அமெரிக்காவுடன் நடந்து வரும் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது ஒன்றிய அரசாங்கம் கட்டணங்களைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் வட சென்னை திமுக மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, ஒன்றிய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும், கட்டணங்களை குறைப்பதன்மூலம் பல துறைகளில் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், வேலை இழப்புகளுக்கும் வழி வகுக்கும் என சுட்டிக்காட்டிய அவர், இழப்புகளை தடுக்க அரசாங்கத்திடம் உள்ள திட்டங்கள் என்ன என்றும் உள்ளூர் உற்பத்தித் துறையில் இத்தகைய கட்டணக் குறைப்புகளின் நீண்டகால பாதிப்பு குறித்து இந்தியத் தொழில்துறை பிரதிநிதிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறதா? என்றும் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்குக!
பதினைந்தாவது நிதி ஆணையம் கிராம பஞ்சாயத்துகளுக்கு பரிந்துரைத்துள்ள நிதி விவரங்கள் குறித்து திமுக மக்களவை கொறடாவும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தமிழ்நாட்டில் உள்ளூர் சுயாட்சி அமைப்புகளுக்கு (LSGs) வழங்கப்படும் மொத்த நிதி எவ்வளவு?. GST மற்றும் பிற வரிகள் காரணமாக உள்ளூர் அமைப்புகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி அல்லது மானியங்களை வழங்க ஒன்றிய அரசு உருவாக்கியிருக்கும் திட்டங்கள் யாவை? எனவும் அவர் கேட்டுள்ளார்.
தருமபுரி விவசாயிகளுக்கு ஸ்பைஸ் திட்டத்தில் நிதி!
புதுமையான முயற்சிகளை ஊக்குவிக்கும் கூட்டு ஏற்றுமதி மேம்பாட்டிற்கான ஸ்பைஸ் திட்டத்தின் (SPICE SCHEME) மூலம் தர்மபுரி விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் அ. மணி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில், ஸ்பைஸ் திட்டத்தால் இதுவரை பயனடைந்த தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOகள்) எண்ணிக்கை, பொருட்களின் தரம், உற்பத்தித்திறன் மற்றும் ஏற்றுமதி திறனை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாட்டில் ஸ்பைஸ் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி, தொழில்நுட்பம் அல்லது உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விவரங்களையும் தெரிவிக்குமாறு அவர் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடன் கேள்வி எழுப்பியுள்ளார்.