மு.க.ஸ்டாலின்

“ஊழல் அரசின் எந்த அமைச்சருடன் தொடர்பு வைத்திருக்கிறது அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ்?”- மு.க.ஸ்டாலின் பேச்சு!

அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம், ஊழல் அ.தி.மு.க அரசைச் சேர்ந்த எந்த அமைச்சரோடு தொடர்பு வைத்திருக்கிறது என்பது விரைவில் வெளிவரும் எனப் பேசியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

“ஊழல் அரசின் எந்த அமைச்சருடன் தொடர்பு வைத்திருக்கிறது அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ்?”- மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“தமிழகத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் ஒப்பந்தங்கள் எடுத்து தொழில் நடத்தி வரும், அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம், ஊழல் அ.தி.மு.க அரசைச் சேர்ந்த எந்த அமைச்சரோடு தொடர்பு வைத்திருக்கிறது என்பது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனப் பேசியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடைபெற்ற தி.மு.க பிரமுகர் இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசியதாவது :

“இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் 1967க்கு முன்பு நடைபெற்றிருந்தால், அந்தத் திருமணங்கள் சட்டப்படி - முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அன்றைக்கு நாம் பெற்றிருக்கவில்லை. ஆனால், 1967-ல் தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்று, அண்ணா அவர்கள் முதன்முதலாக முதலமைச்சர் என்ற முறையில் சட்டமன்றத்தில் நுழைந்து, முதல் தீர்மானமாக நிறைவேற்றித் தந்த தீர்மானம் என்னவென்றால் சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற அங்கீகாரத்தை நமக்கு பெற்றுத் தந்ததுதான்.

இன்றைக்கு நடைபெற்றுள்ள இந்தத் திருமணம் சட்டப்படி - முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்துடன் நடந்தேறியிருக்கிறது. இன்றைக்கு நாட்டில், ஒரு புறத்தில் வைதீகத் திருமணங்கள் நடக்கின்றன. மற்றொரு புறத்தில், சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வைதீகத் திருமணத்தைக் குறை சொல்ல வேண்டும், விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் நமக்கு இருந்ததில்லை. ஆனால் அதே நேரத்தில், நாம் சுயமரியாதை பெற்றவர்களாக இருந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள். அதற்காக தொடர்ந்து உழைத்தார்கள். பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அதற்காக கல்லடி - சொல்லடி அனைத்தையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்பட்டதில்லை. அண்ணாவும், கலைஞரும் அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தார்கள்.

“ஊழல் அரசின் எந்த அமைச்சருடன் தொடர்பு வைத்திருக்கிறது அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ்?”- மு.க.ஸ்டாலின் பேச்சு!


இன்றைக்கும் நம்முடைய உயிரோடு, உதிரத்தோடு கலந்திருக்கக்கூடிய தலைவர்களாகத்தான் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அந்த உணர்வு இருக்கின்ற வரையில், இந்தத் தமிழ்நாட்டில் எந்தக் கொம்பனாலும் உள்ளே நுழைந்துவிட முடியாது என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு திருமண நிகழ்ச்சியா? அல்லது ஒரு பெரிய பொதுக்கூட்டமா? அல்லது மாபெரும் கூட்டமா? இன்னுங்கூட சொல்லவேண்டும் என்று சொன்னால், மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய மாநாடா? என்று சந்தேகப்படக் கூடிய அளவில் இந்த மணவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், இன்றைக்கு மணமகனாக வீற்றிருக்கக்கூடிய சுப்பிரமணியன், அவருடைய அருமைத் தந்தையார் காசிவிசுவநாதன், அவருடைய தாயார், அதேபோல அவருடைய சகோதரர்கள் எல்லோருமே இந்த இயக்கத்தில் இருக்கக்கூடியவர்கள்தான். இயக்கத்தில் சில பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடியவர்கள்தான்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக அவருடைய சகோதரர் கைலாசம் இருக்கிறார். அதேபோல, பொற்செல்வன் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆக, ஒரு குடும்பமே இயக்கம்தான். இதைக் கூட பார்த்து சிலர் பொறாமைப்படுகிறார்கள். அரசியல் வாரிசு உருவாகி இருக்கிறது என்று. வாரிசு இருக்கக்கூடியவர்கள்தான் வாரிசாக வருவார்களே தவிர, வாரிசு இல்லாதவர்கள் வர முடியாது.
நான் யாரையும் குறைத்து மதிப்பிட்டுப் பேசுகிறேன் என்று நினைக்கக்கூடாது. ஆக, அது தொடர்ந்து கொண்டே வருவது; அதை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது.

என்னைப் பற்றி சொல்லாதவர்கள் உண்டா? என்னைப் பற்றி விமர்சிக்காதவர்கள் உண்டா? ஆனால், அப்படி விமர்சித்தவர்கள், என்னைப்பற்றி குறை சொன்னவர்கள் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதுபற்றி உங்களுக்குத் தெரியும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், எதையாவது சொல்லி, எப்படியாவது கலகத்தை ஏற்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தி இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று சிலர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, இந்தக் கழகம் அழிந்ததாக வரலாறு கிடையாது.

இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் எப்படிப்பட்ட ஊழலிலே சிக்கியிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும்.
எந்த அமைச்சருக்கும் பட்டம் கிடையாது. ஆனால், உங்கள் மாவட்ட அமைச்சருக்கு ‘குட்கா புகழ்’ என்ற ஒரு பட்டமே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் துறை மக்கள் நல்வாழ்வுத் துறை. மக்கள் நல்வாழ்வுத் துறை என்றால் என்ன? மக்களை நல் வாழ்வுபடுத்துகிற துறைதான், மக்கள் நல்வாழ்வுத் துறை.
ஆனால், மக்களை பல கொடுமைகளுக்கு ஆளாக்கக்கூடிய துறையாக மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணம், டெங்கு காய்ச்சல், மலேரியா. அதைக்கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில், இந்த ஆட்சி இருக்கிறது. தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

“ஊழல் அரசின் எந்த அமைச்சருடன் தொடர்பு வைத்திருக்கிறது அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ்?”- மு.க.ஸ்டாலின் பேச்சு!


அதைவிட கொடுமை என்னவென்றால், குட்கா என்பது ஒரு மோசமான பொருள் என்பது உங்களுக்குத் தெரியும். அதை உபயோகப்படுத்தக் கூடியவர்கள் யாராக இருந்தாலும், கொடிய நோய்க்கு ஆளாகக் கூடிய ஒரு சூழல் வரும். அதனால்தான், மத்திய அரசும், மாநில அரசும் குட்காவிற்குத் தடை போட்டிருக்கிறது. அதை விற்பனை செய்யக்கூடாது என்று.

ஆனால், இன்றைக்கு எங்கே பார்த்தாலும், வெற்றிலைப் பாக்குக் கடைகளிலும், பெட்டிக்கடைகளிலும், தேநீர்க் கடைகளிலும், நடைபாதைகளிலும், கல்லூரிகளின் முன்பும், பள்ளிக்கூடங்களின் முன்பும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, அந்தப் பொருளை பயன்படுத்தினால், தீர்க்க முடியாத நோயாக இருக்கக்கூடிய கேன்சர் என்கிற புற்றுநோய் வரும் என்று எல்லோருக்கும் தெரியும். அந்தப் பவுடர் இன்றைக்கு விற்கப்படுகிறது. அரசாங்கத்தினுடைய அனுமதியோடு விற்கப்படுகிறது. அனுமதி என்றால், அபீசியலாக அல்ல; மாமூல் வாங்கிக் கொண்டு விற்க அனுமதி கொடுக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறதே தவிர, வேறு கிடையாது. உங்களுக்குத் தெரியும், மிகப்பெரிய காண்ட்ராக்ட்காரர் ஈரோட்டில் அசோக்குமார் என்ற ஒருவர், அவருடைய பேக்டரியில், அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் என்ற ஒரு நிறுவனத்தில் அண்மையில் சோதனை செய்தபொழுது, 450 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்று இருக்கிறது.

அவர் மிகப்பெரிய காண்ட்ராக்ட்காரர்; பெரிய பிரபலமான காண்ட்ராக்ட்காரர். இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேலே ஒப்பந்தங்களை செய்து தொழில் நடத்தி வருபவர்.
ஆக, அவர் யாரோடு, எந்த அமைச்சரோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்ற செய்தி விரைவில் வெளிவரப்போகிறது. எனக்குத் தெரியும்; ஆனால், இப்போதே நான் சொல்லிவிட்டால், அது பாதகமாகக் கூட முடியும். ஆக, அந்தச் செய்தி மிக விரைவில் வெளிவரப் போகிறது.

ஆகவே, நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, இப்படிப்பட்ட நிலையில்தான், இன்றைக்குத் தமிழ்நாட்டிலே ஒரு அக்கிரமமான, அநியாயமான ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, மக்களை வாட்டி வதைக்கக்கூடிய ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சிக்கு மிக விரைவில் ஒரு முடிவு கட்டக்கூடிய ஒரு சூழ்நிலை விரைவில் வரப் போகிறது.
ஏதோ அண்மையில் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருக்கலாம். எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது தொகுதி மக்களுக்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும் புரியும். நாம் அதைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை.

எப்படி நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளில் களத்தில் நின்று, 39 இடங்களில் வெற்றி பெற்ற ஒரு கட்சிதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணி என்பது எல்லோருக்கும் தெரியும்.

எனவே, பொதுத் தேர்தல் வருகிறபோது, அதேபோன்ற வெற்றி நிச்சயம் வரப்போகிறது. அப்படி வரப்போகின்ற நேரத்தில், நாட்டு மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வருவது மட்டுமல்ல, நாட்டையே குட்டிச்சுவராக்கி இருக்கக்கூடிய ‘கரப்சன் - கமிசன் - கலெக்சன்’ என்ற நிலையில், ஆட்சி நடத்தியிருக்கக்கூடிய இவர்களையெல்லாம் மக்களுக்கு அடையாளம் காட்ட, அப்படிப்பட்டவர்கள் மீது முறையாக உரிய நடடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்ற உறுதியை இன்றைக்குச் சொல்கிறேன்” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories