உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது பாகத் என்ற நகரம். இங்கு 18 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தலித் சமூகத்தை சேர்ந்த இவர், குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்ல எண்ணியுள்ளார். அதன்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இவரும், இவரது சகோதரரும் அதே பகுதியில் உள்ள எண்ணெய் ஆலை ஒன்றுக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.
அங்கே வேலை செய்து கொண்டிருந்தபோது, இந்த பெண்ணை அவரது முதலாளி தவறான எண்ணத்தில் பார்த்துள்ளார். இந்த சூழலில் கடந்த 27.12.2023 அன்று வழக்கம்போல் இருவரும் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது எண்ணெய் ஆலை உரிமையாளர் உட்பட 3 பேர் இந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். இதனால் எரிச்சலடைந்த அந்த பெண், இதனை தவிர்த்துள்ளார்.
பெண்ணின் செயலால் கோபமடைந்த அவர்கள், அந்த பெண்ணின் சமூகத்தை குறிப்பிட்டு திட்டி அடித்துள்ளனர். மேலும் அங்கே கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய் கொப்பரையில் அவரை தள்ளி விட்டுள்ளனர். இதில் பெண்ணின் உடலில் எண்ணெய் பட்டு துடிதுடித்து கதறியுள்ளார். பெண்ணின் கூச்சலை கேட்டு ஓடி வந்த சகோதரர் உட்பட சக பணியாளர்கள், அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தற்போது அந்த பெண் டெல்லியில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் அவர்கள் மீது கொலை, தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆலை உரிமையாளர் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் பாதி பாகங்களும், கால்களும் தீக்காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.