டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அஸ்கார் அலி என்பவர் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இதற்கு அஸ்கார் அலி அனுமதி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் அவருக்குக் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றும் போது உயிரிழந்தார்.
இதையடுத்து அஸ்கார் அலி இறப்பிற்கு, மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணம் என அவரது உறவினர்கள் புகார் எழுப்பினர். பின்னர் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். மேலும் இம்மாதம் ஒன்றாம் தேதி 4 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு மருத்துவமனையை ஆய்வு செய்தது.
அப்போது, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் தடை செய்யப்பட்ட மருந்துகள், காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்பட்டம் உறுதியானது. இதையடுத்து இது தொடர்பான மருத்துவ குழுவினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலிஸார் விசாரணையில், இந்த தனியார் மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து மருத்துவர்கள் அலட்சியத்தால் 7 நோயாளிகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தனியார் மருத்துவமனையின் உரிமையாளர்கள் மருத்துவர் நீரஜ் அகர்வால், அவரது மனைவி பூஜா அகர்வால், மருத்துவர்கள் ஜஸ்பிரீத் சிங் உள்ளிட்ட4 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.