இந்தியா

பாஜகவுக்கு எதிரான சமூகரீதியான மாற்றம்.. கர்நாடக களத்தில் வெற்றி பெறும் திராவிட அரசியல்: சிறப்புக் கட்டுரை

மதவெறுப்பில் மக்களை துண்டாடும் பா.ஜ.க ஒரு பக்கம். பா.ஜ.க.வுக்கு எதிரான சமூகரீதியான மாற்றத்தை உள்ளார்ந்து கொண்டு வந்து ஜனநாயகத்தை முன் வைக்கும் காங்கிரஸ் கட்சி மறுபக்கம்.

பாஜகவுக்கு எதிரான சமூகரீதியான மாற்றம்.. கர்நாடக களத்தில் வெற்றி பெறும் திராவிட அரசியல்: சிறப்புக் கட்டுரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

தென்னிந்தியா எப்போதும் பா.ஜ.க-வுக்கு கசப்புகளை வழங்கும் பகுதியாகவே இருந்திருக்கிறது. அதற்கு காரணங்களாக இனவரைவியல் ஆரியம் vs திராவிடம் தொடங்கி, பா.ஜ.க-வின் வெறுப்பு அரசியல் மீதான மக்களின் வெறுப்பு என பல காரணங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி பா.ஜ.க-வால் ஆட்சியை பிடிக்க முடிந்த இடமாக தென்னிந்தியாவில் இருக்கும் ஒரே மாநிலம், கர்நாடகாதான். அங்கு நாளை சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் இந்திய துணைக்கண்டமே உற்று நோக்கும் களமாக அது மாறியிருக்கிறது.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு தொடங்கி காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய பல பிரச்சினைகளின் காரணமாக அது மீண்டெழுமா என்கிற கேள்வி பல வருடங்களுக்கு நீடித்தது. மிக முக்கியமாக ராகுல் காந்தி ஒரு பிரதான தலைவராகி விடக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடியே நேரடியாக ராகுல் காந்தியை கொச்சையாக பேசும் முறை பல தேர்தல் பிரசாரங்களில் பா.ஜ.க உத்தியாக கடந்த வருடங்களில் பார்க்க முடிந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி ஓர் உறுதிமிக்க, ஜனநாயகப்பூர்வமான தலைவராக ராகுல் காந்தி வெளிப்பட்ட களமாக கர்நாடக தேர்தல் களம் இருந்தது.

பாஜகவுக்கு எதிரான சமூகரீதியான மாற்றம்.. கர்நாடக களத்தில் வெற்றி பெறும் திராவிட அரசியல்: சிறப்புக் கட்டுரை

கடந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் தொடங்கி இவ்வருட ஜனவரி மாத முடிவு வரை கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி முன்னெடுத்த பாரத் ஜோதோ யாத்ரா நடைபயணம், இந்தியத் துணைக்கண்டத்தின் மக்களை தன் பக்கம் ஈர்க்க முடியுமென, மோடிக்கு மட்டுமல்லாமல், இந்திய துணைக்கண்டத்துக்கும் தன் கட்சியினருக்குமே கூட ராகுல் காந்தி காட்ட முடிந்த நிகழ்வாகவே அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்பட்டது.

பெருவெற்றி அடைந்த அப்பயணத்தை தொடங்குகையில், ‘இந்தியாவில் மாற்று அரசியலுக்கான வெளி இருப்பதை உறுதிபடுத்தவே இப்பயணம்’ என அவர் தொடங்கினார். ஆனால் அப்பயணம் வாக்குகளாக மாறுமா என்கிற சந்தேகத்தை அரசியல் வல்லுநர்கள் எழுப்பாமல் இல்லை. கர்நாடக தேர்தலுக்கு முன் மிக முக்கியமான மாற்றத்தை கட்சி ரீதியாக காங்கிரஸ் அடைந்தது. அதற்கு முக்கியமான காரணமாக அதன் புதிய தலைமை, மல்லிகார்ஜுன கார்கே இருந்தார்.

பாஜகவுக்கு எதிரான சமூகரீதியான மாற்றம்.. கர்நாடக களத்தில் வெற்றி பெறும் திராவிட அரசியல்: சிறப்புக் கட்டுரை

வழக்கமாக உயர்சாதி தலைவர்களும் பணம் நிறைந்தவர்களும் தலைவர்களாக இருக்குமிடம் காங்கிரஸ் என்கிற பார்வை, மல்லிகார்ஜுன கார்கே தலைவரானதும் மாறத் தொடங்கியது. பார்ப்பன எதிர்ப்பையும் அம்பேத்கரிய பார்வையையும் கொண்ட தலைவராக பெரிதும் அறியப்பட்ட கார்கே, வெறும் முகமாக மட்டும் காங்கிரஸ் பதவியை வகிக்காமல், மெய்யான மாற்றங்கள் கட்சிக்குள் நடந்தேறின. அவற்றில் பிரதானமானது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு!

மல்லிகார்ஜுன கார்கே தலைமை பதவிக்கு வந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. காங்கிரஸில் பெரியார் இருந்தபோது அவரெழுப்பி, நிறைவேற்றப்படாத கோரிக்கையான பிற்படுத்தப்பட்டோருக்கு கட்சி பதவிகளில் இட ஒதுக்கீடு என்கிற கோரிக்கை, கார்கே தலைவரான பிறகு அக்கட்சியின் திட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான மாற்றம். காங்கிரஸ் கட்சியில் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை அரசியல் தளத்திலும் வலியுறுத்தும் இடத்தை காங்கிரஸ் கட்சி கர்நாடக தேர்தல் களத்தில் அடைந்தது.

