மு.க.ஸ்டாலின்

“அண்ணா பல்கலைக்கழகத்தை கொல்லைப்புற வழியாகக் கைப்பற்ற முயலும் பா.ஜ.க” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு, கொல்லைப்புற வழியாக மத்திய அரசிடம் பல்கலைக்கழகத்தை ஒப்படைக்க அமைக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“அண்ணா பல்கலைக்கழகத்தை கொல்லைப்புற வழியாகக் கைப்பற்ற முயலும் பா.ஜ.க” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“மத்திய பா.ஜ.க அரசு, மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்தைத் தவிர்த்து, கல்வி மேம்பாட்டிற்கான நிதியினை நேரடியாக மாநில அரசுக்கு வழங்கி, கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவவேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புகழ்பெற்ற ‘அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழுவினை’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்திருப்பது, உடனடியாக வெளி உலகத்திற்குத் தெரியாத உள்நோக்கம் கொண்ட ஒரு அறிவிப்பாகத் தெரிகிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் மாணவர்கள் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்தபோது கடுமையாக எதிர்த்த அ.தி.மு.க, இப்போது அதே அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் தாரைவார்ப்பதற்காகவே ஒரு குழுவினை அமைத்திருப்பது, மாநில அரசிடம் உள்ள பல்கலைக்கழகத்தைக் கொல்லைப்புற வழியாகவே மத்திய அரசிடம் ஒப்படைக்கவும், காலப்போக்கில் அண்ணா பெயரை அகற்றவும், அமைக்கப்பட்ட குழுவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தைக் கூறுபோட நினைக்கும் அ.தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ‘சிறப்பு அந்தஸ்து தருகிறோம்’ என்று ஒரு சலுகையைக் காட்டி தமிழகத்திலுள்ள முக்கியமானதொரு பல்கலைக்கழகத்தை அதிலும் குறிப்பாக அதிக பொறியியல் கல்லூரிகள் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தைத் தன் வசமாக்கிக் கொள்ள மத்திய அரசு தீவிரமாகத் திட்டமிட்டு செயல்படுகிறது. இதன்மூலம் அந்தப் பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது. ‘ஏற்கனவே உள்ள பல்கலைகழகச் சட்டத்தின்கீழ் அது செயல்படும்’ என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் முழு அதிகாரத்தையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மொத்தமாக கைப்பற்றிக் கொள்வதற்கு, பின் வழியாக பயன்படுத்தப்படும் அஸ்திரம் தான் இந்தச் சிறப்பு அந்தஸ்து!

“அண்ணா பல்கலைக்கழகத்தை கொல்லைப்புற வழியாகக் கைப்பற்ற முயலும் பா.ஜ.க” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சிறப்பு அந்தஸ்து அளிக்கும் நடைமுறைகள் குறித்து வரைவு விதிகள் வெளியிட்டு, பெயரளவுக்கு ஒரு "கருத்துக் கேட்பு" வைபவத்தை, புதிய கல்விக் கொள்கையில் கடைப்பிடித்த அதே தந்திரத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு இதிலும் கடைப்பிடிக்கிறது. இந்த ‘வரைவு விதிகள்’ அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மாநில மொழிகளில் கூட வெளியிடப்படவில்லை; போதிய கால அவகாசமும் அளிக்கப்படவில்லை.

மத்திய பா.ஜ.க அரசுதான் இப்படி அவசரப்படுகிறது என்றால், இங்குள்ள ‘எடுபிடி’ அ.தி.மு.க அரசோ அதைவிட அவசரம் காட்டுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதால் ‘69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா?’ என்பது குறித்து தெளிவான அறிவிப்பு ஏதும் இதுவரை வரவில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து “இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று பேட்டி அளித்திருந்தாலும், மாநில உரிமைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இதுவரை முதலமைச்சர் தெரிந்தே சொல்லி வந்த பொய்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இதை நம்ப முடியவில்லை. மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு விதிகளிலும், அரசு பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து அளித்தால் "இடஒதுக்கீட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்படும்" என்று எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

