இந்தியா

TADA : இந்தியாவின் கொடூர சட்டம்.. பிடுங்கப்பட்ட அடிப்படை உரிமைகள்.. தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன ?

TADA : இந்தியாவின் கொடூர சட்டம்.. பிடுங்கப்பட்ட அடிப்படை உரிமைகள்.. தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் இணைய ஊடக நிறுவனங்களில் ஒன்றுதான் NEWSCLICK. டெல்லியில் செயல்பட்டு வரும் இந்த ஊடகமானது, ஒன்றிய பாஜக அரசின் தில்லாலங்கடி வேலைகளை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டி வருகிறது. இதனால் கடுப்பான ஒன்றிய பாஜக அரசு, அந்த நிறுவனத்தின் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டமான UAPA சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்நிறுவனத்தின் ஆசிரியரை கைது செய்துள்ளது.

UAPA சட்டம் என்பது நாட்டுக்கு எதிராக செய்லபடுபவர்கள் மீது பதியப்படக்கூடிய ஒரு பயங்கர சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்களுக்கு ஜாமீன் கூட அவ்வளவு எளிதில் கிடைக்காது. இது போன்ற ஒரு சட்டத்தை பத்திரிகையாளர்கள் மீது ஒன்றிய பாஜக அரசு எளிதாக பயன்படுத்தி வருகிறது. இதே போல் நாடு முழுவதும் கடந்த 2010 முதல் தற்போது வரை சுமார் 16 பத்திரிகையாளர்கள் மீது இந்த வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த UAPA சட்டம் போன்று இந்தியாவில் பயங்கரமான சில சட்டங்கள் இருந்தது. அதில் குறிப்பாக மிசா, தடா, பொடா உள்ளிட்ட பல சட்டங்கள் அடங்கும். அந்த சட்டங்கள் அனைத்தும் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொடர் எதிர்ப்பு குரலால் ரத்து செய்யப்பட்டது. அது என்ன என்பதை ஒவ்வொன்றாக காணலாம்.

TADA : இந்தியாவின் கொடூர சட்டம்.. பிடுங்கப்பட்ட அடிப்படை உரிமைகள்.. தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன ?

முதலாவது :

தடா (TADA ACT) - பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் :

இந்தியாவில் ‘தடா’ சட்டம் கடந்த 1985-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது பஞ்சாபில் காலிஸ்தான் என்ற ஒரு அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வந்தது. அங்கிருக்கும் சீக்கியர்கள் தங்களுக்கு என்று தனிநாடு (காலிஸ்தான்) வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த கோரிக்கை போராட்டமாக மாறி, போராட்டம் வன்முறையாக மாறியது. தொடர்ந்து பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. இதனை கட்டுப்படுத்தவே அப்போது இருந்த ஒன்றிய அரசால் ‘தடா’ சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது கொண்டு வரப்பட்ட இந்த சட்டம், 2 ஆண்டுகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது பல்வேறு காரணமாக செயல்படுத்தப்படவில்லை.

இதனால் இந்த சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தது. யார் ஒருவர் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறாரோ அவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர். அப்படி ஒருவர் இந்த சட்டத்தின்படி கைது செய்யப்பட்டால், அவர் காவல் அலுவலரின் முன்னிலையிலேயே தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது. காவல்துறை அதிகாரியின் வாக்குமூலமே சாட்சியாக நீதிமன்றம் எடுத்துகொள்ளும்.

TADA : இந்தியாவின் கொடூர சட்டம்.. பிடுங்கப்பட்ட அடிப்படை உரிமைகள்.. தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன ?