பாஜகவுக்கு எதிரான சமூகரீதியான மாற்றம்.. கர்நாடக களத்தில் வெற்றி பெறும் திராவிட அரசியல்: சிறப்புக் கட்டுரை

இட ஒதுக்கீடுக்கான உச்சவரம்பாக 50%-த்தை நிர்ணயித்திருந்த உச்சநீதிமன்ற வரையறை அரசியல் சாசன திருத்தத்தின் உதவியுடன் மாற்றப்படும் என காங்கிரஸ் கட்சி, கர்நாடக தேர்தல் வாக்குறுதியாக அளித்திருக்கிறது. மேலும் மிக முக்கியமான ஓர் உறுதிமொழியையும் அளித்திருந்தது. பஜ்ரங் தளம் என்கிற சங்கப் பரிவார அமைப்பு தடை செய்யப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. கூடவே சமூகநலத்திட்டங்கள் பலவற்றையும் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.

மறுபக்கத்தில் பா.ஜ.க-வின் உத்திகள் யாவும் அரதப்பழசான முறையையே பின்பற்றின. வழக்கம்போல வெறுப்பு பேச்சுகள்தான் பா.ஜ.க-வின் பிரசாரத்தில் தாண்டவமாடின. இஸ்லாமியர் இட ஒதுக்கீடு அகற்றப்படும் என்றார் அமித் ஷா. ‘கேரளா ஸ்டோரி’ என்கிற வெறுப்பு பிரசாரப் படத்தை ஆதரித்து பேசினார் பிரதமர் மோடி. பஜ்ரங் தளத்துக்கு தடை என்கிற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியை தூக்கி பிடித்துக் கொண்டு ‘பா.ஜ.க-வுக்கு ஓட்டு போடும் ஒவ்வொருவரும் வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து ஜெய் பஜ்ரங்பலி என கோஷமிடுங்கள்’ என உத்தரவிட்டார். அதே ‘ஜெய்ஸ்ரீராம்’ மாடல்தான்.

பாஜகவுக்கு எதிரான சமூகரீதியான மாற்றம்.. கர்நாடக களத்தில் வெற்றி பெறும் திராவிட அரசியல்: சிறப்புக் கட்டுரை

எனினும் ஆட்சியிலிருந்தபோது பா.ஜ.க செய்த ஊழல்களையும் மாநிலத்தில் வளர்ச்சியின்மையையும் முன் வைத்து காங்கிரஸ் கட்சி செய்த பிரசாரத்தை எதிர்கொள்ள பா.ஜ.கவால் எதிர்கொள்ள முடியவில்லை. வழக்கமாக தான் விரிக்கும் வெறுப்பு பிரசாரத்துக்கு எதிர்வினை ஆற்ற முயன்று வந்து சிக்குவார்களென காத்திருந்த பா.ஜ.கவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் நேர்ந்தது.

’இலவசம் கொடுக்கிறார்கள், இலவசம் கொடுக்கிறார்கள்’ என சமூகநலத் திட்டங்களையும் கொச்சைப்படுத்தி ஊர் ஊராக கூவிக் கொண்டிருந்த பா.ஜ.க தன் தேர்தல் அறிக்கையில் அரை லிட்டர் பால், வருடத்துக்கு மூன்று எரிவாயு சிலிண்டர் முதலிய இலவசங்களை அள்ளிக் கொடுப்பதாக அறிவித்திருந்தது. ‘இட ஒதுக்கீடு தவறு’ என பேசிவிட்டு, அரிய வகை ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வாங்கும் வெட்கமின்மையை மீண்டும் பா.ஜ.க. வெளிப்படுத்தியிருந்தது.

பாஜகவுக்கு எதிரான சமூகரீதியான மாற்றம்.. கர்நாடக களத்தில் வெற்றி பெறும் திராவிட அரசியல்: சிறப்புக் கட்டுரை

எல்லாவற்றுக்கும் முற்றாக, தேர்தலுக்கு முதல் நாளான இன்று, கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க எல்லா திட்டங்களிலும் 40% கமிஷன் கேட்பதால், மக்கள் மாற்று அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டுமென காண்ட்ராக்டர்கள் சங்கம் அறிக்கையே விடுத்திருக்கிறது. இன்னும் உச்சமாக இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், கர்நாடகா தேர்தலில் உறுதியான வெற்றியை காங்கிரஸ் கட்சி பெறுமெனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

இரு முக்கியமான விஷயங்கள், கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் களம் காணுகின்றன. வழக்கம்போல பேச்சளவில் வாக்குறுதி அள்ளித் தெளித்து மதவெறுப்பில் மக்களை துண்டாடும் பா.ஜ.க ஒரு பக்கம். பா.ஜ.க.வுக்கு எதிரான சமூகரீதியான மாற்றத்தை உள்ளார்ந்து கொண்டு வந்து ஜனநாயகத்தை முன் வைக்கும் காங்கிரஸ் கட்சி மறுபக்கம்.

முடிவு எதுவாகினும் தேர்தல் பிரசாரம் வரையிலுமான கர்நாடக தேர்தல் களத்தில், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நலத் திட்டங்கள் என்கிற திராவிட அரசியல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடதகுந்த விஷயமாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories