
ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறை இந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டில் ஒன்றிய அரசு தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், டெல்லியின் முக்கிய இடங்களை அழகு படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த பல்வேறு ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்துவருகிறது. அதன் ஒருபகுதியாக வெளிநாட்டு விருந்தினர்களுக்கு சிறந்த நட்சத்திர விடுதியில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், உணவு வகையிலும் அனைவரையும் அசத்த ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக விருந்தினர்களுக்கு வழங்கப்படும் உணர்வு பதார்த்தங்கள் அனைத்தும் தங்கம் மற்றும் வெள்ளி தட்டுகளிலும், கிண்ணங்களிலும் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாட்டின் சிறப்பான வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதியை சேர்ந்த உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சிறுதானியங்களால் செய்யப்பட்ட இட்லி, புலாவ், இந்தியாவின் ஸ்பெஷல் சாட்களான சமோசா, ரசகுல்லா, பணியாரம், பானிபூரி என சுமார் 500 இந்தியாவின் ஸ்பெஷல் உணவுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அசைவ உணவுகள் ஏதும் விருந்தினர்களுக்கு வழங்கப்படாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.