“அண்ணா பல்கலைக்கழகத்தை கொல்லைப்புற வழியாகக் கைப்பற்ற முயலும் பா.ஜ.க” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

‘சிறப்பு அந்தஸ்து’ என்ற பெயரில் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள உள்ளூர் மாணவர்களின் எண்ணிக்கையில் 30 சதவீதத்திற்கு குறையாமல் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கலாம்; வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்பது போன்ற பல்வேறு விஷயங்களும் மாநில அரசின் உத்தரவு இல்லாமல் அல்லது மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் செய்யப்படும் என்பதை இந்த வரைவு விதிகள் தெளிவுபடுத்துகின்றன.

உயர்கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்த வேண்டும் என்றால் அந்த நிதியை நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு அளித்து தமிழக மாணவர்களுக்கு பயனுள்ள வகையிலும் - இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எந்த ஆபத்தும் வராமலும் கல்வியின் தரத்தை மேம்படுத்திட முடியும். உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் நேரடியாக மாநில அரசுக்கு உதவாமல் "நாங்கள் சிறப்பு அந்தஸ்து தருகிறோம். ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்" என்று மத்திய பா.ஜ.க. அரசு இப்போது சொல்வது அறிவுப்பசி என்பதைத் தாண்டி அதிகாரப்பசியாகவே உள்ளது. இதுதான் இந்தச் சிறப்பு அந்தஸ்து அளிப்பதன் சூட்சுமம்!

தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களையும் - அதன்கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளையும் ‘காவி மயமாக்கும் திட்டத்திற்கு’ இந்தச் சிறப்பு அந்தஸ்து என்ற கவர்ச்சி அறிவிப்பை மத்திய பா.ஜ.க. அரசு பயன்படுத்துகிறது. ஆகவே அண்ணா பல்கலைக்கழக விஷயத்தில் மத்திய பா.ஜ.க. அரசிடமும் வெளிப்படைத்தன்மை இல்லை. 5 அமைச்சர்கள் குழு அமைத்துள்ள அ.தி.மு.க. அரசிடமும் வெளிப்படைத்தன்மை இல்லை. நீட் தேர்வு, ஜி.எஸ்.டி, குடியுரிமை திருத்தச் சட்டம் என, மாநில உரிமைகள் பலவற்றிலும் மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் இணைந்து போட்ட நாடகத்தை, இந்தச் சிறப்பு அந்தஸ்து விவகாரத்திலும் மீண்டும் கைகோர்த்து அரங்கேற்றி வருகின்றன.

ஆகவே அ.தி.மு.க அரசு நியமித்துள்ள இந்த ஐந்து அமைச்சர்கள் குழுவில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அருமை பெருமைகளை உணர்ந்துள்ள துணை வேந்தர்கள், முன்னாள் துணை வேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் தலைமையில் ஒரு குழுவினை நியமித்து - அதில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியையும் இடம்பெறச் செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்படும் சிறப்பு அந்தஸ்து மாநில உரிமைகளை பாதுகாக்குமா? உயர்கல்வியின் தரத்தை உயர்த்துமா? தமிழகத்தின் இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டுமா? என்பன போன்ற மிக முக்கிய அம்சங்கள் குறித்து மக்களிடமும் அனைத்துப் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமும் ஒரு கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்திட வேண்டும்.

“அண்ணா பல்கலைக்கழகத்தை கொல்லைப்புற வழியாகக் கைப்பற்ற முயலும் பா.ஜ.க” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

அந்த அறிக்கையினை தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் வைத்து விவாதித்து, பேரறிஞர் அண்ணா பெயரில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகம் - தமிழர்களின் அடையாளமாக உள்ள பல்கலைக்கழகம், தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து செயல்பட்டு, கல்வியின் தரத்தை தொடர்ந்து உயர்த்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களை எல்லாம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் ஆக்கிரமிப்பு உள்நோக்கத்துடன் செயல்படுவதைத் தவிர்த்து, கல்வி மேம்பாட்டிற்கான நிதியினை நேரடியாக மாநில அரசுக்கு வழங்கி - கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்திட உதவிடவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories