மு.க.ஸ்டாலின்

"இயக்கமே நமக்கு முக்கியம்; அவசியமான ‘ஆபரேஷனை’ செய்தாக வேண்டும்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று நல்லாட்சி அமைப்பதன் அவசியம் குறித்து குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

"இயக்கமே நமக்கு முக்கியம்; அவசியமான ‘ஆபரேஷனை’ செய்தாக வேண்டும்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற பெருவெற்றி குறித்தும், சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று நல்லாட்சி அமைப்பதன் அவசியம் குறித்தும் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் எழுதியுள்ள மடல் பின்வருமாறு :

“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் முக்கியமான ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி.

மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும். மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும்.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு அறிவித்திட வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்ற அ.தி.மு.க அரசின் வஞ்சக நாடகத்திற்குக் கண்டனம்.

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.

அ.தி.மு.க அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தி அ.தி.மு.கவின் முகமூடியைக் கிழித்தெறிய சபதம்.

இவைதான் அந்தத் தீர்மானங்கள். இவற்றின் அவசியம் - முன்னுரிமை கருதியே அவசரமாகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

"இயக்கமே நமக்கு முக்கியம்; அவசியமான ‘ஆபரேஷனை’ செய்தாக வேண்டும்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்குப் பக்கத்தில் திறந்து வைக்கப்பட்ட நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையினைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக அவரது உயிர்ப்பு மிக்க சிலைகளைத் திறந்து வைத்து வருகிறேன்.

கடல் கடந்து சென்று அந்தமானில் அவரது சிலையைத் திறந்து வைத்த நிகழ்வின் நினைவுகள் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருந்த நிலையில், அண்மையில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழாவும், அதையொட்டி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டமும், நமக்கு எத்தகைய ஆற்றலைத் தலைவர் கலைஞர் தந்து சென்றிருக்கிறார் என்பதை உணர்த்தியது. நாம் மட்டுமல்ல, நம்மைப் போலவே தமிழக மக்களும் உணர்ந்திருக்கிற காரணத்தினால்தான் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கழகத்திற்கு மிகப் பெரும் வெற்றியை வழங்கியிருக்கிறார்கள்.

தமிழர் திருநாளும், தமிழ்ப்புத்தாண்டும் இணைந்து நம் உள்ளத்தை மகிழ்வித்த பொங்கல் திருநாட்கள் முடிந்தபிறகு, உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற கழகத்தினரும் அவர்களைச் சார்ந்தவர்களும் தொடர்ச்சியாக என்னைச் சந்தித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தனர். இன்று வரை அந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

"இயக்கமே நமக்கு முக்கியம்; அவசியமான ‘ஆபரேஷனை’ செய்தாக வேண்டும்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

சர்க்கரைப் பொங்கல் போல, செங்கரும்பு போல இனிப்பான செய்திகள்தான் இவை என்றாலும், அதே பொங்கல் நன்னாளில் பயன்படுத்தும் இஞ்சியைப் போல- மஞ்சளைப் போல நமக்குச் சில மருந்துகளும் தேவைப்படுகின்ற காலம் இது. அதனால்தான் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டுகின்ற அறிவிப்பினை கழகப் பொதுச்செயலாளரான இனமானப் பேராசிரியர் அவர்கள் வெளியிட்டார்கள்.

தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கழகத்தினருக்கு, கழகத் தலைவர் என்ற முறையிலும், உங்களில் ஒருவன் என்ற முறையிலும் உங்களின் மனதில் உள்ளவற்றை அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டிய கடமை எனக்கு இருந்தது.

அந்தக் கூட்டத்தில் நான் உரையாற்றிடும்போது குறிப்பிட்டவற்றை தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஏனெனில், அவற்றை செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி இந்த இயக்கத்தின் அனைத்து நிலையில் உள்ளவர்களும் கவனத்தில் கொண்டு செயலாற்றிட வேண்டும் என்பதால்தான்.

"இயக்கமே நமக்கு முக்கியம்; அவசியமான ‘ஆபரேஷனை’ செய்தாக வேண்டும்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

“களத்துக்குத் தயாராக வேண்டிய காலம் இது. அவசரமாக செயல்படுத்த வேண்டியவை இருப்பதால்தான் அவசர செயற்குழுவைக் கூட்டியுள்ளோம். தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை 2020ம் ஆண்டு என்பது தேர்தல் ஆண்டு. இந்த ஆண்டில் எப்படி ஒவ்வொரு நாளும் உழைக்கிறோமோ எப்படி தீவிரமாகச் செயல்படுகிறோமோ அதன் பலனை 2021ல் பெறலாம். அதனால்தான் இந்த ஆண்டினைத் தேர்தல் ஆண்டு என்று சொன்னேன். அதனை மனதில் கொண்டு கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் செயல்பட வேண்டும். இந்த ஆண்டு முழுவதும் களத்தில் இருந்தால் 2021ல் வெற்றி உறுதி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

