இந்தியா

”மின்சார வாகனங்களுக்காக சார்ஜிங் வசதி அமைப்பது கட்டாயம்” : திமுக MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!

இனிமேல் வீடு மற்றும் வர்த்தகக் கட்டங்களில் மின்சார வாகனங்களுக்காக சார்ஜிங் வசதி அமைப்பது கட்டாயம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

”மின்சார வாகனங்களுக்காக சார்ஜிங் வசதி அமைப்பது கட்டாயம்” : திமுக MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய மின்சாரப் போக்குவரத்து திட்டத்தின் தற்போதைய நிலை, மின்சார வாகனப் பயன்பாட்டுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் எந்தளவுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஒன்றிய கனரகத் தொழில்துறை இணையமைச்சர் பூபதிராஜு சீனிவாச வர்மா அளித்த பதில் வருமாறு:-

பெட்ரோலிய எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதிகளை ஊக்குவிக்கவும் வழிவகைசெய்யும் வகையிலும்; மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கவும் தேசிய மின்சாரப் போக்குவரத்து திட்டம் - 2020 அமல்படுத்தப்பட்டது. 2019 வரையிலான முதற்கட்ட திட்டத்திற்கு 895 கோடி ரூபாயும்; அதற்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 11,500 கோடி ரூபாயும் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.

இதுதவிர, உள்நாட்டிலேயே வாகன உதிரிபாகங்களை தயாரிப்பதை ஊக்கப்படுத்த மானியம் மற்றும் சலுகைகளுடன் கூடிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கு 25,938 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மின்சார வாகங்களுக்குத் தேவையான பேட்டரிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் தனியாக 18,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

மின்சாரத்தால் இயங்கும் டிரக், பஸ், வேன், கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும், அவற்றுக்குத் தேவையான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கவும் 10,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மின்சாரத்தால் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த 2024 ம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்புத்திட்டம் ஒன்று அமலானது. இந்தத் திட்டம் தொடர்பான சலுகைகளுக்காக 4,150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகன்ப் பயன்பாட்டை அதிகப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு சாலை வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது; அவற்றுக்கு பச்சை வண்ணத்தில் பிரத்யேக நம்பர் பிளேட் வழங்கப்பட்டு, ஏனைய பெர்மிட் உள்ளிட்டவற்றிலிருந்து விலக்கு அளிப்பது போன்ற சலுகைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைக்க வசதியாக எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு 800 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.இதன் மூலம் அந்நிறுவனங்களுக்குச் சொந்தமான 7,432 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

சிறப்புத் திட்ட நிதி மட்டுமின்றி, கனரக அமைச்சகமும் பிரத்யேக நிதி அளித்ததன் காரணமாக இதுவரை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் 20,035 இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.இதில் ஜனவரி மாதம் வரை 4,774 மையங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இப்படி அமைக்கப்படும் சார்ஜிங் மையங்களுக்கு மின்துறை அமைச்சகத்தின் மூலமாகவும் பல சலுகைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது. அதன்படி இந்த மையங்களை அமைக்க பிரத்யேக உரிமங்கள் பெறத் தேவையில்லை. மின் இணைப்புகளை துரிதமாக வழங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மையங்களை அமைத்தவுடன் இவி யாத்ரா போர்ட்டலில் அதன் விபரங்கள் இணைக்கப்படுவதால், நாடு முழுக்க எந்தெந்த இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன என்ற விபரத்தை இந்தப் போர்ட்டலின் மூலம் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

வரும் காலங்களில் கட்டப்படும் தனியார் மற்றும் வர்த்தகக் கட்டடங்களில் சார்ஜிங் வசதியையும் கண்டிப்பாக அமைக்க வேண்டும் என்ற விதியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories