
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு விரோதமான பலவற்றை செய்து வருகிறது. மேலும் முன்னேறி வரும் இந்தியாவை, மீண்டும் பின்னோக்கி கொண்டு செல்லும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதற்கு, பல முற்போக்காக்கான கட்சிகளும் தடுப்பு சுவராக இருந்து வருகிறது. மக்கள் மீது வெறுப்பை கட்டவிழ்க்கும் RSS சித்தாந்தத்தை பாஜகபுகுத்த முனைப்பு காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற ஒன்றிய அரசு சார்பாக நடைபெற்ற விழாவில், மாணவர்களை RSS பாடலை பாட வைத்துள்ளது தெற்கு இரயில்வே. அதாவது நேற்று (நவ.08) வாரணாசியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக, நாடு முழுவதும் 4 வந்தே பாரத் இரயில் சேவைகளைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அந்த 4 இரயில்களில் ஒன்று, கேரள மாநிலம் எர்ணாகுளம் சவுத் இரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது எர்ணாகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஒன்றிய அமைச்சர்கள் சுரேஷ்கோபி, ஜோசப் குரியன், கேரள அமைச்சர் பி.ராஜிவ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அந்த சமயத்தில் எர்ணாகுளத்திலிருந்து தொடங்கப்பட்ட வந்தே பாரத் இரயிலுக்குள் இருந்த மாணவர்கள், RSS அமைப்பின் பாடலான 'பரம பவித்ர மதாமி மண்ணில் பாரதாம்பயே பூஜிக்கான்' என்ற மலையாளப் பாடலைப் பாடினார்கள்.
இதுகுறித்த வீடியோவை தெற்கு இரயில்வே தங்களது இணையதளத்தில் வெளியிட்டு பெருமிதம் தெரிவித்திருந்தது. ஒரு அரசு விழாவில் தேசிய கீதமோ, அல்லது அந்த மாநில பாடலோ பாடுவதற்கு பதிலாக, இந்துத்வ அமைப்பின் பாடலை பாடியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
டேராடூனில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று (நவ.09) நடைபெறும் நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அம்மாநில தனியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதற்கு கண்டனம் குவிந்து வரும் நிலையில், தெற்கு இரயில்வேயின் இந்த செயலுக்கும் கண்டனம் குவிந்து வருகிறது.