மேலும் இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டவரை பொது நீதிமன்றம் விசாரிக்காது. மாறாக தடா சட்டத்திற்கு என்று உருவாக்கப்பட்ட தனி நீதிமன்றமான 'தடா' நீதிமன்றமே விசாரிக்கும். எடுத்துக்காட்டாக கடந்த 1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடித்தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை இந்த நீதிமன்றம்தான் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. இப்படி இந்த சட்டமானது மக்களுக்கு எதிராகவே இருந்து வந்தது. நாட்டின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டம், அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

தொடர்ந்து இந்த சட்டத்தை பல அதிகாரிகள் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் இந்த சட்டமானது மனித உரிமை மீறலாக இருப்பதாகவும் கண்டனங்கள் எழுந்தது. ஏனெனில், இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் இருக்கிறார்களோ அவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படும். குறிப்பாக அரசுக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும், பிரிவினைவாதம் பேசுபவர்களாகவும் யாரேனும் இருந்தால் அவர்கள் மீது அரசு இந்த சட்டத்தை பிரயோகிக்கும்.

மேலும் இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரை முறையான குற்றச்சாட்டுகளோ அல்லது விசாரணையோ இல்லாமல் ஓராண்டு வரை காவலில் வைக்கலாம்; அதில் 60 நாட்கள் வரை போலீஸ் காவலில் வைக்க முடியும். அதோடு காவலதிகாரிகள், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவோ, நீதிபதிகளுக்கு விளக்கம் அளிக்கவோ தேவையில்லை. சட்டம் 7A இன் கீழ், இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய காவல்துறை அதிகாரிகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது.

TADA : இந்தியாவின் கொடூர சட்டம்.. பிடுங்கப்பட்ட அடிப்படை உரிமைகள்.. தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன ?

இவ்வாறு மக்களுக்கு எதிராக அதிக விதிகளை கொண்ட இந்த சட்டம், குற்றச்செயல்களில் ஈடுபடாத அப்பாவி மக்கள் மீதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. போலீசார், சந்தேகத்தின் பெயரில் அப்பாவி நபர்களை கைது செய்து சித்திரவதை செய்து வந்தனர். பெண்கள், சிறார்கள் உட்பட பலரும் இந்த கொடுமைகளுக்கு உள்ளானர். இதற்காக இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அப்போதைய எதிர்க்கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனிடையே தடா சட்டம் 1987-ல் திருத்தம் செய்யப்பட்டது. அப்படி இருந்தும் இது பலவித எதிர்ப்புகளை பொதுமக்கள் மத்தியில் கிளப்பியது. இதனால் 1995-ல் இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. எனினும் இந்த சட்டத்தில் இந்தியா முழுவதும் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் 73 ஆயிரம் பேரின் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீதுள்ள வழக்கு நீக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்.

எனினும் இதுபோன்ற சட்டங்கள் தற்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது. தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும், நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீதும் தடா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால் அதனை காவல் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தி பல அப்பாவி மக்களின் வாழ்க்கையை சிதைத்துள்ளனர்.

TADA : இந்தியாவின் கொடூர சட்டம்.. பிடுங்கப்பட்ட அடிப்படை உரிமைகள்.. தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன ?

இதே போல் உருவாக்கப்பட்ட சட்டம் தான் உபா (UAPA) சட்டம். இந்திய இறையாண்மைக்கு எதிராக யார் ஒருவர் செயல்படுகிறாரோ அவர்கள் மீது இந்த சட்டம் பாயும். ஆனால் இந்த சட்டமானது, இந்தியாவுக்கு அல்ல, இந்திய அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது போடப்படுகிறது. இந்திய அரசு செய்யும் குற்றத்தை, செயல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தும் பத்திரிகை செய்தி நிறுவனம் மீது பயன்படுத்தப்படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் இருந்த நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மீதும் இந்த சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சட்டமானது குண்டர் சட்டத்திற்கும் மேல் ஆபத்தானது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லியின் பிரபல இணையதள பத்திரிகையின் 2 நிறுவனர்களையும் இந்த சட்டத்தின் கீழ் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தொடர்ந்து UAPA சட்டத்தின் நல்லவை தீயவை என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Related Stories

Related Stories