உத்தர பிரதேச மாநிலம், லக்னோ - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மேனேஜராக இருந்தவர் சுஷில் குமார். இந்நிலையில் சிலர் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிரக்கைச் சுற்றிவந்துள்ளனர்.
இதனால் இவர்கள் மீது சுஷில் குமாருக்குச் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று உற்றுபார்த்தபோதுதான் அந்த கும்பல் வாகனத்தில் இருந்து டீசல் திருடுவது தெரியவந்தது.
உடனே இவர்களிடம் ஏன் டீசல் திருடுகிறீர்கள் என கேட்டுக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கிச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் குண்டுபாய்ந்து சுஷில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த போலிஸார் சுஷில் குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.