கழகத்தின் பொதுக்குழுவிலேயே சொன்னேன். சட்டமன்றத் தேர்தலில் நாம்தான் வெற்றி பெறுவோம். அந்த வெற்றியை சாதாரணமாகப் பெறமுடியாது. கடுமையாக உழைத்தாக வேண்டும். நமது உழைப்பைத் தடுக்கவும் திசை திருப்பவும் பார்ப்பார்கள். நமது வெற்றியை எப்படியாவது கெடுக்கமுடியுமா என்று பார்ப்பார்கள். அதற்கு சாட்சி உள்ளாட்சி மன்றத் தேர்தல்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என முழுமையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருந்தால் தி.மு.கழகக் கூட்டணி, 80 சதவீத வெற்றியினைப் பெற்றிருக்கும். ஆட்சியாளர்களால் நிச்சயம் அந்த வெற்றியைப் பெற முடியாது என்பதால்தான், கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தினால் அ.தி.மு.க வெற்றி பெற்றுவிடும் என மனப்பால் குடித்து தேர்தல் நடத்தினார்கள். ஆனால், கிராமப்புற மக்களும் தி.மு.கவுக்குத்தான் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை; அதிர்ச்சியடைந்தார்கள்.

"இயக்கமே நமக்கு முக்கியம்; அவசியமான ‘ஆபரேஷனை’ செய்தாக வேண்டும்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

5,090 ஒன்றியக் கவுன்சிலர்களில் தி.மு.க 2100 இடங்களைக் கைப்பற்றியது. அ.தி.மு.க.வை விட 319 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளோம். மாவட்ட கவுன்சிலர்களில் மொத்தமுள்ள 515 இடங்களில் நமக்கு வெற்றியாக அமைந்தவை 243. இதிலும் அ.தி.மு.க.வைவிட 29 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளோம். ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல், அராஜகம் இவற்றையெல்லாம் மீறி 60 சதவீத இடங்களைத் தி.மு.கழகம் கைப்பற்றியுள்ளது. நேர்மையாகவும் முழுமையாகவும் தேர்தல் நடந்திருந்தால் 90 சதவீத வெற்றியைப் பெற்றிருப்போம்.

ஊரக உள்ளாட்சிக்கான தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்குரிய மறைமுகத் தேர்தலில் தி.மு.கழகம் 12 மாவட்டங்களில் வென்றுள்ளது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 13 மாவட்டங்களைப் பெற்றுள்ளது. ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக மறைமுகத் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையிலும், தி.மு.க அதனை எதிர்கொண்டு பெற்றுள்ள வெற்றி உற்சாகத்தை அளிக்கிறது.

ஒவ்வொரு வெற்றியும் நமக்கு வரலாறாக அமைகிறது. ஓர் ஆண்டுக்கு முன்புவரை நாடாளுமன்றத்தில் நமக்கு ஒரேயொரு உறுப்பினர்கூட இல்லை. இப்போது 24 உறுப்பினர்களுடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையினைப் பெற்றிருக்கிறோம். சட்டமன்றத்தில் 89ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது ‘செஞ்சுரி ‘ அடித்து 100ஆக உயர்ந்துள்ளது.

"இயக்கமே நமக்கு முக்கியம்; அவசியமான ‘ஆபரேஷனை’ செய்தாக வேண்டும்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

2011 உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவுக்கு ஒன்றிய கவுன்சிலர்கள் 1,007 பேர். இப்போது 2,100 பேர். மாவட்ட கவுன்சிலர்கள் அப்போது 30 பேர்தான். இப்போது 243 பேர். உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சர்கள் எல்லா ஊர்களிலும் முகாமிட்டார்கள். கோடி கோடியாகச் செலவு செய்தார்கள். பதவிகளை ஏலம் எடுத்தார்கள். பல இடங்களில் அராஜகங்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள். இவற்றையெல்லாம் மீறி நாம் பெற்றுள்ள வெற்றி மகத்தான வெற்றிதான்.

ஆளுங்கட்சியைப் பொறுத்தவரை, அமைச்சர்களின் உறவினர்கள் தோற்றுள்ளார்கள். எம்.எல்.ஏ கணவர் தோற்றுள்ளார். எம்.எல்.ஏ-வின் மகன் தோற்றுள்ளார். முன்னாள் அமைச்சரின் மகன் தோற்றுள்ளார். அ.தி.மு.கவுக்கு உரிய பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள். அந்த மக்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெறுகிற வகையில், அவர்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டிய முறையில் நாம் செயல்பட்டால், இந்த ஆண்டும் வெற்றிகள் வரிசையாகத் தொடரத்தான் போகின்றன. தொண்டர்களும் நிர்வாகிகளும் மேற்கொண்ட உழைப்பும் செயல்பாடுகளாலும்தான் இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறது. இந்த உழைப்பும் செயல்பாடும் இன்னும் கூடுதலாக ஆக்கப்பட்டால்தான் சட்டமன்றத்தைக் கைப்பற்ற முடியும்.

அதற்கான உழைப்பும் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் கழகத்தின் ஒவ்வொரு நிலையிலும் உறுதியாக இருந்திட வேண்டும். தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்துகொண்டவர்கள்தான் வெற்றி பெற்றிடுகிறார்களே தவிர, தம்மைத்தாமே ஏமாற்றிக் கொண்டவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

"இயக்கமே நமக்கு முக்கியம்; அவசியமான ‘ஆபரேஷனை’ செய்தாக வேண்டும்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!

நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றோம். அதில் சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் தொய்வு தெரிகிறது. தயக்கமும் சுணக்கமும் ஏன் என்பதை ஆலோசனை செய்தாக வேண்டும். கழக நிர்வாகிகள் உங்களால் முடிந்தளவு பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். தலைமைக் கழகத்தால்தான் தீர்க்க முடியும் என்கிற விஷயங்களைச் சொல்லுங்கள். பரிசீலித்துத் தீர்த்து வைக்கும்.

நோய் வந்தால் உடனடியாக அதற்கு மருந்து தந்தாக வேண்டும். இல்லாவிட்டால் எந்த மருந்துக்கும் குணமாகாத நோயாக அது மாறிவிடும். சிறு பிரச்னைதானே என்று மறைத்தால், அது உள்ளுக்குள்ளேயே வளர்ந்து பெரிய பிரச்னையாக ஆகிவிடும். அவசியமான ‘ஆபரேஷனை’ செய்துதான் ஆக வேண்டும். கூடினோம் கலைந்தோம் என்று எப்போதும் இருந்ததில்லை. இனியும் இருக்க முடியாது. தனிமனிதர்களின் விருப்பு-வெறுப்பு-சுயநலத்தைவிட இயக்கத்தின் லட்சியமும் அதற்கான வெற்றியும் முதன்மையானது. தலைவர் கலைஞர் நமக்கு அந்த எண்ணத்தைத்தான் ஊட்டி வளர்த்திருக்கிறார். எனவே, தனிப்பட்ட முறையில் ஓரிருவர் தவறு செய்திருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது. இயக்கம்தான் நமக்கு முக்கியம்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பலர் புதியவர்கள். அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும்; கற்றுத்தரவேண்டும்; கண்காணித்திட வேண்டும். அதற்காக அடிமைகளைப் போல யாரையும் நடத்திடக் கூடாது. ஏனெனில், இது சுயமரியாதை உணர்வு கொண்ட இயக்கம்.

9 ஆண்டுகாலமாக நாம் ஆட்சியில் இல்லை. இன்னும் ஓராண்டு காலத்திற்குள் மீண்டும் கழக ஆட்சி மலரும். யாரையும் எதிர்கொள்ளும் வலிமையும், வாய்மையும் தி.மு.க.வுக்கு இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான். அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. நமது வெற்றியை யாராலும் தடுத்திட முடியாது” என்பதை கழக நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தேன். அதையேதான் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான உங்களிடமும் சொல்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு வருகிற 31ந் தேதியன்று கழக வரலாற்றில் திருப்புமுனை பல தந்த மலைக்கோட்டையாம் திருச்சியில் நடைபெறுகிறது. மாவட்டக் கழகச் செயலாளர் கே.என்.நேரு மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முன்னின்று மிகப் பிரம்மாண்டமாக செய்து கொண்டிருக்கிறார். வெற்றி பெற்ற அனைவரும் அதில் பங்கேற்று, மக்கள் தொண்டாற்றிடப் பயிற்சி பெற்றிட வேண்டும்.

இம்முறை வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்த வாய்ப்பில் கழகத்தின் வெற்றியை மனதில்கொண்டு செயலாற்றிட வேண்டும். நமது வெற்றிப்பாதையில் குறுக்கிடக்கூடிய தடைகள் வெளிப்புறத்தில் இருந்து வந்தாலும், உட்புறத்திலிருந்து உருவாக்கப்பட்டாலும், அதனைப் பக்குவமாகத் தகர்த்தெறிந்து முன்னேறிடும் ஆற்றல் உங்களிடம் உண்டு. உள்ளாட்சிக் களத்தில் 2020 வெற்றி. அதனைத் தொடர்ந்து 2021ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திடும் வகையில் மகத்தான வெற்றி என கழகத்தின் வெற்றிப் பயணம் கம்பீரமாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.”

உங்களில் ஒருவன்,

மு.க.ஸ்டாலின்.

இவ்வாறு அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories