இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரலாறு என்ன ? சாதிவாரி கணக்கெடுப்பால் இந்தியாவில் நடந்த மாற்றம் என்ன ?

மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரலாறு என்ன ? சாதிவாரி கணக்கெடுப்பால் இந்தியாவில் நடந்த மாற்றம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிகார் மாநில அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் தரவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவில் இத்தரவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்ட முதல் சாதிவாரி கணக்கெடுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரலாறு :

உலக நாடுகளில் பல்வேறு தரவுகள் மக்களிடமிருந்து சேகரித்து, ஆராயப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பாக வெளியிடப்பட்டு வருகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்கென ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது.

உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பண்டைய எகிப்தில் நடத்தப்பட்டிருப்பதாக இதுவரை கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன கி.மு 570 காலகட்டத்தில் அஹ்மோஸ் II என்ற எகிப்து பாரோ மன்னரின் காலத்தில் இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

கி.மு 885 ஆண்டு இசுரேலிய மன்னர் டேவிட்டின் காலத்தில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாக யூதர்களின் தோரா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல கிரேக்க நகரங்கள் பலவற்றிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததாக புராணக் கதைகள் பல தெரிவிக்கின்றன.

இது தவிர உலககப்புகழ்பெற்ற ரோமக் குடியரசில், ரோம் நகரில் சீரான இடைவெளியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. கி.மு 6-ம் நூற்றாண்டில் ரோமானிய அரசர் சர்வியஸ் டுல்லியஸாவின் ஆட்சியில் ரோம் நகரில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,அங்கு 80 ஆயிரம் மக்கள் வசித்ததாக குறிப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் ரோம குடியரசு பேரரசாக மாறிய காலக்கட்டத்தில் அந்த ஆட்சிக்குள் இருந்த பிராந்தியங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிற்கால ரோமப்பேரரசில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றிருக்கிறது..

சீனாவில் ஹான் வம்ச ஆட்சியின்போது நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பேடே உலகின் பழமையான பாதுகாக்கப்பட்ட முதல் கணக்கெடுப்பாகும். கி.பி 2-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பே துல்லியமான முதல் கணக்கெடுப்பாக கருதப்படுகிறது. இதன்படி நாட்டில், 12,366,470 குடும்பங்கள் இருப்பதாவும் மொத்தம் 57,671,400 மக்கள் இந்த பகுதியில் வசித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக மௌரியப் பேரரசு சார்பில் அதன் மாகாணங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதை அக்காலத்திய புத்தகங்கள் உறுதி செய்துள்ளன.

பண்டைய காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த இத்தகைய மக்கள் தொகை கணக்கெடுப்புகள், நாட்டில் போர் செய்யும் வீரர்களின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கும், வரிகள் குறித்த விவரங்கள் அறியவுமே நடத்தப்பட்டிருக்கிறது.

பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகள் அங்கு வாழும் மக்களின் பொருளாதார நிலைகளையும் கருத்தில் எடுத்துக்கொண்டன. இதன் மூலம் அந்த அரசுகளின் வரிவிதிப்பில் மாற்றங்களை செய்துகொள்ள முடிந்தது. மேலும், அடித்தட்டு மக்களுக்கான சில திட்டங்களை கொண்டு வரவும் பொருளாதார ரீதியிலானஇந்த கணக்கெடுப்புகள் உதவின.

roman census drawings
roman census drawings

நவீன கால மக்கள் தொகை கணக்கெடுப்பு :

நவீன காலத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1801-ம் ஆண்டில் நடைபெற்றது. முதலில் இந்த கணக்கெடுப்புக்கு அரசு மற்றும் பொதுமக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டாலும், தாமஸ் மால்தஸ் என்பவரின் 'மக்கள்தொகையின் கொள்கை' என்ற புத்தகம் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தேவையை அரசுக்கு தெரியப்படுத்தியது.

தாமஸ் மால்தசின் புத்தகம் நாட்டின் வறுமை, உணவு தேவை, பொருளாதாரம் என எல்லாமும் மக்கள் தொகையை வைத்தே தீர்மானிக்கப்படும் என்பதை ஆணித்தரமாக நிறுவியது. பிரிட்டன் நாடாளுமன்றம் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொள்ள, இந்தப் புத்தகம் பெரும் காரணமாக விளங்கியது.

பிரிட்டனின் பகுதிகளான இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் முதலில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மக்களின் தொழில்கள், அவர்களின் வருமானம் போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் இந்தக் கணக்கெடுப்புகளை நடத்தினர். இதன் வெற்றி காரணமாக பின்னர் இம்முற ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்துக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.

ஐக்கிய அமெரிக்காவில் 1790-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அடிமைகள், வெள்ளை நிறத்தவர், கறுப்பினர்த்தவர் என தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்டனர். அதன்பின்னர் 1860- களிலில் இருந்து சீனர்கள், இந்தியர்கள் என இனரீதியான கணக்கெடுப்பும் அங்கு நடத்தப்பட்டு வருகிறது.

census in uk
census in uk

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு :

இந்தியாவில் நவீன காலத்தின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்டது. 1814-15 ஆம் ஆண்டில் பம்பாய் தீவில் ஆங்கிலேய அதிகாரிகளால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிறகு 1821-ம் ஆண்டு கல்கத்தாவிலும், 1822-ல் மெட்ராஸிலும், 1855-ல் பஞ்சாபிலும் சிறிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் நாடு தழுவிய அளவில் முதன்முறையாக 1872ஆம் ஆண்டு நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த 11 மாகாணங்களிலும், மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சமஸ்தானங்களிலும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் சாதி, மதம், தொழில் மற்றும் வயது போன்றவை தனித்தனியாக ஆவணப்படுத்தப்பட்டன. இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் சாதி வாரி கணக்கெடுப்பும் இதுவேயாகும். அதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு வரை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் 1931ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆறாவது மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்தக் கணக்கெடுப்பில் கல்வியறிவு, வாழ்வாதாரம் போன்றவையும் ஆவணப்படுத்தப்பட்டன. அதே போல இந்தியாவில் இறுதியாக வெளியிடப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பும் இதுதான். பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் சாதி ரீதியிலான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள், இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின சமூகத்தினர் அதிக அளவில் இருந்தாலும் அவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதை சாதிவாரி கணக்கெடுப்பு அம்பலப்படுத்தியது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரலாறு என்ன ? சாதிவாரி கணக்கெடுப்பால் இந்தியாவில் நடந்த மாற்றம் என்ன ?

விளைவாக, பின்தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழ்நாட்டில் 1921 ஆம் ஆண்டு முதன்முறையாக நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு 44% இடஒதுக்கீட்டை வழங்கியதற்கும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பே காரணமாக இருந்தது, அம்பேத்கரின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் சமூகத்தினருக்கு தனித் தொகுதிகளும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாக வைத்தே வழங்கப்பட்டன.

சுதந்திரத்துக்கு பிறகும் இடஒதுக்கீடு குறித்த பல்வேறு தரவுகளுக்கும் அடிப்படையாக, 1931ம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பே இருக்கிறது. ஆனால் இந்த கணக்கெடுப்பு நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டதால் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிடவேண்டும் என பல்வேறு தரப்பினர் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நடத்தப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பின் தரவுகளும், பிறகு வந்த பாஜக ஆட்சியில் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து ஒன்றிய அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுத்து வந்த நிலையில், தற்போது பிகார் அரசு வெளியிட்டிருக்கும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள், அந்த விவாதத்தை மீண்டும் உரத்த குரலோடு எழுப்பியுள்ளது.

Related Stories

Related Stories