கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டத்தில் உள்ள கலகி என்ற பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரின் பெற்றோர் வேலை காரணமாக முன்பை சென்றுள்ளனர்.
இதனால் சில நாட்களாக சிறுமி தனது உறவினர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அவர் பள்ளிக்கு நடந்து சென்றபோது அங்கிருந்த 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அந்த சிறுமியை கத்தியை காட்டி மறித்துள்ளனர்.
பின்னர் அந்த சிறுமியை யாரும் இல்லா இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்கள் அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு நிற்காத அவர்கள் இந்த கொடூர செயலை வீடியோவாகவும் பதிவு செய்து இதனை வெளியே சொல்லக்கூடாது என அந்த சிறுமியை மிரட்டியுள்ளனர்.
அதன் பின்னர் அங்கிருந்து சிறுமி தனது உறவினரின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரின் நிலையை கண்டு அவரிடம் விசாரணை நடத்தியபோது இந்த கொடூர சம்பவம் வெளியே தெரிந்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்களை தேடி வருகின்றனர் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.