு.க.ஸ்டாலின்

“லட்சியக் கனவுகளை மட்டுமே விரும்புகிறேன்” - மனம் திறந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்! #ThrowBack

‘உழைப்பு; உழைப்பு; உழைப்பு’ என எப்போதும் சக்கரமாகச் சுழன்று வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஆனந்த விகடன்’ இதழுக்காக மனம் திறந்த நேர்காணலின் ஒருபகுதி இங்கே...

“லட்சியக் கனவுகளை மட்டுமே விரும்புகிறேன்” - மனம் திறந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்! #ThrowBack
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘உடன்பிறப்புகளின் தலைவர்’ மு.க.ஸ்டாலின் இன்று 67-வது அகவை காண்கிறார். ‘உழைப்பு; உழைப்பு; உழைப்பு’ என எப்போதும் சக்கரமாகச் சுழன்று வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஆனந்த விகடன்’ இதழுக்காக மனம் திறந்த நேர்காணலின் ஒருபகுதி இங்கே...

மறக்க முடியாத நாள்

"இரண்டு தினங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. மிசா சட்டத்தில் நான் கைதானது 76-ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள். எனக்குத் திருமணமாகி ஐந்து மாதங்கள் தான் ஆகியிருந்தது. கலங்கிய கண்களுடன் மனைவி நிற்கிறார். போர்க்களத்துக்குச்செல்லும் மகனை வீரத் திலகமிட்டு அனுப்பும் புறநானூற்றுத் தாய் போல வாழ்த்தி வழி அனுப்புகிறார் தலைவர் கலைஞர். இந்த இரண்டையும் ஏற்றுக்கொண்டு போலீஸ் வேனில் ஏறிக் கை அசைத்தேன்.

இன்னொரு நாள்... தலைவர் கைதான 2001 ஜூன் 30-ம் தேதி. அந்தப் பழுத்த தலைவரை பலவந்தப்படுத்தி, காவல்துறை இழுத்துப் போன காட்சியை வெளியூரில் இருந்ததால் டி.வியில்தான் பார்த்தேன். அந்தக் கொடூரம் இன்று நினைத்தாலும் பதறவைப்பது!"

பயப்படும் விஷயம்

"நான் மட்டுமல்ல... ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் பயப்பட வேண்டியது மக்களுக்குத்தான். இதற்கு அச்சம் என்று அர்த்தம் அல்ல; பொறுப்புணர்வு என்று எடுத்துக்கொள்ளுங்கள்!"

“லட்சியக் கனவுகளை மட்டுமே விரும்புகிறேன்” - மனம் திறந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்! #ThrowBack

சென்டிமென்ட்

"பகுத்தறிவுக் குடும்பத்தில் பிறந்த எனக்குச் சின்னவயதில் இருந்தே சென்டிமென்ட் இல்லை. மனதுக்கு இதமும் மகிழ்ச்சியும் அளிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்க வேண்டும் என்று நினைப்பேன். வீட்டுக்குள் வரும்போது பேரன் இன்பாவின் சிரித்த முகமும், தேர்தல் களத்துக்குப் போகும்போது தலைவரின் வாழ்த்தும் அப்படிப்பட்டவை!"

அதிகம் பிடித்த உணவு

"தயிர் சாதமும் வத்தக் குழம்பும். இவை இரண்டும் இருந்தால், வேறு எதுவும் வேண்டாம்!"

இரவில் வந்த ஒரு கனவு

"உறக்கத்தில் வரும் கனவுகள் மீது நம்பிக்கையும் ஈடுபாடும் இல்லை. கொள்கைப் பயணத்தை நிறைவேற்றும் லட்சியக் கனவுகளை மட்டுமே விரும்புகிறேன்!"

இளமையின் ரகசியம்

"சென்னையில் இருந்தால் அதிகாலை நடைப் பயிற்சியும் யோகாவும் தவறாமல் செய்வேன். யோகாதான் நம் முன்னோர்கள் கற்றுக்கொடுத்திருக்கும் வாழ்க்கை முறை. அதிகாலையில் பிராணாயாமப் பயிற்சியும் செய்கிறேன். எளிமையான மூச்சுப் பயிற்சி இது. 'சரியா தூங்காததும்,சரியா சாப்பிடாததும்தான்' என் இளமையின் ரகசியமா இருக்குமோ?' என்று நான் நினைப்பது உண்டு!"

“லட்சியக் கனவுகளை மட்டுமே விரும்புகிறேன்” - மனம் திறந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்! #ThrowBack

பிடித்த உடை

"கறுப்பு சிவப்புக் கரை போட்ட வேட்டியும் வெள்ளைச் சட்டையும்தான் எனக்குப் பிடித்த உடை. உடற்பயிற்சி நேரத்தில் டி-ஷர்ட்டும் டிராக் பேன்ட்டும் போடுவேன். ஓய்வின்போது லுங்கியும் பனியனும்தான் வசதி!"

பொக்கிஷம்

"மிசா காலச் சிறைவாசத்தின்போது எனக்கு நம்பிக்கை டானிக் ஏற்றிய கடிதங்களை இன்று வரை வைத்திருக்கிறேன். அந்தக் காகிதங்களின் நிறம் மாறி இருக்கலாம். அவை விதைத்த போர்க் குணம் மாறவில்லை!"

பிடித்த பொன்மொழி

"பேரறிஞர் அண்ணாவின் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!'

தலைவர் கலைஞரின் 'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்."'

இதுவரை சொல்லாதது

"'சொல்லாத சொல்லுக்கு விலை ஏதுமில்லை' என்பது கவியரசு கண்ணதாசன் கருத்து. ரகசியங்களும் அப்படித்தான். சொல்லாத வரை மதிப்பு!"

ஆசை

"கிராமங்களைப்போல போக்குவரத்து நெரிசல் இல்லாத சென்னையும், சென்னையைப்போல நவீன வசதிகள்கொண்ட கிராமங்களும் அமைப்பதே எனது லட்சியம்!"

“லட்சியக் கனவுகளை மட்டுமே விரும்புகிறேன்” - மனம் திறந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்! #ThrowBack

எதைப் பெருமையாக நினைக்கிறீர்கள்?

"உலகத் தமிழர்களின் தலைவராக இருக்கும் கலைஞரின் மகன் என்பதைவிடவும், அவரது தலைமையிலான இயக்கத்தின் தொண்டனாக இருப்பதை!"

நெருக்கமான நண்பர்

"எதிர்பார்ப்பு இல்லாமல் பழகும் அத்தனை பேருக்கும் நான் நெருக்கமான நண்பன்!"

பிடித்த ஊர்

"தலைவரைத் தந்த திருக்குவளையும், வளர்த்த திருவாரூரும்!"

கோபம் அதிகமானால்...

"கோபம் அதிகமானால் வெளிப்படுத்திவிடுவதுதான் மனித இயல்பு. என்னிடம் இருந்தும் வெளிப்படும். நமக்கு விருப்பம் இல்லாத செயலை ஒருவர் தொடர்ந்து செய்யும்போதுதான் கோபம் அதிகமாகிறது. என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட நபர் மீதான கோபத்தை விட சமூக நீதிக்கான கோபம் அதிகமாக வேண்டும். அதுதான் நல்ல பலனைத் தரும்!"

அப்பா சொன்ன அறிவுரை

"'பதவிகளை அதிகாரமாகக் கருதாமல் பொறுப்பாக எண்ண வேண்டும்' என்பதுதான் தலைவர் சொன்ன முக்கியமான அறிவுரை. கட்சியிலும் ஆட்சியிலும் கொடுக்கப்பட்ட பதவிகளைப் பொறுப்புக்களாகத்தான் நினைக்கிறேன். தி.மு.க. தொண்டன் என்பதுதான் மிகப் பெரிய பதவி. மற்றவை மக்களுக்கு பணியாற்றக் கிடைத்த வாய்ப்புகள் என்பதை எப்போதும் நான் மறப்பது இல்லை!"

- ப.திருமாவேலன்

(ஆனந்த விகடன் - 2009 டிசம்பர் 23 தேதியிட்ட இதழில் வெளிவந்த நேர்காணல்)

நன்றி : ஆனந்த விகடன்

banner

Related Stories

Related Stories