ஜம்மு - காஷ்மீரில் அமைந்திருக்கும் பஹல்காமிற்கு சுற்றுலா சென்றிருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த ஏப்.22-ம் தேதி இராணுவ உடையில் இருந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக பலகட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வந்தது. மேலும் பயங்கரவாதிகள் முகாம் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக இந்திய இராணுவம் தெரிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானும் திடீரென இந்திய எல்லை மீது தாக்குதல் நடத்தியது.
எனினும் பாகிஸ்தானின் தாக்குதலை இந்திய இராணுவம் முறியடித்து பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதோடு பாகிஸ்தானின் ராவல்பிண்டி, கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இப்படியாக தொடர்ந்து இரு நாடுகளும் கடந்த 4 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது.
இதன் காரணமாக இந்த தாக்குதல் போராக உருப்பெறுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், தற்போது நடத்தப்படும் இந்த தாக்குதலை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து விக்ரம் மிஸ்ரி அளித்த விளக்கத்தில், "பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர் இந்திய தரப்பை மாலை 3.35 மணிக்கு அழைத்து பேசியதை தொடர்ந்து தாக்குதலை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது. இனி தரை, ஆகாயம், நீர் என எவ்வித வழியாகவும் எந்த தாக்குதலும் நடத்தப்படாது. இந்த முடிவு இரு நாட்டு இராணுவ தரப்பில் எடுக்கப்பட்ட முடிவு.
வரும் மே 12-ம் தேதி இரு நாட்டு தளபதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுடனுடனான ஆலோசனைக்கு பிறகு, மாலை 5 மணி அளவில் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் நாட்டின் தலையீடும் இல்லை ." என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் இந்த கருத்தால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. ஏனெனில் இந்தியா சார்பிலும், பாகிஸ்தான் சார்பிலும் தாக்குதல் நிறுத்தம் அறிவிப்பு வெளியாகும் முன்பே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
மேலும் அவர் வெளியிட்ட அறிவிப்பில், "அமேரிக்கா நடத்திய நீண்ட கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உடனடியாக தாக்குதலை நிறுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுவிட்டது. அறிவார்ந்த மற்றும் புத்திசாலித்தனமான இந்த முடிவை எடுத்த இரு நாடுகளுக்கும் எனது வாழ்த்துகள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த தாக்குதல் நிறுத்த விவகார்த்தில் எந்தவொரு மூன்றாம் நாட்டின் தலையீடும் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.